டிசம்பர் 2022க்கான சரக்கு மற்றும் சேவை வரிகளின் வசூல் கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் என்கிற அளவில் இருப்பது நவம்பரிலிருந்து ஒரு மீட்சி ஏற்பட்டிருப்பதை குறிக்கிறது. நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் மூன்று மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது. ஒரு வருடத்துக்கு முன்பு இருந்ததை விட நவம்பர் 2022ன் வருவாய்கள் 10.9 சதவீதம் அதிகமாகதான் இருந்தது. ஆனால் ஜுன் 2021லிருந்து பார்க்கும்போது, அது மிக மந்தமான வளர்ச்சியாக இருந்தது. டிசம்பரின் வசூல், நவம்பரைவிட 2.5 சதவீதம் அதிகமாக இருந்தது. வருடத்துக்கு, 15.2 சதவீதம் உயர்வு ஏற்பட்டிருப்பதை அது பிரதிபலித்தது. ஜூலை 2017ல் ஜிஎஸ்டி முறை தொடங்கியதிலிருந்து டிசம்பரில் வசூலான ரூ .1,49,507 கோடி வருவாய் என்பது மூன்றாவது மிக உயர்ந்த வருவாயாக இருக்கிறது. ஆனால், இது முந்தைய சாதனைகளைவிட மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கலாம். முதலாவதாக இந்த வரிகள் நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருப்பதால், அக்டோபரைவிட தொழிற்சாலைகளும் சேவை வழங்குநர்களும் பரபரப்பாக இருந்ததை இது குறித்தது. விழாக்களுக்கு பிந்தைய நுகர்வோரின் சோர்வால் இது கொஞ்சமும் பாதிக்கப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இரண்டாவதாக ஜிஎஸ்டி வருவாய் அதிகம் இருந்த இன்னும் இரண்டு சந்தர்ப்பங்களில் – ஏப்ரல் 2022ல் 1.67 லட்சம் கோடி ரூபாயாகவும் அக்டோபரில் 1.52 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது – இந்த எண்ணிக்கைகள், முறையே வரி செலுத்துவோரின் நிதியாண்டு இறுதி சமரசங்கள் மற்றும் விழாக்களுக்கு முந்தைய செலவுகள் அல்லது இருப்புகள் ஆகியவற்றால் உந்தப்பட்டது. ஆனால் டிசம்பரில் அப்படி இல்லை. அதிக பண வீக்கம்தான் வசூலை உயர்த்தியிருக்கிறது என்ற வாதம் ஓரளவுக்கு மட்டுமே நிரூபிக்கப்படக்கூடியது. நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் 11 மாதங்களில் மிக குறைந்த அளவான 5.9 சதவிதத்திற்கு வீழ்ந்தது. சேவைகள் தொடர்பான பணவீக்கமும் தொடர்ச்சியாக தட்டையாக இருந்தது. சரக்குகள் தொடர்பான பணவீக்கம் 6.2 சதவீதம் என்கிற அளவில் அதிகமாக இருந்தாலும் முந்தைய மாதங்களைவிட மிகக் குறைவுதான். அதனால், பணவீக்கம் வருவாயை சற்று முடுக்கியதாக வைத்துக் கொண்டாலும், அது விலைவாசி அதிகமிருந்த முந்தைய மாதங்களைவிட டிசம்பரில் கூடுதலாக எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை.
இப்போது வரையில் தெரிய வந்திருப்பதிலிருந்து, எட்டு முக்கிய துறைகள் அக்டோபரில் வெறும் 0.9 சதவீதம் என்கிற அளவிலிருந்து நவம்பரில் 5.4 சதவீதமாக வளர்ந்திருக்கின்றன. அதே நேரம், தொழிற்சாலை உற்பத்தி 4 சதவீதம் என்கிற அபாயகரமான வீழ்ச்சியை அடைந்தது. நவம்பரின் தொழிற்துறை உற்பத்தி அளவுகள் இந்த மாத பிற்பகுதியில்தான் தெரியும் என்றாலும், ஜிஎஸ்டி வருவாயை வைத்துப் பார்க்கும் போது, சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள், அதே நிலையில் இருந்ததை சுட்டிக்காட்டுகிறது. மத்திய நிதி நிலை அறிக்கையை தயாரிப்பதற்கான கடைசி கட்டத்தில் நிதி அமைச்சக நிர்வாகிகள் நுழையும்போது, இந்த சமீபத்திய ஜிஎஸ்டி கணக்குகள், எதிர்வரும் வருடத்துக்கான நிதிப் பாதை மற்றும் வருவாய்க்கான எதிர்பார்ப்புகளை வடிவமைக்கும்போது, கொஞ்சம் நம்பிக்கையை அளிக்கக் கூடும். கடந்த 10 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.4 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பது மட்டுமல்ல, டிசம்பரின் ஆரோக்கியமான வசூல் 2022-23ம் வருடத்தின் சராசரி மாதாந்திர வசூலை 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறது. ஆனால், சாவதானமாக இருப்பதற்கு இப்போது எந்த வாய்ப்பும் இல்லை. சர்வதேச நிலைகளால் பொருளாதார செயல்பாடுகளில் எதேனும் சுணக்கம் ஏற்பட்டால் அது வருவாய்களையும் குறைத்துவிடும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் கூடியது ஜிஎஸ்டி கவுன்சில். ஆனால் அது முக்கியமான சீர்திருத்தங்களை கிடப்பில்போட்டது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு விரைவில் கவுன்சில் கூட்டப்பட வேண்டும். வசூல் அதிகரிப்பு தொடர வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், தற்போது விலக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரே நாடு, ஒரே வரி வரம்பிற்குள் கொண்டு வரும் ஒரு சரியான வரி கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும் அதைச் செய்ய வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE