சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து பாகிஸ்தானுக்கு அறிக்கை அனுப்பியிருக்கும் அரசின் முடிவு கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீரில் இரண்டு இந்திய நீர்மின் திட்டங்களுக்கான ஆட்சேபனைகள் குறித்த பாகிஸ்தானின் பிடிவாதமே இந்த தீவிரமான நடவடிக்கைக்கு காரணம் என்று இந்தியா கூறுகிறது. 330 மெகாவாட் கிஷன்கங்கா நீர்மின் திட்டமும் (ஜீலம்) மற்றும் 850 மெகாவாட் ராட்லே நீர்மின் திட்டமும் (செனாப்)தான் அவை. ஆட்சேபனைகள் தொடங்கிய 2006 முதல், இந்த திட்டங்கள் ஒப்பந்தத்தின் நியாயமான நீர் பயன்பாட்டிற்கு உட்பட்டவை என்று இந்தியா வாதிட்டு வருகிறது. ஆனால் தவறாமல் கூடும் நிபுணர்கள் அடங்கிய நிரந்தர சிந்து ஆணையம் வழியாக இருதரப்பு உறவுகள் அடிப்படையிலான பேச்சுவார்த்தையை முடிக்க பாகிஸ்தான் மறுத்து, பிரச்னையை தீவிரப்படுத்தவே பார்த்தது. இதன் விளைவாக, உலக வங்கி ஒரு நடுநிலை நிபுணரை நியமித்தது. ஆனால் பாகிஸ்தான் இந்த வழக்கை தி ஹேக்கில் விசாரிக்க அழுத்தம் கொடுத்தது. அதற்கு முன்பிருந்த வாய்ப்பு முழுமையாக பயன்படுத்தப்பட்டு பலனளிக்காத நிலையிலேயே அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமென இந்தியா நம்புவதால், இந்த வரிசை முறைக்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. 2016ல் இந்த செயல் முறையை நிறுத்த இந்தியா உலக வங்கியை ஒப்புக் கொள்ள வைத்தது என்றாலும் பாகிஸ்தான் தொடர்ந்து பிரச்னையை நீட்டிக்கவே செய்தது.
மார்ச் 2022 முதல், உலக வங்கி ஒரு நடுநிலை நிபுணர் மற்றும் நடுவர் நீதிமன்றத்தை வைத்து வாதங்களை கேட்க ஒப்புக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நடுநிலை நிபுணர் நடத்திய விசாரணைகளில் இந்தியா கலந்து கொண்டது. ஆனால் தி ஹேக்கில் வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்கிய நீதிமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள நிலையில், முழு ஒப்பந்தத்தையும் திருத்தங்கள் மற்றும் மறுபரிசீலனைகளுக்கு திறந்துவிட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இரண்டு திட்டங்களும் அதன் தண்ணீர் விநியோகத்தை தடுக்கிறது என்கிற குற்றசாட்டுக்கு பாகிஸ்தான் ஆதாரம் எதையும் தர முடியாத நிலையில், அந்நாட்டுக்கு எதிரான இந்தியாவின் குற்றசாட்டுகளில் உண்மை இருக்கலாம். முரண்பாடான தீர்ப்புகள் இருக்கக்கூடும் என்பதால் இரண்டு இணையான தீர்ப்பு செயல்முறைகளை நடத்துவதற்கான உலக வங்கியின் முடிவும் ஆபத்தானது. ஆனால் ஒப்பந்தத்தை மறு ஆய்வுக்கு திறந்து விடுவதிலும் பல சிக்கல்கள் இருக்கிறது. இந்தியா அதை நிதானமான மனநிலையில் யோசிக்க வேண்டும்.
முதலில், சிந்து நதியின் ஆறு துணை நதிகளை இரு நாடுகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்த சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்படுவதற்கு முன்பு அதற்கான பேச்சுவார்த்தைகள் மட்டும் பத்தாண்டுகளை எடுத்துக் கொண்டது. ஒருங்கிணைப்புக்கும் சர்ச்சைகள் ஏற்பட்டால் அதற்கான தீர்வுகளுக்கும் உள்ளார்ந்த செயல்முறைகளை கொண்ட இந்த ஒப்பந்தம் சுமார் அரை நூற்றாண்டு காலமாக நல்லவிதமாகவே இயங்கியிருக்கிறது. தவிர இந்த ஒப்பந்தம் பெரும்பாலும் உலகெங்கிலும் உள்ள மேல் ஆற்றுப்படுகை மற்றும் கீழ் ஆற்றுப்படுகை மாநிலங்களுக்கு இடையில் ஒரு வார்ப்புருவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் மற்றும் அரசியல் விவாதங்கள் இருந்த போதிலும் அந்த ஒப்பந்தம் நீடித்திருந்தது அதன் உள்ளடக்கத்திற்கு ஒரு சான்று. கூடுதலாக, இந்தியாவும் பாகிஸ்தானும் 16 ஆண்டுகளாக சிந்து நதி ஆணைய பேச்சுவார்த்தைகளின் வழியே ஒரு வழக்கை தீர்க்க முடியவில்லை என்றால், முழு ஒப்பந்தத்தையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மறு ஆய்வு செய்ய முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இரு நாடுகளுக்கும் இடையே அரசியல்ரீதியான பேச்சுவார்த்தை, வர்த்தகம் மற்றும் விமானம் அல்லது ரயில் போக்குவரத்து எதுவும் இல்லாத நேரத்தில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு ஒரு புதிய பக்கத்தை திறக்கும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - January 31, 2023 11:38 am IST