2022-23ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்திய ரிசர்வ் வங்கியின் கணித்தபடி 7.2 சதகிவிதத்தில் ஆரம்பித்து சர்வதேச நாணய நிதியம் கணித்த 8.2 சதவிகிதம் வரை எங்கு வேண்டுமானாலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமான மதிப்பீட்டு முகமைகளும் நிதி நிறுவனங்களும் இந்த இரண்டு எண்களுக்கும் இடையிலேயே தங்களது கணிப்பை வைத்திருந்தன. கடந்த ஆண்டு கோவிட் தொற்றால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து 8.7 சதவீதம் என்கிற வளர்ச்சிக்கு மீண்ட பின்னர், ஜனவரி தொடங்கி பணவீக்கம் மிக அதிகமாய் இருந்த போதும் ஐரோப்பியப் போரின் அடுத்தடுத்த விளைவுகள் தொடங்கிய நிலையிலும், பொருளாதார வளர்ச்சியில் மிதமான தன்மை என்பது பெரிய விஷயமாக இருக்கவில்லை. செப்டம்பர் மாதத்திலிருந்து பெரும்பாலான கணிப்புகள் 6.7 - 7.7 சதவீதம் என்ற வரம்புக்குள்ளேயே இருந்தன. ரிசர்வ் வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ஆகியவை தங்கள் கணிப்பை 7 சதவீதமாக குறைத்திருந்தன. எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் தனது கணிப்பை 7.3 சதவிகிதம் என்கிற அளவில் தக்க வைத்தது. மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் 7.6 சதவிகிதமாக குறைத்தது. சர்வதேச அளவிலான மந்தநிலை கொரோனாவுக்கு பிந்தைய மீட்சியை பாதிக்காது என்று எஸ்&பி, மூடிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே நம்புகின்றன. ஆனால், செப்டம்பர் மாதம் கடைசி வாரம் வரையிலான சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இனி அவ்வளவு மென்மையானதாக பார்வை இருக்காது என்று உலக வங்கி சொல்லியிருக்கிறது. ஆரம்பத்தில் 8 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஜூன் மாதம் 7.5 சதவீதமாக குறைத்தது உலக வங்கி. ஆனால், புறக்காரணிகள் மோசமாகிவருவதால் 6.5 சதவீத என்ற வளர்ச்சியே இருக்கும் என்ற கண்ணோட்டத்தை முன்வைக்கிறது உலக வங்கி.
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 13.5 சதவீத விரிவுக்குப் பிறகு, உயர் அதிர்வெண் பொருளாதார குறியீடுகள் ஆகஸ்ட் வரை ஆரோக்கியமான ஏற்றத்தையே சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் 2021 பிப்ரவரிக்குப் பிறகு முதன்முறையாக சரக்கு ஏற்றுமதிகள் சுருங்கின. இறக்குமதி வளர்ச்சியும் மந்தமானதைப் பார்க்கும்போது, உள்நாட்டு தேவை குறைந்து வருவதும் தெரிந்தது. இதன் காரணமாக செப்டம்பரில் வளர்ச்சி கொஞ்சம் தடுமாற்றத்தை சந்தித்தது. வங்கியின் சமீபத்திய கணிப்பின் படி அக்டோபர்-டிசம்பர் காலாண்டு தொடங்கி, இறுக்கமான உலகளாவிய பணப்புழக்கம், அதிக பணவீக்கம் (ஒபெக் – பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு- கூட்டத்திற்குப் பிறகு எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன) மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் உள்நாட்டு தேவையை பாதிக்கும் நிலையில் ஒப்பீட்டளவிலான மந்தநிலை உருவாகலாம். அதே நேரம், ஏற்றுமதிகளுக்கான தேவை இன்னும் குறைந்து, அதிகபட்ச நிச்சயமற்ற தன்மை நிலவும் இந்த காலகட்டத்தை காத்திருந்து கடக்கலாம் என்று தனியார் முதலீட்டாளர்கள் நினைக்கக் கூடும். இந்த வருடமும் அடுத்த வருடமும் தனியார் நுகர்வு குறிப்பாக பாதிக்கப்படும் என்று வங்கி சொல்லியிருக்கிறது. ஊரக மற்றும் குறைந்த வருவாய் குடும்பங்களில் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பின் மீதான தொற்று நோயின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2020ல் 56 மில்லியன் இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. “வலுவான வளர்ச்சியின் யுகத்துக்குள்” நுழைவது பற்றி அரசு ஆர்வமாக இருக்கிறது ஆனால் கொள்ளை நோயால் உந்தப்பட்டு வழங்கப்பட்ட இலவச உணவு தானியங்கள் திட்டத்தை நீட்டிக்கும் அதன் முடிவு ஒரு விஷயத்தை தெளிவாக்கியிருக்கிறது. பொருளதாரத்தில் பங்குள்ள எல்லோருமே அதன் பாதிப்பிலிருந்து இன்னும் வெளியேறவில்லை என்பதை அது காட்டியிருக்கிறது. இந்த உண்மை அதன் மற்ற கொள்கை முடிவுகளிலும் பிரதிபலிக்க வேண்டும். நம்பிக்கையை, எச்சரிக்கையுணர்வுடனேயே அணுக வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - October 08, 2022 11:26 am IST