இந்தப் புத்தாண்டின் முதல் வாரத்தில் ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரியில் உள்ள டாங்ரியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பொதுமக்கள் கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்ரீநகரிலும் புதுதில்லியிலும் இருக்கும் காவல்துறையினரும் அதிகாரிகளும் இந்தச் சம்பவங்களைப் பற்றி எதுவும் இதுவரை சொல்லவில்லை. அந்தப் பகுதியில் வசிக்கும் இந்துக்களிடம் மிகப் பெரிய அச்சத்தைப் பரப்புவதுதான் இந்தச் செயலைச் செய்தவர்களின் நோக்கம் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஜனவரி 1ஆம் தேதியன்று வீடுகளுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாகச் சுட்டதில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பத்து பேர் காயமடைந்தனர். அடுத்த 15 மணி நேரத்திற்குள் ஒரு வீட்டிற்கு வெளியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். கடந்த சில ஆண்டுகளில், ஜம்மு பிராந்தியத்தில் மோதல்கள் ஏதும் நடக்காமல் இருந்துவந்தது. ஆனால், சமீபகாலத்தில் நடந்த இந்த சம்பவங்கள் இருள்மிகுந்த கடந்த காலம் திரும்பக்கூடும் என எச்சரிக்கின்றன. ரஜௌரி மிக அமைதியான ஒரு பகுதியாக இருந்தது. இங்கு இந்துக்கள் மீது பெரிய அளவில் நடந்த தாக்குதல் என்று பார்த்தால், அது 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதல்தான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைப் பிரிக்கக்கூடிய, எளிதில் ஆட்கள் உள்நுழையக்கூடிய நீண்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கொண்ட பகுதி இது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்குள் நுழைய விரும்பும் பயங்கரவாதிகள் அடிக்கடி பயன்படுத்தும் பகுதியாகவும் இது இருக்கிறது. நான்கு கையெறி குண்டுத் தாக்குதல்கள், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் பல மோதல்கள் என வன்முறைக்கான களமாக இப்போது இந்த மாவட்டம் மாறிவிட்டது என்பதற்கான சமிக்ஞைகள் 2022ல் தென்பட ஆரம்பித்தன. இதில், உள்ளூர்க்காரர்களுக்குத் தொடர்பு இருந்ததற்கான அறிகுறிகளும் இருக்கின்றன. ஜம்மு - காஷ்மீரில் இருந்த அரசியல் கட்சிகள், சிறுபான்மையினர் மீதான இந்தத் தாக்குதல்களை ஒரே குரலில் கண்டித்தன. பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக துணை நிலை ஆளுநரின் நிர்வாகத்தைக் குறிவைத்தன. பயங்கரவாதத்தை முடக்க கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தேவைகளைத் தீர்த்துவைக்கப்போவதாகவும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வாக்குறுதி அளித்திருக்கிறார். 1995ல் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பத்து மாவட்டங்களில், பாதுகாப்புப் படையினர் குறைவாக உள்ள தொலைதூரப் பிரதேசங்களில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட கிராம பாதுகாப்புக் கமிட்டிகளை மீண்டும் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதில் இடம்பெற்றிருந்த ஆயுதம் தாங்கிய தன்னார்வலர்கள் மிக மோசமாக நடந்துகொண்டதாக வந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்தக் குழுக்கள் கலைக்கப்பட்டன. காஷ்மீரில் அரசியல் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு, தம்முடைய பலத்தைக் காட்டும் கொள்கைக்கு வெற்றி கிடைத்திருப்பதாக காட்டிக்கொள்ள நினைக்கும் மத்திய அரசைப் பொறுத்தவரை, இந்த மத்திய ஆட்சிப் பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அடிக்கடி குறிவைக்கப்படுவது உள்ளிட்ட புதிய பாணியிலான பயங்கரவாதம், அங்கு நிலையற்றதன்மை இருப்பதை நினைவூட்டியிருக்கிறது. 2022ல் ஜம்மு - காஷ்மீரில் குறைந்தது 29 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது உள்ளூர் இந்துக்கள். ஜம்மு - காஷ்மீரில் நடத்தப்படும் புதிய சோதனைகள் வேறுவிதமான பலன்களைக் கொடுக்கலாம் என்றாலும் ஜனநாயக வழியில் பிரச்சனைகளைத் தீர்க்க பலதரப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பழைய பாணியும் பலனளிக்கக்கூடும். 2018க்குப் பிறகு, ஜம்மு - காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில், இந்தப் பிராந்தியத்தின் மைய நீரோட்டத்தில் இருப்பவர்கள்கூட இந்திய அரசிடமிருந்து விலகிச் செல்கிறார்கள். பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள, அரசியல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வது போதுமானதாக இருக்காது. ஆனால், காஷ்மீர் பிரச்சனைக்கான எந்த ஒரு தீர்வுக்கும் இது ஒரு அவசியமான சூழலை உருவாக்கும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE