ஏப்ரல் 2020ல் தொடங்கி டிசம்பர் 2022 வரையில் (இடையில் ஒரு குறுகிய காலம் தவிர) அமலில் இருந்த ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை நீட்டிக்க வேண்டாம் என்று அரசு முடிவு செய்திருக்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாதம் தோறும் ஐந்து கிலோ விலையில்லா தானியங்கள் (அரிசி அல்லது கோதுமையை) மத்திய தொகுப்பிலிருந்து வழங்குவதற்கு, இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மிக வறிய நிலையில் இருந்தவர்களுக்கு, தொற்றுக் காலம் தந்த அதிர்ச்சியை ஓரளவுக்கு சமாளிக்க உதவியதோடு, உத்திர பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியல் ஆதாயங்களையும் இந்த அன்ன யோஜனா திட்டம் கொண்டு வந்தது. திட்டத்தை நிறுத்தும் நிலையில், 2023ல் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் உணவு தானியங்களுக்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் அந்தச் சட்டத்தின் கீழ் இப்போது மதிப்பிடப்பட்டிருக்கும் 81.35 கோடி பயனாளிகளுக்கு இலவச உணவு தானியம் கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் அரசு சொல்லியிருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மானிய விலையில் அல்லாமல் மாதம் தோறும் ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமையை இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்கள் 35 கிலோ இலவச தானியங்களை பெற்றுக் கொள்ளலாம். 81.35 கோடி பயனாளிகள் என்கிற மதிப்பீடு 2011 மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கிறது. தவிர பொது விநியோக முறையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் மத்திய அரசு வகுத்திருக்கும் ஒதுக்கீடுகளின் கீழ் வருபவர்களும் மட்டும் பயன் பெற முடியும் என்பதால் சில மாநிலங்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற திட்டத்தின் பலன்களை பிறருக்கும் கிடைக்கும்படி வழி செய்திருக்கின்றன. இந்த விநியோகத்தின் செலவு சுமையை ஏற்றுக் கொள்வதால் இந்த திட்டத்துக்குக் கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கும் மத்திய அரசு, அப்படி செய்வதன் மூலம் மாநிலங்களுக்கு பொருளாதார ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஆனால் வரவேற்கத்தக்க நிவாரணத்தை வழங்கியிருக்கிறது.
உணவு விநியோகம் மற்றும் மானிய ஒதுக்கீடுகள் அதிக செலவு வைக்கும் நிலையில், இந்த திட்டங்கள் மிகுந்த தேவையில் உள்ளவர்களுக்கு நிவாரணத்தை வழங்கியிருக்கின்றன; அரசு தனது உணவு இருப்புகளை சிறப்பாக கட்டுப்படுத்த உதவியிருக்கின்றன; மற்றும் இந்திய உணவுக் கழகத்தால் அரிசி மற்றும் கோதுமைக்கான கொள்முதல் புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில், கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்கள் வீணாவதை தடுத்திருக்கின்றன. பொது விநியோகத் திட்டமும், அன்ன யோஜனா திட்டமும் அடிப்படை உணவுப் பாதுகாப்பை செயல்படுத்தியதோடு மட்டும் அல்லாமல், இந்த திட்டம் இல்லாவிட்டால் வாங்க முடியாத பிற பொருட்களை ஏழ்மையில் இருப்பவர்களை வாங்க அனுமதித்திருப்பதன் மூலம் வருவாய் பரிமாற்றக் கருவிகளாகவும் செயல்பட்டிருக்கின்றன. முன்னுரிமை குடும்பங்களையும் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்களையும் அடையாளம் காண்பது உள்ளிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விநியோக முறையின் கீழ், உணவு தானியங்கள் திசைதிருப்பப்படும் கவலைகளுக்கிடையில் உண்மையில் தகுதியானவர்களுக்கு இந்த தானியங்கள் சென்றடைந்ததா என்கிற கேள்வியும் நிச்சயம் இருக்கிறது. ஆனால், உரிமைசார் ஆர்வலர்கள் சொல்வதுபோல், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டிருக்கும் பொது விநியோகத் திட்டத்தை உலகளாவிய ஒன்றாக மாற்றுவதே சிறப்பான ஒரு தீர்வாக இருக்கும். காரணம், அப்போதுதான் குறைகளைக் கொண்ட ஒர் இலக்கு சார் திட்டமாக இல்லாமல், எல்லோரும் பயன்பெறக் கூடிய ஒரு திட்டமாக இருக்கும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE