சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்து முடிந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் 85வது முழுமையான அமர்வு கூட்டம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை வகுத்ததுடன் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவின் அதிகாரத்தையும் வலுப்படுத்தியது. ஒத்தகருத்துடைய மதசார்பற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான முடிவை தெளிவாக வெளிப்படுத்தியதுடன், தீவிரமான சமூக நீதி செயல்திட்டத்தையும் முன்னெடுக்க கட்சி முடிவு செய்திருக்கிறது. இது காங்கிரசுக்கு தலைகீழ் மாற்றம். மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்கள் கட்சிக்கு எப்போதுமே இருந்தாலும்கூட, அடித்தட்டு மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு இடமளிப்பதில் அது வெற்றிபெறவில்லை. இதன் காரணமாக அடித்தட்டு மக்கள் வேறு கட்சிகளையே தங்களுக்கெனத் தேர்வு செய்தார்கள். இந்த மாநாட்டில் சமூக நீதிக்கென்று தனியாக ஒரு தீர்மானத்தை கட்சி நிறைவேற்றியது. அதோடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) அதிகாரமளித்தலுக்காக ஒரு பிரத்யேக அமைச்சரவை, சமூக நீதிக்கான தேசிய கவுன்சிலை உருவாக்குதல், தேசிய பொருளாதார ஆய்வறிக்கையைப் போல வருடாந்திர “சமூக நீதி நிலை” அறிக்கையை வெளியிடுதல், உயர் நீதித்துறையில் பட்டியல் சாதிகள் (எஸ்சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு, பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரோஹித் வெமுலா சட்டம் ஆகியவை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டன. மண்டலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், பிராந்தியக் கட்சிகளிடம் தோற்ற நிலையில் கட்சி இப்போது அடித்தட்டு மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் பொருட்டு ஒரு தொடக்கமாக, காங்கிரஸ் செயற்குழுவில் சரி பாதி இடங்களை பட்டியல் சாதிகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கும் வகையில் தனது சொந்த அரசியலமைப்பையும் கட்சி திருத்தியது. கடந்த ஆண்டு உதய்பூர் ‘சிந்தன் ஷிவிரி‘ல் வெளியிடப்பட்ட உன்னதமான அறிவிப்புகள் கிட்டத்தட்ட உடனடியாகவே கைவிடப்பட்டன. அதனால் வரவிருக்கும் மாதங்களில் ராய்ப்பூர் தீர்மானங்களை அது பின்பற்றுகிறதா என்பது கவனிக்கப்படும்.
“சம்பூர்ண சமாஜிக் சுரக்ஷா” என்ற சமூக பாதுகாப்பு கட்டமைப்பிற்கு கட்சி உறுதியளித்திருக்கிறது. இது ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் மற்றும் சமூக பாதுகாப்புக்கான சட்டப்பூர்வ உத்தரவாதங்களைக் கொண்டிருக்கும். அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சில உரிமைகளையும் உறுதியளிக்கிறது கட்சி. நியுந்தம் ஆய் யோஜனா (நியாய்) மூலம் அடிப்படை வருமானத்திற்கான உரிமை, சுகாதார உரிமை, ஒற்றைப் பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி விரிவான ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தரமான தொடக்கப் பள்ளிக் கல்வி மற்றும் மகப்பேறு உரிமைகள் ஆகியவை இதில் அடங்கும். வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிற சவால்களை எதிர்கொள்ள ஒரு புதிய பொதுநல கட்டமைப்பை இன்று உலகம் விவாதித்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸின் யோசனைகள் இந்தியாவில் ஒரு புதிய, காத்திரமான விவாதத்தைத் தூண்ட வேண்டும். கட்சி 2019 பொதுத் தேர்தலில் ‘நியாய்‘ அல்லது அனைவருக்குமான வருமானத் திட்டத்தை நம்பியிருந்தாலும், அது எந்த தேர்தல் ஆதாயத்தையும் பெற்றுத் தரவில்லை. உறுதியான வருமானத்துடன் கூடிய ஒரு சிறந்த எதிர்காலம் என்ற வாக்குறுதி, சமூக அடையாளத்தையும் உள்ளடக்கிய நிலையில், அது பாரதிய ஜனதா கட்சியின் கூடுதல் இந்துத்துவ பிரச்சாரத்தை எதிர்கொள்ள உதவும் என்கிற நம்பிக்கையில் கட்சி இருக்கிறது. சமத்துவமின்மை என்பது வெறும் பொருள் சார்ந்தது மட்டுமல்ல, பாகுபாடு என்பது மதரீதியாக மட்டுமல்ல என்ற உண்மையை ஒப்புக்கொள்வதன் மூலம் சமீபத்திய ஆண்டுகளில் பா.ஜ.கவுக்கு சாதகமாக செயல்பட்ட மதச்சார்பற்ற தன்மை-வகுப்புவாத இருமை என்பதற்கு அப்பால் இந்த விவாதத்தை காங்கிரஸ் கொண்டு சென்றிருக்கிறது. இந்த வியூகம் வெற்றி பெற வேண்டுமென்றால், காங்கிரஸ் அதற்கேயுரிய தைரியமின்மையிலிருந்து விலகி, அதன் புதிய சிந்தனையுடன் இணைந்த ஒரு வலுவான அரசியல் பிரச்சாரத்தை உருவாக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - February 28, 2023 11:07 am IST