மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடும் முறை கொடூரமானது அல்லது காட்டுமிராண்டித்தனமானது என்று சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றம் சொல்லி நாற்பது வருடங்கள் ஆன நிலையில், இப்போது மரண தண்டனையை நிறைவேற்ற கண்ணியமான, குறைந்த வலி தரும் வழி ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிய முயற்சி செய்கிறது. குறைந்த வலியும் கொடூரத்தன்மையும் கொண்டதாக மரணதண்டனை இருப்பதற்கான மாற்று வழிகள் என்பது மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டுமா என்கிற விரிவான விவாதத்தின் ஒரு பகுதிதான். மரண தண்டனை மற்றும் தூக்கிலிடும் நடைமுறை இரண்டையும் ஆதரிக்கும் போக்கு நீதித்துறை மற்றும் நிர்வாகத்தின் சிந்தனையிலேயே இருக்கிறது. மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு இன்னும் மனிதநேயமுள்ள ஒரு முறையை கண்டடைய முடியும் என்ற வாதத்துக்கு ஆதரவாக புதிய தரவுகளை அமர்வு கோரியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இரண்டு முக்கியமான தீர்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, மரண தண்டனையை உறுதி செய்த அதே நேரம், அதனை அரிதினும் அரிதான வழக்குகளோடு நிறுத்திய பச்சன் சிங் எதிர் பஞ்சாப் அரசு (1980) வழக்கு. இன்னொன்று, தூக்கிலிடுவது “முடிந்தவரை வலியற்றது” என்றும் “அறியப்பட்ட வேறு முறைகளைவிட இது அதிக வலியை ஏற்படுத்தாது” என்றும் தீர்ப்பளித்து தண்டனையை நிறைவேற்றும் முறையை உறுதிப்படுத்திய தீன தயாள் எதிர் மத்திய அரசு மற்றும் பிறர் (1983) வழக்கு. மின் அதிர்ச்சி, விஷ வாயு அறை அல்லது விஷ ஊசி போன்ற நடைமுறைகள் சிலரால் குறைந்த வலி கொண்டுள்ளதாக கருதப்படுவதாக சட்ட ஆணையத்தின் 35வது அறிக்கை (1967) சொல்கிறது. ஆனாலும் அது குறித்து ஒரு முடிவுக்கு வர அந்த அறிக்கையால் முடியாத நிலையில், எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்கவில்லை. மரண தண்டனைக்கு ஒழிப்புக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் இல்லையென்றாலும், நிர்வாகம் மரண தண்டனைகளை
நிறைவேற்றுவதை கடினமாக்கும் வலுவான மனிதநேயமுள்ள சட்ட வரம்புகளை உருவாக்கியிருக்கிறது. “அரிதினும் அரிதான வழக்குகளில்” மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் மரண தண்டனையை அது வரையறைப்படுத்தியிருக்கிறது. ஒருவரை தூக்கு மேடைக்கு அனுப்புவதற்கு முன்பு நிலைமைகள் மோசமாவதற்கும் தணிவதற்கும் இடையில் ஒரு சமநிலையை இது கொண்டு வருகிறது. திறந்த நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குப் பிந்தைய மறு ஆய்வு விசாரணையை அனுமதித்திருக்கிறது. அதேசமயம், கருணை மனுக்கள் மீதான முடிவுகளை நியாயமானதாக மாற்றும் வகையிலும், கருணை மனுக்கள் மீதான தேவையற்ற காலதாமதத்தை தண்டிக்கும் வகையிலும், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் வகையிலும் கருணை அடிப்படையிலான சட்ட நடைமுறையையும் அது உருவாக்கியிருக்கிறது. இப்போது நீதிமன்றத்தின் முன் உள்ள கேள்வி அதன் அணுகுமுறையை இன்னும் மனிதத்தன்மை கொண்டுள்ளதாக மாற்ற கூடுதலான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அனுபவங்களின் அடிப்படையிலான சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது தூக்கிலிடுவது, விரைவான அல்லது வலி நிறைந்த மரணத்தை வழங்காது என்றுதான் சொல்லப்படுகிறது. அதே நேரம், மின் அதிர்ச்சி மற்றும் விஷ ஊசி போன்றவை அவற்றின் அளவில் கொடூரமானவை என்பதைக் காட்டும் சான்றுகளும் நிறைய இருக்கின்றன. தூக்கு தண்டனை தொடர வேண்டும் என்று வாதிடுகிறது மத்திய அரசு. காரணம், அது கொடூரமானதோ மனிதாபிமானமற்றதோ இல்லை என்பது மட்டுமில்லை. அந்த முறையில் மட்டும்தான் சொதப்பல்கள் குறைவாக இருக்கின்றன. ஆனால் அசலான பிரச்னை வேறு: எந்த வகையில் நடந்தாலும் மரண தண்டனை மனிதத் தன்மையின் வீழ்ச்சி, மனித மாண்பின் மீதான தாக்குதல். தவிர அது ஒரு கொடுமையையும் அரங்கேற்றுகிறது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடைமுறையை விவாதிப்பதுகூட, கொல்வதற்கான எதிர்வினை கொலைதானா என்கிற தார்மீக ரீதியிலான கேள்வியை இன்னும் தீவிரமாக்குகிறது. கொடுமையையும் மாண்பின்மையையும் ஒழிப்பதுதான் நோக்கமென்றால், மரண தண்டனை ஒழிப்புதான் ஒரே பதில்.
This editorial has been translated from English, which can be read here.