Main Text: விசாரணை அறிக்கை என்பது, விசாரணையை மேற்கொள்பவர் உண்மைகளின் முகத்தில் தனது விருப்பங்களை பதிவு செய்வதற்கு ஏதுவான காலியான பலகை இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான சூழல்களை பற்றிய தெளிவை வகுக்கப்பட்ட வழிமுறைகளின்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்ததா அல்லது அரசியல் சந்தர்ப்பவாதம் என்கிற பின்னணியில் தீட்டப்பட்ட சதி கோட்பாடுகளை வலியுறுத்தும் முன்தீர்மானிக்கப்பட்ட ஒரு கொடூரமான பிரதியை பின்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டதா? சட்டமன்றத்தில் செவ்வாய் கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மூன்று மருத்துவர்கள் ஆகியோரை குற்றம்சாட்டியதோடு அவர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகளைப் பரிந்துரைத்தது. ஆனால் குற்றவாளிகள் என்று கண்டறிந்தவர்களின் தவறுகள் என்ன என்பதை விளக்குவதிலும், அவர்களை நோக்கி நேரடியாக குற்றம்சாட்டும் ஆதாரங்களை கண்டடைவதிலும் ஆணையம் குழப்பமளிக்கும் வகையில் தவறிவிட்டது. மருத்துவராக இல்லாமல் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களிலும் பின்பற்றியிருக்க வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் குறித்து (இதயக் கோளாறுக்கு அஞ்சியோ/அறுவை சிகிச்சை போன்ற) நடைமுறைக்கு பிந்தைய தீர்ப்புகளை அளிக்கிறார். இந்த அனுமானங்களின் அடிப்படையில் சிகிச்சைக்கு பொறுப்பான தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் மீது குற்றசாட்டுகளை வைக்க இன்னும் அதீதமாக செயற்பட்டிருக்கிறார். மருத்துவமனை கையாண்ட சிகிச்சையின் போக்கு மற்றும் நோய் பற்றிய அதன் இறுதி முடிவை ஏற்றுக் கொண்ட ஏய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழுவின் (உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது) அறிக்கையை முற்றிலுமாக அவர் தட்டிக் கழித்திருப்பது, கண்கூடான ஒரு தவறு. மருத்துவர்கள் குழு வழங்கிய பல தேர்வுகளிலிருந்து, சாட்சியங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்து, ஏற்கனவே
நிர்ணயிக்கப்பட்ட முடிவு எனத் தோன்றும் முடிவுக்குத் தோதாக தனக்கு தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கையாண்டிருக்கிறது ஆணையம். இன்னும் மோசமானது என்னவென்றால், பதிலுரையும் சாட்சியமும் அளித்தவர்கள் பற்றி பொய்களைச் சொல்லி அவதூறுகளை வாரி வீசியிருக்கிறது அறிக்கை. ஜெயலலிதா ஒப்புக்கொண்ட பிறகு அவரை ஏன் சிகிச்சைக்கு வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கேள்வியெழுப்பியதில் இது தெளிவு. அறிக்கையின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டிருக்கும் ஒரு தரவில் அவர் மிக தெளிவாக சிகிச்சைக்காக நாட்டை விட்டு வெளியேற மறுத்துவிட்டார் என்று சொல்வதை ஆணையம் நிராகரித்திருக்கிறது. மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விரிவான ஆவணங்கள் இந்த அறிக்கையில் இணைப்புகளாக டுக்கப்பட்டிருக்கின்றன. (அறுவை சிகிச்சைப் பற்றி) ஆவணங்களையோ எதிர்-சான்றுகளையோ மருத்துவமனை வழங்கவில்லை என்று புரிந்து கொள்ள முடியாத வகையில் குற்றம்சாட்டுகிறது. ஆணையம் அமைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் கடந்த நிலையில், ஜெயலலிதா இறந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை நீதியை வழங்குவதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை. மாறாக மருத்துவம் பற்றிய தகுதியற்ற கருத்துகளை முன் வைப்பதற்கு அதீதமாக செயல்பட்டிருப்பதோடு தகாத செயல்பாடுகளால் நிறைந்திருக்கிறது. அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அதன் மீது சட்டரீதியான கருத்தை கேட்டறிய முனையும் வகையில் தமிழ்நாடு அரசு தனது கடமையை நிறைவேற்றியிருக்கிறது. நீண்டுக் கொண்டே போகும் இந்த விவகாரத்தை சரியாக, முழுமையாக தீர்த்துவைப்பதன் மூலம், அசலான நீதியை வழங்குவதே தற்போது அரசின் கடமையாக இருக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.
Published - October 20, 2022 10:59 am IST