நாகாலாந்து, திரிபுரா ஆகிய இரண்டு வடகிழக்கு மாநிலங்களின் வாக்காளர்கள், பா.ஜ.கவின் போட்டியாளர்கள் உறுதியளித்த மாற்றத்தை கொண்டு வருவதற்கு பதிலாக பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மற்றொரு ஆட்சிக் காலத்தை அளித்திருக்கிறார்கள். பா.ஜ.கவைப் பொருத்தவரையில், தேர்தல் முடிவுகள் அதன் தொடர்ச்சியான பணிகளுக்கு கிடைத்த பரிசு. தவிர தான் ஒரு முன்னணி தேசிய கட்சி என்ற அதன் உரிமைகோரலையும் இது இன்னும் உறுதிசெய்கிறது. திரிபுராவில், பா.ஜ.கவும் அதன் பிராந்திய கூட்டணியான திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணியும் 33 இடங்களை வென்றிருக்கின்றன. இது 2018ல் பெற்ற இடங்களைவிட ஒன்பது இடங்கள் குறைவென்றாலும் பெரும்பான்மையைவிட இரண்டு இடங்கள் அதிகம். இடது முன்னணியும் காங்கிரசும் செய்துகொண்ட தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம், இடதுசாரிகளுக்கு எந்த பலனையும் தரவில்லை. ஆனால், காங்கிரசுக்கு ஒரு புதிய வாய்ப்பை தந்திருக்கிறது. இடது முன்னணி 2018ல் வென்ற 16 தொகுதிகளில் இருந்து ஐந்து இடங்களை இழந்து, 11 இடங்களை வென்றிருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் காங்கிரஸ் ஐந்து வருடங்களுக்கு முன்பு எதிலும் வெற்றி பெறாத நிலையில் இந்த முறை மூன்று தொகுதிகளில் வென்றிருக்கிறது. பழங்குடிப் பகுதிகளில் தான் போட்டியிட்ட 42 தொகுதிகளில் 13 இடங்களை திப்ரா மோத்தா என்ற புதிய கட்சி கைப்பற்றியிருக்கிறது. மேம்பட்ட சட்டம் - ஒழுங்கு நிலை, ஏழை மக்களுக்கு மாதாந்திர சமூக நிதியாக ரூ. 2,000 போன்ற நிதி ரீதியான உதவிகள் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் 1.6 லட்சம் வீடுகளை வழங்குதல் போன்றவை பா.ஜ.க.வின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். மோத்தாவின் எழுச்சியால் கலக்கமடைந்துள்ள பழங்குடி அல்லாத வாக்காளர்களையும் கட்சி திரட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. மேகாலயாவில், கூட்டணிக் கட்சியினரும் போட்டியாளர்களும் தேசிய மக்கள் கட்சி மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் எடுபடவில்லை. தேசிய மக்கள் கட்சி 26 இடங்களை வென்றது. இது 2018ல் வென்றதைவிட ஆறு தொகுதிகள் அதிகம். அதே நேரத்தில், தற்போது முடிவுக்கு வந்திருக்கும் ஆட்சிக் காலத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளாக இருந்த ஐக்கிய ஜனநாயகக் கட்சியும் பா.ஜ.கவும் முறையே 11 மற்றும் 2 இடங்களை வென்றிருக்கின்றன. தேர்தலை இந்த கட்சிகள் தனித்தனியாகவே எதிர்கொண்டன. மொத்த மேகாலயாவிலும் பரவியிருக்கும் தேசிய மக்கள் கட்சியின் இருப்பு, காரோ மற்றும் காசி-ஜெயின்டியா சமூகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு மலைப் பகுதிகளில் கட்சிக்கு பெரிதும் உதவியது. அதே நேரம், திரிணாமூல காங்கிரஸ் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்சியாக பார்க்கப்பட்டதால் காலூன்றுவதற்கான அதன் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஒரு காலத்தில் மாநிலம் முழுவதும் ஏற்புடையதன்மையை பெற்றிருந்த காங்கிரஸ், இப்போது மிகவும் பலவீனமடைந்திருக்கிறது. 2018ல் 21 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது ஐந்து இடங்களையே வென்றிருக்கிறது. இது காங்கிரசுக்கு பெரிய வீழ்ச்சி. மேகாலயாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினருக்கு தொடர்ந்து பா.ஜ.க. மீது சந்தேகம் இருந்தாலும், நாகாலந்தில் உள்ள கிறிஸ்துவர்கள் பா.ஜ.கவிடம் நெருக்கம் காட்டத் தொடங்கிவிட்டார்கள். நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் பா.ஜ.கவும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. முந்தைய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியே இல்லாமல் இருந்தது. 2018ல் 12 இடங்களை பெற்ற பா.ஜ.க இப்போதும் அதே இடங்களைப் பெற்றிருக்கிறது. தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 2018ல் பெற்றதைவிட ஏழு தொகுதிகள் அதிகம் பெற்று 25 தொகுதிகளில் வென்றிருக்கிறது. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் மீதமுள்ள இடங்கள் பா.ஜ.கவின் சிறிய கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்றிருக்கும் நிலையில் புதிய சட்டமன்றத்திலும் எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் வாய்ப்பில்லை.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE