பொங்கல் வந்தால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தயாரிப்புகளில் களைகட்டும். ஜல்லிக்கட்டுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அமர்வு டிசம்பர் 8 ஆம் தேதி அன்று ஒத்தி வைத்தது. பல்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் நீடிக்கும் இந்த வருடாந்திர நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டிற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் நிலையில் “காளைகளை அடக்குவது” பற்றி குறிப்பிடாத ‘விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 2017ன் செல்லுபடியாகும் தன்மை குறித்து இது தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது. மே 2014ல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லையென்றாலும் டிசம்பர் 2016ல் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அந்த விளையாட்டை மீண்டும் நடத்துவதற்கான கோரிக்கை தீவிரமாக வலுப்பெற்றது. காளைகளை அடக்குவது குறித்து குறிப்பிடும் ‘தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009’ செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்ததால், 2017ஆம் ஆண்டு சட்டத்தை உருவாக்கியவர்கள் ஜல்லிக்கட்டை “பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பின்பற்றும் நோக்கில் காளைகள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு” என்று வரையறுத்தார்கள். இந்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரித்த நீதிமன்றம், பிரிவு 29 (1)இன் கீழ் ஜல்லிக்கட்டை ஒரு கூட்டு பண்பாட்டு உரிமையாக கருதி அரசியலமைப்பு பாதுகாப்பு வழங்க வேண்டுமா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சித்தது. 2017ஆம் ஆண்டின் சட்டமும் விதிகளும் “விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை நிலைநிறுத்துகின்றனவா” அல்லது “காளைகளின் பூர்வீக இனங்களின் உயிர்வாழ்வையும் நல்வாழ்வையும்” உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையாக இருந்ததா என்பதையும் அது பரிசீலித்தது.
ஒரு ஜனநாயகத்தில் மக்களின் பண்பாட்டு நுண்ணுணர்வை புறக்கணிக்க முடியாது. ஆறு வருடங்களுக்கு முன்பு மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்தவர்கள் இந்த கோணத்தை மதிக்கவில்லை என்கிற பார்வை வலுப்பெற்றது. இதனால் மத்திய சட்டமான ‘விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960’ல் மாநிலத்துக்கான குறிப்பிட்ட திருத்தத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் கட்டாயத்துக்குள்ளாகின. விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் இந்தத் திருத்தம், மெரினா கடற்கரையில் பல நாட்கள் மக்கள் கூடியதை அடுத்து மாநிலத்தை சூழ்ந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆனால் திருத்தியமைக்கப்பட்ட சட்டம்கூட விலங்குகள் துன்புறுத்தல் சம்பவங்கள் மட்டுமில்லாமல் எந்த மனித உயிரிழப்புகளும் நடக்காமல் தடுப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஒழுங்குமுறைகளை இன்னும் கடுமையாக அமல்படுத்துவது அவசியமாக இருக்கிறது. கூடுதலாக, ஜல்லிக்கட்டை பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் நடத்துவது பற்றி உள்ளூர் மக்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சொல்ல வேண்டும். எல்லாப் பாரம்பரியங்களும் காலப்போக்கில் மாற்றங்களுக்கு உட்படுகின்றன. ஜல்லிக்கட்டும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அனைத்துத் தரப்பினருக்கும் இந்த செய்தி வலுவாக சொல்லப்பட வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE