ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பேற்கும் வருடத்தை டிசம்பர் 1ஆம் தேதி அன்று பகட்டாக தொடங்கிவைத்தது இந்திய அரசு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான நூறு நினைவுச் சின்னங்களில் வசுதேவ குடும்பகம் (ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்) என்கிற நோக்கத்தை குறிக்கும் இந்திய ‘ஜி-20’ சின்னத்தையும் அரசு ஒளிரச் செய்தது. தலைமைப் பொறுப்பில் இந்தியா இருக்கும் இந்த ஒராண்டில் “ஒரே உலகை ஆற்றுப்படுத்துதல், ஒரே குடும்பத்துக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் ஒரே எதிர்காலத்துக்கு நம்பிக்கையளித்தல்” போன்றவற்றில் கவனம் செலுத்தப் போவதாக தலையங்க கட்டுரையொன்றில் உறுதி அளித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி. இந்தியா முழுவதும் சுமார் 200 ஜி-20 கூட்டங்கள் நடத்தும் திட்டமும் இருக்கிறது. இந்த ஆரம்பகட்ட, அமைச்சரவை கூட்டங்களின் உச்சகட்டமாக பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்ட ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும். அந்த உச்சி மாநாடு பி-5 நாடுகள் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களை அடுத்த செப்டம்பரில் புது தில்லிக்கு அழைத்து வரும். யுக்ரைன் போர் தொடர்பான வேறுபாடுகள் காரணமாக கூட்டங்களை திட்டமிடுவதிலும் முழு பங்கேற்பை உறுதி செய்வதிலும் கூட கடுமையாக போராடிய இந்தோனேசியாவிடமிருந்து தலைமை பொறுப்பை பெற்றிருக்கிறது இந்தியா. எல்லா பெரிய தலைவர்களும் கலந்துகொள்வது பற்றி கடைசி நிமிடம் வரையில் நிச்சயமற்ற நிலையே இருந்தது. எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுக்க ஒத்துழைப்பார்களா என்பது பற்றி (அது நடக்கவில்லை), எல்லோரும் ஒன்றிணைந்து அறிக்கை விடுவார்களா என்பது பற்றியும் நிச்சயமற்ற நிலையே இருந்தது. ஒரு வழியாக அறிக்கை இறுதியில் வலுக்கட்டாயமாக எழுதப்பட்டது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ செய்தது போல திரு.மோதியும் ஜி-20 தலைவர்கள் மற்றும் அழைப்பாளர்கள் மிக உயர்ந்த மட்டத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கும். அறிக்கைகள் மீது ஒருமித்த கருத்தை உருவாக்க அதிகாரிகள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கும்.
குறியீடுகள் மற்றும் ஏற்பாடுகள் ரீதியான ஒருங்கிணைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி விரிவான ஜி-20 செயல்திட்டத்தை ஒன்றிணைக்க கணிசமான பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்பதன் பொருட்டு, அரசுக்கு கடினமான பணியே காத்திருக்கிறது. இந்த விரிவான செயல்திட்டத்தில், பயங்கரவாத எதிர்ப்பு, விநியோக சங்கிலி தடைகள் மற்றும் சர்வதேச ஒற்றுமை ஆகியவற்றில் கவனம் இருக்கும் என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். 2008ல் அமெரிக்காவில் முதல் ஜி-20 உச்சி மாநாடு அளவிலான கூட்டம் உலகின் நிதி அமைப்புகள் நெருக்கடியான ஒரு நிலையை எதிர்கொண்டிருந்தபோது நடந்தது. 2022ல் திரு.மோதிக்கும் அவரது குழுவுக்கும் எதிரில் உள்ள பணி அதே அளவில் முக்கியமானது. யுக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய போரின் நீண்டகால தாக்கங்கள், எரிவாயுகள் மீதான மேற்குலக தடைகள் இந்த மாதம் இன்னும் தீவிரமான சூழல், பொருளாதார வீழ்ச்சி, தொற்றுநோய் பற்றிய கவலைகள், உலகமயமாதலின் அடித்தளங்களை அசைத்துப் பார்க்கும் காலநிலை மாற்றம் மற்றும் தொடர்புடைய சர்வதேச பொருளாதாரம் போன்ற பிரச்னைகளை வைத்துப் பார்க்கும்போது அது சவாலான பணியே. தனது கட்டுரையில் திரு.மோதி, “கூட்டு முடிவெடுக்கும்” பாரம்பரியத்தின் வழியாக இந்தியா அதன் ஜி-20 செயல்திட்டத்தை உருவாக்கும் என்றார். “மில்லியன் கணக்கான சுதந்திரமான குரல்களை ஒரு இணக்கமான மெல்லிசையாக கலப்பது போல” இந்தியாவின் தேசிய கருத்தொற்றுமை போலவே அது இருக்கும் என்றும் சொன்னார். பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக, வகுப்புவாத பதற்றங்களை இந்தியா எதிர்கொண்டு வரும் ஒரு சூழலில், அரசு இது போன்ற கொள்கைகளை நிலைநிறுத்தும் போது கூடுதலான கண்காணிப்புக்கும் தயாராக இருக்க வேண்டும். ஜி-20யின் தலைமை பொறுப்பில் உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியதோடு, சர்வதேச அளவில் கருத்தாக்கத்தை ஏற்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருக்கும் நிலையில், பெரிய அதிகாரத்துடன் பெரிய பொறுப்பும் வரும் என்பதை அரசு அறிய நேரிடலாம். தவிர, சர்வதேச கனவுகளை உள்நாட்டு நிலபரப்பில் மொழிபெயர்க்கும் அதன் திறன் மீது கூடுதல் கவனமும் இருக்கும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE