ADVERTISEMENT

அறிவிக்கப்படாத அவசர நிலை

Published - October 05, 2023 11:07 am IST

நியூஸ்கிளிக் வழக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கைதுகளும் நடவடிக்கைகளும் அதிர்ச்சியூட்டும் விளைவை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன

விமர்சனப்பூர்வமான ஊடகவியல் பற்றிய சகிப்புத்தன்மை இல்லாத அரசாக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கும் ஒரு அரசு என்ற அளவில் பார்த்தால்கூட, நியூஸ்கிளிக் செய்தித் தளத்தின் மீது பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளில் பழிவாங்கல் போக்கும் அப்பட்டமான துன்புறுத்தலும் அதிதீவிரமாக இருக்கின்றன. கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்படும் அளவுக்கு அந்த செய்தித் தளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் இன்னொரு நபர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது பற்றி அரசு இதுவரை எதையும் சொல்லவில்லை. இந்த இணையத்தளம் “சீன தொடர்புகள் கொண்ட ஒரு பயங்கரவாத வழக்கில்” விசாரணையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் “பயங்கரவாதம்” அல்லது சீன ஆதரவு பரப்புரையுடன் எதாவது ஒரு தொடர்பை சுட்டிக்காட்டும் எந்தவொரு கட்டுரையோ அல்லது உள்ளடக்கமோ இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களின் விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றும் செய்தி நிறுவனம் சொல்லியிருக்கிறது. ஆனாலும், நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள், பங்களிப்பாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களில் பலருடைய மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இணைய தளத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைகள் புதியவை அல்ல. 2021 முதல் அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரித் துறையின் கண்காணிப்பில் இருக்கும் நிலையிலும் மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போதும்கூட இந்த இணைய தளத்துக்கு எதிராக ஒரு போதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. முதல் பார்வையில் நியூஸ் கிளிக்கிற்கு ஆதரவாக ஒரு வழக்கைக் கண்டறிந்த டெல்லி உயர் நீதிமன்றம், திரு. புர்காயஸ்தாவை கைது செய்வதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்கியதோடு அந்த நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை கட்டாய நடவடிக்கை எடுப்பதையும் தடுத்தது. இதே போல வருமான வரித்துறை தாக்கல் செய்த புகாரை கீழமை நீதிமன்றம் ஒன்று தள்ளுபடி செய்திருக்கிறது.

நியூஸ் கிளிக்கில் முதலீடு செய்திருக்கும் ஒருவர் சீன அரசுடன் நெருக்கமாக இருப்பதாக குற்றம் சாட்டிய தி நியூயார்க் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரைதான் இப்போது இந்த நடவடிக்கைகளுக்கான தூண்டுதலாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவிற்கு எதிரான சட்டவிரோத பரப்புரை என்று சொல்லப்படுவதற்கு சமமான எந்தவொரு குறிப்பிட்ட கட்டுரையையும் இணையத் தளத்தில் அது சுட்டிக்காட்டவில்லை. நியூயார்க் டைம்ஸின் இந்த கட்டுரையின் அடிப்படையில்தான் இந்த அரசின் பிரதிநிதிகள் தொடக்கத்தில் இந்த இணைய தளத்திற்கு எதிராக திட்டமிட்ட அவதூறிலும் வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புவதிலும் ஈடுபட்டார்கள். ஒரு ஊடக நிறுவனத்தை பலிகடா ஆக்கும் உந்துதலால் தூண்டப்பட்டதாகதான் செவ்வாய்கிழமையின் நடவடிக்கைகள் இருந்தன. இதன் மூலமாக விமர்சனப்பூர்வமான ஊடகவியலின் மீது ஒரு அதிர்ச்சியூட்டும் விளைவை உருவாக்குவதும் நோக்கமாக இருந்தது. எந்தவொரு அரசும் நிதி குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே ஊடகவியலாளர்களை அப்பட்டமாகக் குறிவைக்க முடியாது, அல்லது அப்படிச் செய்யக்கூடாது. அப்படி செய்வதன் மூலம் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதமளிக்கப்படும் கருத்து சுதந்திரத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தவும் கூடாது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்-செயற்பாட்டாளராக இருந்த நிலையில் 1975ல் நெருக்கடி நிலையின்போது, கொடூரமான உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான குற்றச்சாட்டுகளில் திரு புர்காயஸ்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இன்று வரலாறு

மீண்டும் திரும்புவது போலத் தெரிகிறது. ஆனால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையின் சாயல்கூட இல்லாமல் அது நடந்து கொண்டிருக்கிறது.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT