ADVERTISEMENT

உண்மையான பாவம்

Published - October 10, 2023 11:35 am IST

நீண்ட கால அமைதி வேண்டுமெனில் பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது நிறுத்தப்பட வேண்டும்.

சனிக்கிழமையன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஒரு திடீர் தாக்குதலை நடத்தியது. சுமார் 700 பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதல், ஆக்கிரமிக்கப்பட்டு முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனத்தின் ஸ்திரமற்றதன்மைக்கு ஒரு நினைவூட்டலாக இருக்க வேண்டும். அதேபோல, இஸ்ரேல் ராணுவரீதியாகவும் உளவு ரீதியாகவும் எவ்வளவு பலமானதாக இருந்தாலும் அரசு சாராத ஹமாஸ் போன்ற இயக்கங்கள் இஸ்ரேலுக்கு முன்வைக்கும் ஆபத்தையும் இது சுட்டிக்காட்டியிருக்கிறது. பல மாதங்களாகவே மேற்குக் கரைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், இம்மாதிரி ஒருங்கிணைக்கப்பட்ட, தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தாத மரண தாக்குதலை காஸாவிலிருந்து யாருமே எதிர்பார்க்கவில்லை. சமீப மாதங்களில் மேற்குக் கரைப் பகுதியில் தினமும் வன்முறைச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. சனிக்கிழமைத் தாக்குதலுக்கு முன்பே, இந்த ஆண்டில் மட்டும் 200 பாலஸ்தீனியர்களும் 30 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். பெஞ்சமின் நெதன்யாஹுவின் அரசு, இந்த வன்முறையை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. நீதித் துறையை முழுமையாக மாற்றியமைப்பது போன்ற மற்ற விவகாரங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. காஸாவில் உள்ள நிலைமையை “ஸ்திரமான ஸ்திரத்தன்மையின்மை” என்று குறிப்பிட்ட இஸ்ரேலிய ராணுவம், நிலைமை கொந்தளிப்பாக இருந்தாலும் கட்டுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டது. இதற்குப் பிறகுதான், 1973ல் எகிப்தும் சிரியாவும் சேர்ந்து இஸ்ரேலைத் தாக்கிய யோம் கிப்பூர் யுத்தத்தை நினைவுபடுத்தும் விதத்திலான ஹமாஸின் தாக்குதல் நடந்தது. 1990களிலும் 2000களிலும் தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்திவந்த இஸ்லாமியப் போராளி அமைப்பான ஹமாஸ், பொதுமக்களுக்கும் வீரர்களுக்கும் இடையில் வித்தியாசமே பார்க்காமல், இஸ்ரேலின் சமீபத்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு கொடுந்தாக்குதலை நடத்தியது.

இந்தத் தாக்குதல் தார்மீக ரீதியாகவும் யதார்த்த ரீதியாகவும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இஸ்ரேலியப் பொதுமக்களுக்கு எதிரான ஹமாஸின் கண்மூடித்தனமான தாக்குதல் வெறுக்கத்தக்கது. பாலஸ்தீன லட்சியங்களுக்கு இது எந்த விதத்திலும் உதவப்போவதில்லை. இதேபோல பொதுமக்கள் தாக்கப்படுவது பற்றி கவலைப்படாத இஸ்ரேல், முற்றுகையிடப்பட்ட பகுதியைத் தாக்கும்போது இன்னும் அதிகமான பாலஸ்தீனியர்கள் அபாயத்திற்குள்ளாவார்கள். அதே நேரம், நவீன வரலாற்றிலேயே நீண்ட காலம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக இருக்கும் பாலஸ்தீனிய பிராந்தியம் ஒரு புகையும் எரிமலையாகவே இருக்கிறது. அமைதிக்கான எந்த நடவடிக்கையும் அங்கு இல்லை. மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து கட்டுமானப் பணிகளைச் செய்துவருகிறது. பாதுகாப்புத் தடைகள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றை அமைத்து பாலஸ்தீனியர்களின் நடமாடத்தைக் கட்டுப்படுத்துகிறது. பாலஸ்தீனியர்களை தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க பலப் பிரயோகம் செய்யவோ, கூட்டு தண்டனைகளை வழங்கவோ தயங்குவதேயில்லை. இந்த நிலை நீடித்துக்கொண்டே இருப்பது பாலஸ்தீனியர்களை இன்னும் தீவிர நிலைப்பாடுள்ளவர்களாகவும் ஹமாஸை இன்னும் வலிமையானதாகவுமே மாற்றியிருக்கிறது. இஸ்ரேல் இப்போது யுத்தத்தை அறிவித்திருக்கிறது. ஆனால், தரை வழியாக ஊடுருவுவது, விமானத் தாக்குதல் போன்ற கடந்த காலத் தாக்குதல்கள் ஹமாஸை சிறிதும் பலவீனப்படுத்தவில்லை. சமீப ஆண்டுகளில் மேற்காசியப் பகுதிகளில் புவிசார் அரசியலில் சில அணிமாற்றங்கள் நடந்திருக்கின்றன — இஸ்ரேல், அரபு நாடுகளிடம் ஒத்துழைப்பு ஏற்பட்டிருக்கும் அதே நேரம், ஈரான் - சவுதி இடையிலான உறவுகளில் இருந்த இறுக்கம் தளர்ந்திருக்கிறது. ஆனால், இந்த மாற்றங்களின்போது மேற்காசியாவின் உண்மையான பாவச்செயலான பாலஸ்தீன் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டுகொள்ளப்படவில்லை. நிலைமை அப்படியே தொடரும்படி விடப்பட்டது. இந்த நிலை இப்படியே நீடிப்பதற்கு விளைவுகள் இருக்கும். அந்தப் பிராந்தியத்தில் நீடித்த அமைதியும் ஸ்திரத்தன்மையும் வர வேண்டுமென இஸ்ரேலும் பிராந்திய சக்திகளும் சர்வதேச நாடுகளும் விரும்பினால் பாலஸ்தீனக் கேள்விக்கு தீர்வைத் தேடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரதானமான பிரச்சனைக்குத் தீர்வு காணுவதை விட்டுவிட்டு, ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவது மேலோட்டமான ஒன்றாகவே இருக்கும்.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT