ADVERTISEMENT

ஒளிரும் காட்சி 

Published - October 10, 2023 11:34 am IST

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் மிக சிறந்த எண்ணிக்கையிலான பதக்கங்கள், பல்வேறு போட்டிகளிலிருந்து வந்தன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இந்தியா நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றது அதன் விளையாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தருணம். இந்த மகத்தான சாதனை, ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் தொடக்கத்தைகூட மறைக்கும் உற்சாக நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றிருக்கிறது. இந்தியா வென்ற 107 பதக்கங்கள் (28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம்) ஜகார்த்தாவில் 2018ல் பெற்ற முந்தைய உச்சமான 70ஐ விட அதிகம். டிராக் அண்ட் ஃபீல்ட் (6), துப்பாக்கி சுடுதல் (7), வில்வித்தை (5) ஆகிய 3 பிரிவுகளிலிருந்து அதிக அளவில் தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது. மொத்தம் 22 வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகளின் பதக்க மேடையில் இந்தியா நின்றது, வெவ்வேறு விளையாட்டுகளில் நாட்டின் திறமை வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. படகோட்டிகள், ஸ்குவாஷ் வீரர்கள், கபடி நட்சத்திரங்கள் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணியினர் நன்றாக விளையாடினார்கள்; குதிரையேற்றத்தில் முதன்முறையாக தங்கப் பதக்கம் கிடைத்தது; ரோலர் ஸ்கேட்டிங், விண்ட் சர்ஃபிங், வுஷு மற்றும் செபக்தக்ராவ் ஆகியவற்றில் புதிய கதாநாயகர்கள் கிடைத்தார்கள். நீண்ட காலமாக பல்துறை விளையாட்டுகளில் இருந்து விலகியிருந்த கிரிக்கெட்கூட இப்போது களத்தில் குதித்தது. இரண்டு தங்கங்களுடன் இந்தியாவின் எண்ணிக்கைக்கு அது பங்களித்தது. இது காட்சிக்கான காலம். பெண்களுக்கான 50 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுத்ரியின் அற்புதமான ஆட்டம், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கிஷோர் ஜெனா முன்னணி ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ராவை வழிநடத்தி வெள்ளிப் பதக்கம் வென்றது போன்ற சில தருணங்கள் கூட்டு நினைவில் நிச்சயம் பதிந்திருக்கும்.

ஆனால், கண்டரீதியிலான இந்த விளையாட்டுப் போட்டிகளில் சில பதக்கங்கள் மற்றவற்றைவிட மதிப்புமிக்கவை என்று சொல்வது சற்று கடுமையானதாகக்கூட இருக்கலாம். பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் உலக அளவிலான மோதல்கள், ஆசிய மட்டத்தில் நடந்ததைக் காணும் நிலையில் அவை, வென்ற பதக்கங்களுக்கு கூடுதல் ஒளியை சேர்க்கின்றன. ஆண்கள் இரட்டையர் பாட்மிண்டனில் சாத்விக்சாய் ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி வென்ற தங்கம், ஆண்கள் ஒற்றையர் பாட்மிண்டனில் எச்.எஸ். பிரணாய் வென்ற வெண்கலம், பெண்கள் இரட்டையர் டேபிள் டென்னிஸில் சீன உலக சாம்பியன்களான சென் மெங் மற்றும் வாங் யிடி ஆகியோரை வீழ்த்தி சுதீர்தா- அய்ஹிகா முகர்ஜி ஜோடி வென்ற வெண்கலப் பதக்கம் எல்லாம் இந்த வகையில் சேர்ந்தது. 28 தங்கங்களில், 12 பதக்கங்கள் ஒலிம்பிக்கில் இடம்பெறக்கூடிய விளையாட்டுகளில் இருந்து கிடைத்திருக்கின்றன என்பதை வைத்து கூடுதல் கண்ணோட்டங்களை பெறலாம். இங்கும்கூட, நீரஜின் 88.88 மீட்டர் எறிதல் போன்ற ஒரு சில வெற்றிகள் மட்டுமே உலக சாதனையாக இருக்கின்றன. இந்திய விளையாட்டு வெகுதூரம் வந்துவிட்டாலும், உலகத் தரத்தோடு ஒப்பிடும்போது உள்ள இடைவெளியைக் குறைக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்பதை இது காட்டுகிறது. மத்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு உதவ ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால் திறமையற்ற நிர்வாகிகள், கூட்டமைப்புகளில் கோஷ்டி பூசல், முடிவில்லாத நீதிமன்ற மோதல்கள், ஊக்கமருந்து என்கிற மிகப்பெரிய பிரச்னை ஆகியவை அவர்களை தொடர்ந்து அச்சுறுத்துகின்றன. தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால் உடலும் கால்களும் தடுமாறக் கூடாது.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT