ADVERTISEMENT

உள்ளூர் உணர்வுகள்

Published - October 11, 2023 09:27 am IST

கார்கில் வாக்காளர்கள் அளித்துள்ள அரசியல் செய்திக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.

லடாக் சுயாட்சி மலைப்பிரதேச மேம்பாட்டுக் கவுன்சில் - கார்கில் பகுதிக்கு நடந்த தேர்தலில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2019ல் கார்கில் நேரடியாக மத்திய அரசின் ஆட்சியின் கீழ் வந்ததில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக தனது தளத்தை விரிவுபடுத்த பாரதீய ஜனதா கட்சி மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்திருக்கிறது. 2019க்குப் பிறகு கார்கில் வாக்காளர்கள் அளித்த முதல் செய்தி இது. முஸ்லிம்கள் அதிகமுள்ள கார்கில் பகுதியும் பௌத்தர்கள் அடங்கிய லே மாவட்டங்களும் அடங்கியுள்ள லடாக்கிற்கு யூனியன் பிரதேச அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த அரசியல்சாஸன சிறப்பு நிலையை ரத்து செய்து, மத்திய அரசு அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. 2020ல் லடாக் சுயாட்சி மலைப் பிரதேச கவுன்சில் மற்றும் லேவுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தலை நடத்த வேண்டுமென ஜம்மு - காஷ்மீரில் உள்ள கட்சிகள் கோரிவந்தன. 26 உறுப்பினர்களைக் கொண்ட கார்கிலில் தேசிய மாநாட்டுக் கட்சி 12 இடங்களையும் காங்கிரஸ் பத்து இடங்களையும் பிடித்தன. பா.ஜ.கவுக்கு இரண்டு இடங்களே கிடைத்தன. இந்தத் தேர்தலில் 77.61% பேர் வாக்களித்தனர். படிப்பதற்காகவும் வேலை பார்ப்பதற்காகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்தவர்கள் வாக்களிப்பதற்காகவே திரும்பிவந்தார்கள். உள்ளூர் வாக்காளர்கள் இந்தத் தேர்தலை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டார்கள் என்பதை இது பிரதிபலித்தது. கார்கிலில் மொத்தமுள்ள 74,026 வாக்காளர்களும் மலைப் பகுதிகளில் பரவலாக வசிக்கிறார்கள்.

நிலம், கலாச்சாரம், வேலை, மொழி, சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் லடாக்கிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டுமென கடந்த நான்கு ஆண்டுகளாக பௌத்தர்களும் ஷியா முஸ்லிம்களும் போராடி வருகிறார்கள். ஜம்மு - காஷ்மீருடன் இணைக்க வேண்டும் அல்லது முழுமையான மாநில அந்தஸ்தைத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் நீடிக்கிறது. சாலை விரிவாக்கம், புதிய கல்விக்கூடங்கள், கீழ் மட்டப் பணிகளை உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே அளிப்பது போன்ற வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து கார்கிலில் தனது ஆதரவு தளத்தை விரிவாக்க நினைத்தது பா.ஜ.க. தேசிய மாநாட்டுக் கட்சியைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலை 2019ல் ஜம்மு & காஷ்மீரை பிரித்தது தொடர்பான பொது வாக்கெடுப்பாகவே கருதியது. இந்த ஆண்டு ஆகஸ்டில் லடாக் பகுதியை பைக்கில் சுற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நின்றார். பல்வேறு சமூக - அரசியல் - மதக் குழுக்களின் கூட்டணி இது. கார்கில் மாவட்டத்திற்கென தனியான மக்களவைத் தொகுதி, நிலம், வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை அரசியல்சாஸன ரீதியாக சிறப்பு வாக்குறுதிகள் ஆகியவற்றை இந்தக் கூட்டணி கோரிவந்தது. தற்போது லேவும் கார்கிலும் இணைந்து ஒரே மக்களவைத் தொகுதியாக இருக்கிறது. லடாக்கின் இறுதியான அந்தஸ்து என்னவாக இருக்கும் என்பது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம் என்பதுதான் பா.ஜ.கவுக்கு கார்கில் வாக்காளர்கள் அளித்திருக்கும் முக்கியச் செய்தி. சிறப்பு பாதுகாப்பு, அரசியல் சாசன ரீதியிலான அங்கீகாரம், தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றம் ஆகியவை இல்லாமல் வளர்ச்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அந்தப் பிராந்திய மக்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தாது என்பதையும் வாக்காளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT