ADVERTISEMENT

உறவுகளை சேதப்படுத்துதல் 

February 07, 2023 11:20 am | Updated 11:20 am IST

அமெரிக்க அரசியலில் சீனா எப்படி ஒரு தீவிரமான பிரச்னையாக இருக்கிறது என்பதை பலூன் சர்ச்சை காட்டியிருக்கிறது

சீன கண்காணிப்பு பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியிருப்பது, உலகின் இரு பெரும் சக்திகளுக்கு இடையிலான உறவில் உள்ள ஆழமான அவநம்பிக்கை பற்றிய ஒரு நினைவூட்டலாக இருக்கிறது. கடந்த வாரம் மொண்டானாவில் பலூன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அது ஒரு ராஜதந்திர நெருக்கடிக்கு இட்டுச்சென்றது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பிப்ரவரி 6ஆம் தேதி சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை அவர் ரத்து செய்தார். 2018ஆம் வருடத்துக்கு பிறகு ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாக இருந்திருக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைவதை தடுக்க பல மாத முயற்சிகளுக்கு பின்னர், நவம்பரில் ஜி-20 பாலி உச்சி மாநாட்டில் பைடன்-ஷி சந்திப்பின் விளைவாக இந்த பயணம் நிகழவிருந்தது. இந்த முயற்சிகள் எவ்வளவு பலவீனமானவை என்பதை பலூன் சர்ச்சை அம்பலப்படுத்தியிருக்கிறது. அதிகரித்து வரும் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த உறவுகளின் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சிகளை இது சீர்குலைத்திருக்கிறது. இந்த பலூன் “குடிமக்கள்” பயன்பாடு சார்ந்தது (வானிலையியல் தொடர்பானது) என்றும் அது திசை மாறிவிட்டது என்றும் சீனா தொடர்ந்து சொல்லி வருகிறது. பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதை “அதீதமான’ எதிர்வினை என்றும் விமர்சித்திருக்கிறது. ஆனால் பிளிங்கன் பயணத்துக்கு முன்னதாக ஒரு கண்காணிப்பு பலூனை தனது வான்வெளியில் ஆழமாக நிறுத்தியிருப்பதை தன்னைத் தூண்டிப் பார்ப்பதாகத்தான் அமெரிக்கா எடுத்துக் கொண்டிருக்கிறது. சீனாகூட இப்படியொரு விஷயத்தை பொறுத்துக் கொள்ளாது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அமெரிக்க வானில் இது போன்ற கண்காணிப்பு பலூன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இது முதல் முறையல்ல என்று சொல்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள். டிரம்ப் ஆட்சியின் போதும் இப்படியொரு நிகழ்வு நடந்தது. ஜப்பானில் 2020 மற்றும் 2021லும் இந்தியாவின் அந்தமான் தீவுகளில் கடந்த வருடமும் பலூன்கள் தென்பட்டன. ஆனால் மூன்று அரசுகளும் பலூன்களை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மேம்பட்ட செயற்கைக்கோள்களால் இயக்கப்படும் நுண்ணறிவு யுகத்தில், பலூன்கள் சுட்டு வீழ்த்தப்படும் அளவுக்கு முக்கியமானவை அல்ல என்ற முடிவுக்கு அவை வந்திருக்கலாம். எதிர்காலத்தில் இது போன்ற ஊடுருவல்களை எப்படி கையாள்வது என்பதை மறுபரிசீலனை செய்ய இனி இந்தியாவும் ஜப்பானும் நினைக்கலாம். சீனாவைப் பொறுத்தவரையில் உளவுத் தகவல்களை சேகரிப்பதற்கு புதிய, பிரச்னைகளை தூண்டக்கூடிய, கருவியைப் பயன்படுத்துவதன் நன்மைகளையும் விளைவுகளையும் பரிசீலித்துப் பார்ப்பது சரியாக இருக்கும். மொண்டானாவில் தென்படாமல் இருந்திருந்தால், ஒரு வேளை பைடன் நிர்வாகம் அந்த பலூனை அப்படியே செல்லவும் விட்டிருக்கக்கூடும். பலூனை முன்பாகவே சுட்டு வீழ்த்தாததற்கு உள்நாட்டில் கடுமையான விமர்சனங்களை பைடன் நிர்வாகம் எதிர்கொண்டது. பிளிங்கன் பயணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட அதன் எதிர்வினை, சீனா எப்படி அமெரிக்க அரசியலில் ஒரு சூடான பிரச்னையாக மாறியிருக்கிறது என்பதை காட்டுகிறது. ஒரு முக்கியமான உறவு எப்படிக் கையாளப்படுகிறது என்பதை இந்த நிகழ்வு கட்டுப்படுத்துகிறது. 2001ல், சீனாவின் ஹைனான் தீவில் அமெரிக்க உளவு விமானமும் சீனாவின் போர் விமானமும் மோதியதற்குப் பிறகும்கூட அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கிடையிலான பதற்றங்களைத் தணிக்க முடிந்தது. தீவிரமடைந்து வரும் போட்டி, தைவான் பிரச்னையில்  அதிகாரத்தை காட்டுதல் மற்றும் உள்நாட்டில் தீவிரமான விவாதங்கள் போன்ற பின்னணியில் இப்போது அதே மாதிரி ஒரு நெருக்கடி எழுந்தால் அதிலிருந்து மீளும் பாதையை கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும்.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT