ADVERTISEMENT

நம்பிக்கைக் கீற்று

January 10, 2023 11:33 am | Updated 11:33 am IST

ஒரு பாலீர்ப்பு தம்பதிகளுக்கான உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றம் உறுதியான உத்தரவை வழங்க வேண்டும்

ஒரு பாலீர்ப்பு திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி பல உயர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருக்கும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தனக்கு மாற்றியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை. பிப்ரவரி 15க்குள் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களுக்கும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோரைக் கொண்ட அமர்வு கேட்டுக் கொண்டிருக்கிறது. மார்ச் 13ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதற்காக இந்த வழக்கு பட்டியலிட்டிருக்கிறது. ஒரு பாலீர்ப்பு திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான அதிகாரப்பூர்வ தீர்ப்பு வேண்டுமென்றுதான் மனுதாரர்கள் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக 1954ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் இது கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு ஒரு தெளிவை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்கள் மதத்தின் தனிப்பட்ட சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ள முடியாத தம்பதிகள் திருமணம் செய்துகொள்ள இந்தச் சிறப்பு சட்டம் அனுமதிக்கிறது. கே.எஸ். புட்டசாமி (2017) வழக்கில் தனியுரிமையை நிலைநிறுத்திய முக்கியமான தீர்ப்புக்கு பின்னும் நவ்தேஜ் ஜோஹர் (2018) வழக்கில் தன்பாலீர்ப்பை குற்றமற்றதாக்கிய தீர்ப்புக்கு பின்னும், பால்புதுமை சமூகத்தினரின் உரிமைகள் குறித்த நிச்சயமற்றத்தன்மையை முடிவுக்கு கொண்டு வரும் வழியை நீதிமன்றங்கள் காட்டியிருக்கின்றன. எதிர்பாலீர்ப்பு தம்பதிகளுக்கு இருக்கும் அதே உரிமைகளை ஒரு பாலீர்ப்பு தம்பதிகளுக்கு மறுப்பது, வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு ஒப்பானது என்று மனுதாரர்கள் வாதிடுகிறார்கள். இந்த உரிமைகள் அரசியல் சாசனத்தின் பிரிவு 14, 19 மற்றும் 21ஐயும் இந்தியா கையெழுத்திட்டு இருக்கும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 16ஐயும் உள்ளடக்கியது. “வயதுவந்த ஆண்களும் பெண்களும் இனம், தேசியம், மதம் போன்ற எந்த வரம்பும் இல்லாமல், திருமணம் செய்து கொள்வதற்கும் குடும்பத்தை நிறுவுவதற்கும் உரிமை இருக்கிறது” என்று பிரிவு 16 சொல்கிறது. ஒரு பாலீர்ப்பு திருமணங்களை எதிர்ப்பதாக சொல்லும் மத்திய

அரசின் பதிலை முதலில் உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ள வேண்டும். நீதித்துறையின் தலையீடு “தனிப்பட்ட சட்டங்களின் நுட்பமான சமநிலையை மொத்தமாக குலைத்துவிடும்” என்று மத்திய அரசு ஏற்கனவே சொல்லியிருக்கிறது. சமூகத்தில் ஏற்கனவே பாரபட்சத்தை எதிர்கொண்டிருக்கும் பால்புதுமையினருக்கு, நீதிமன்றத்திலிருந்து தெளிவு தேவைப்படும் பிரச்னைகளும் இருக்கின்றன. சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவுகள் 5,6 மற்றும் 7ன் படி, தொடர்புடையவர்கள் மாவட்ட திருமண அதிகாரிக்கு திருமணம் குறித்த முன்கூட்டிய அறிவிப்பை தர வேண்டும். அந்த அதிகாரி அந்த அறிவிப்பை பொதுவில் வைத்து ஏதும் ஆட்சேபணைகள் இருந்தால் அதை கோரிப் பெற வேண்டும். கடந்த காலங்களில், கௌரவம் அல்லது சமூகம் என்கிற பெயரில் செயல்படுபவர்களிடமிருந்து சாதி கடந்த மற்றும் மதம் கடந்த திருமணங்கள் கடும் வன்முறையையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டிருக்கின்றன. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் நபர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று 2021ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. திருமண அறிவிப்பை கட்டாயமாக வெளியிடுவதும் ஆட்சேபணைகளுக்கு அழைப்பு விடுப்பதும் தனியுரிமை உரிமையை மீறுகிறது என்று கூறியது. ஆனால் பால்புதுமையினர், உச்ச நீதிமன்றத்திடமிருந்து இது குறித்து ஒரு தெளிவான உத்தரவை எதிர்பார்ப்பார்கள். தனிநபர்களின் உரிமைகள் குறித்து சமூகத்தில் ஒரு நுண்ணுணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு பரப்புரைகளும் மேற்கொள்வது அவசியம். ஒரு பாலீர்ப்பு திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் அதை செய்திருக்கும் 30 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையலாம். ஆசியாவில் தைவான் மட்டுமே அதனைச் சட்டபூர்வமாக்கியிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதைச் செய்து முன்னணியில் இருந்து வழிநடத்தலாம்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT