ADVERTISEMENT

நிவாரணத்தில் சிக்கல்

Published - December 30, 2023 10:41 am IST

பேரிடர் நிவாரணம் வழங்குவதற்கான அளவுகோல்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்

சமீபத்தில் தமிழ்நாட்டில் இரண்டு முறை பெய்த கனமழைக்குப் பிறகு வெள்ள நிவாரணம் தொடர்பாக மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடும் மக்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய தென் மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பச் செய்வதில் கவனமும் ஆற்றலும் செலுத்தப்பட்டிருந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மாநில இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் குறித்த மோதல் ஏற்பட்டிருக்கக்கூடாது. அதிர்ஷ்டவசமாக, மத்திய அரசின் ஆதரவு இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோதி உறுதி அளித்த நிலையில் நிலைமை சீரடைந்தது. முன்னதாக, தில்லியில் திரு. மோதியை சந்தித்த திரு. ஸ்டாலின், சென்னை பகுதிக்கு மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 7,033 கோடியும், இறுதி நிவாரண நிதியாக ரூ. 12,659 கோடியும் கோரியிருந்தார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (தென் மாவட்டங்களுக்கு) ரூ. 2,000 கோடி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார். மொத்தம் ரூ. 21,692 கோடியை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு கோரியிருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னதாக சென்னை பகுதியில் வான்வழி ஆய்வு நடத்தி, மாநில பேரிடர் மீட்பு நிதிக்கு இரண்டாவது தவணையாக ரூ. 450 கோடியை விடுவிப்பதாக அறிவித்தார். சென்னையில் வெள்ள நிவாரண திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சரவைகளுக்கு இடையிலான குழுக்கள் பார்வையிட்ட பின்னர் மாநில அரசு இப்போது மத்திய அரசின் புதிய அறிவிப்பை எதிர்பார்க்கிறது. திருமிகு. சீதாராமன் தனது செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியதைப்போல, எந்தவொரு இயற்கை பேரழிவையும் மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிப்பதில்லை. மத்திய அரசுக் குழுவின் மதிப்பீட்டிற்குப் பிறகுதான் எந்தவொரு இயற்கை பேரழிவும் கடுமையான இயற்கை பேரழிவாக வகைப்படுத்தப்படுகிறது. உத்தரகாண்டில் 2013ஆம் ஏற்பட்ட வெள்ளமும் கேரளாவில் 2018ல் ஏற்பட்ட வெள்ளமும் அப்படித்தான் வகைப்படுத்தப்பட்டிருந்தன. அப்படி அறிவிக்கப்பட்டால், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தை தேசிய பேரிடர் என்று அழைக்கும் பேச்சுக்கே இடமில்லை. நிவாரணம் என்று வரும்போது மத்திய அரசு தெளிவான வழிகாட்டுதல்களை உறுதிசெய்ய வேண்டும். மாநில பேரிடர் நிவாரண நிதி/தேசிய பேரிடர் நிவாரண நிதி வரம்பிலிருந்து நீண்டகால அல்லது நிரந்தர மறுசீரமைப்பு பணிகளை விலக்கி வைத்திருப்பது குறித்த தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வது குறித்தும் அது சிந்திக்க வேண்டும். கடுமையான பேரழிவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பேரழிவுக்குப் பிந்தைய நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, மத்திய நிதியுதவி திட்டங்களின் நெகிழ்வு-நிதியை 25 சதவீதத்தைவிட அதிகமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று மார்ச் 2021ல் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருப்பது குறித்து ஒரு வெளிப்படையான விவாதம் இருக்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இரண்டு நிதிகளின் விதிமுறைகளின் கீழ் எந்த நிவாரணமும் கிடைக்காது என்பதால், மாநிலத்தில் கிட்டத்தட்ட 1.4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்தத் துறைக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இறுதியாக, புயலால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடிய தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, அரசியல் சர்ச்சைகளுக்கு இடமளிக்காத வகையில் பேரிடர் மேலாண்மை குறித்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT