ADVERTISEMENT

மையப் புள்ளி

Published - October 12, 2023 11:01 am IST

மதவாத எதிர்ப்புக்கான ஒரு தளமாக சாதி ரீதியிலான அணிதிரட்டலை காங்கிரஸ் பயன்படுத்தக்கூடாது

இந்தியாவின் புவியியல் மையத்தில் உள்ள மத்தியப் பிரதேசத்தில் நவம்பரில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பா.ஜ.க) காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2018ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், தற்போது அம்மாநிலத்தில் பா.ஜ.கதான் ஆட்சியில் இருக்கிறது. காங்கிரசில் அரங்கேறிய கட்சி தாவல்களைப் பயன்படுத்தி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 18 ஆண்டுகளாக நிலவி வரும் ஆட்சிக்கு எதிரான மனநிலையை சில சாதுர்யமான நகர்வுகளாலும் தேர்தல் பரிசோதனைகளாலும் சமாளிக்க முடியும் என்று பா.ஜ.க நம்புகிறது. கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் பதவியில் நீடிக்க மாட்டார் என்பதை போதுமான அறிகுறிகள் மூலம் தெளிவுப்படுத்தியிருக்கிறது. நரேந்திர சிங் தோமர், ஃபகன் சிங் குலஸ்தே மற்றும் பிரகலாத் சிங் படேல் ஆகிய மூன்று மத்திய அமைச்சர்கள் உட்பட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க இந்த தேர்தலில் களமிறக்கியிருக்கிறது. சோர்வடைந்திருக்கும் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்த முடியும் என்று அந்த கட்சி நம்புகிறது. மாநில அரசு மீதும் திரு. சவுகானின் பணி மீதும் உள்ள முக்கியத்துவத்தை குறைத்து, பிரதமர் நரேந்திர மோதியின் தனிப்பட்ட பிம்பத்துக்கு முக்கியத்துவம் தருவது பா.ஜ.கவின் உத்தி. ஆதி சங்கராச்சாரியாரின் சிறப்பான சிலை திறப்பு போன்ற செயல்களின் மூலம் வெளிப்படும் இந்து அடையாள அரசியலின் ஒரே குரல் என்று கூறிக்கொள்ளும் அதே நேரத்தில் கட்சியின் பரப்புரை பழங்குடியினர் போன்ற சமூகக் குழுக்கள் மீது கவனம் செலுத்துகிறது.

2020ல் ஏற்பட்ட பிளவின் காயங்களிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கும் காங்கிரஸ், இந்த சுற்றில் அந்த பின்னடைவை தனக்குச் சாதகமாக மாற்ற முயற்சிக்கிறது. காங்கிரசிலிருந்து விலகியவர்கள் நுழைந்ததால் பா.ஜ.கவில் அதிகார சமநிலை குறிப்பாக குவாலியர்-சம்பல் பகுதியில் குலைந்திருக்கும் நிலையில், இது காங்கிரசுக்கு தேர்தல் ஆதாயங்களை பெற்றுத் தரக்கூடும். கட்சித் தாவல்கள் காரணமாக மேல் மட்டத்தில் கொஞ்சம் எடை குறைந்ததிருப்பது, உள் விவகாரங்களை இன்னும் சிறப்பாக சமநிலைப்படுத்த காங்கிரசுக்கு உதவியது. கட்சியின் பரப்புரைக்கான பொறுப்பாக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் கமல் நாத்தின் முடிவுகளை இப்போது அனைத்துத் தலைவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அம்மாநிலத்தில் உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது அவருக்கு இருக்கும் ஆதரவு, கட்சிக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது. நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து, தனது இயல்பிலிருந்து விலகி சாதி அரசியலில் காங்கிரஸ் நுழைந்திருப்பது, மத்திய பிரதேசத்தில் பரிசோதனைக்கு உள்ளாகும். ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களைப் போலல்லாமல் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசில் கணிசமான எண்ணிக்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் இல்லை. போட்டியின் இருமுனைத் தன்மையை மாற்ற முயற்சிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் மறைவான தாக்குதல்களையும் கட்சி சமாளிக்க வேண்டியிருக்கும். இந்து அடையாள அரசியல் என்ற பிரச்னையை மிகக் கவனமாக கையாள வேண்டியதும், போட்டியில் பின்தங்கும்போது பா.ஜ.க உடனடியாக தேர்ந்தெடுக்கும் மதவாத பிளவு என்கிற பாதையை தவிர்ப்பதும்தான் இப்போது காங்கிரஸ் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT