ADVERTISEMENT

அவசியமான வெளிப்பாடு

Updated - January 26, 2023 11:05 am IST

Published - January 26, 2023 10:58 am IST

உளவுத் துறை தகவல்களை கொலீஜியம் பகிர்வதில் சட்ட அமைச்சருக்கு உள்ள ஆட்சேபனைகளுக்கு எந்த தகுதியும் இல்லை.

நீதித்துறையில் நியமிக்கப்படக் கூடியவர்கள் பற்றிய உளவுத்துறை தகவல்களில் சிலவற்றை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பகிர்ந்தது பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு சொல்வதுபோல கவலைக்குரியதோ தவறானதோ ஒன்றும் இல்லை. சொல்லப்போனால், அரசு எழுப்பிய ஆட்சேபனைகளின் தன்மையை கொலீஜியம் வெளியிட்டது, விவாதத்தின் வெளிப்படத்தன்மைக்கு உதவியிருக்கிறது. கொலீஜியம் பரிந்துரைக்கும் அல்லது பரிசீலிக்கும் பெயர்களைப் பற்றிய உளவுத்துறை மற்றும் இந்தியாவின் அயலக உளவு அமைப்பான ரிசர்ச் அண்ட் அனலிஸிஸ் விங் (ரா) ஆகியவற்றின் அறிக்கைகள் தன்னியல்பிலேயே நுண்ணுணர்வு கொண்டவை என்கிற அனுமானத்தை ஏற்பது கடினம். நியமனத்துக்காக பரிசீலிக்கப்படும் ஒரு வழக்கறிஞரின் இணையர் வெளிநாட்டவர் என்பதால் அவரது தகுதி குறித்த கேள்விகளை ‘ரா’ எழுப்புவதாக கொலீஜியம் வெளியிட்ட தகவல்கள் சொல்கின்றன. அவர்களது சமூக ஊடக பதிவுகளின் அடிப்படையில், பாரபட்சமற்ற செயல்பாடுகள் குறித்த சந்தேகங்களை வேறு இரண்டு வழக்கறிஞர்கள் பற்றி உளவுத்துறை அறிக்கைகள் எழுப்பியிருப்பதாகவும் தெரிகிறது. முந்தைய பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், அரசு எழுப்பிய ஆட்சேபனைகளை ஒவ்வொன்றாக பரிசீலனைக்கு எடுத்து, கொலீஜியம் பேச வேண்டியிருந்தது. இந்த கூற்றுகளை மறுக்க வேண்டிய நிலையில், அவற்றை வெளிப்படுத்தியதில் முறையற்றது என்று எதுவும் இல்லை. இந்த மூன்று சமீபத்திய விஷயங்களிலும், வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் நியமனங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர்களின் பெயர்களைப் பொறுத்தவரையில் உளவுத்துறை அறிக்கைகளில் திடுக்கிடும் தகவல்கள் எதுவும் இல்லை. தவிர, அதிகாரிகளின் அடையாளத்தையோ அல்லது அவர்களது ரகசிய வேலைகளையோ சமரசம் செய்யும் முக்கியமான தகவலும் இல்லை. தமது அறிக்கைகள் பொதுவில் வைக்கப்பட்டால் உளவுத்துறை அதிகாரிகள் “ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பார்கள்” என்று எந்த அடிப்படையில் திரு.ரிஜ்ஜு கூறினார் என்பதில் தெளிவில்லை. அறிக்கைகளின் ஒரு தொகுப்பு மட்டுமே பொதுவெளியில் இருக்கிறது. சொல்லப் போனால், கொலீஜியத்துடன் தொடர்புகொள்ளும்போது, அரசு உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்ட வேண்டுமா என்பது கேள்விக்குரியது. எந்தவொரு நிறுவனத்தின் பேரையும் குறிப்பிடாமல் அரசியல் கருத்துகள் அல்லது சமூக ஊடக பதிவுகளின் அடிப்படையிலேயே கூட அரசு தானாகவே ஆட்சேபனைகளை எழுப்பியிருக்கலாம். பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு ஏதும் குற்றப் பின்னணி கொண்டவர்களாகவோ தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவோ இருந்திருக்கிறார்களா என்பதை அறிய உளவுத்துறை அமைப்புகள் சரிபார்ப்பது நியமன செயல்முறைகளில் ஒரு பகுதி. அதனால் அது போன்ற ஆட்சேபனைகளை எழுப்புவதற்கு எந்தவொரு நிறுவனத்தையும் மேற்கோள் காட்ட வேண்டியதில்லை. கொலீஜியம் முறையிலான நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று விமர்சித்து வரும் அரசு, கொலீஜியத்தின் அளவுக்கு அதிகமான வெளிப்பாடுகள் பற்றி கவலைப்படுவதாகச் சொல்வது மிகுந்த முரணானதும் கூட. சில பரிந்துரைகள் பற்றி மௌனம் காப்பதோடு, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் மூலமாகவும், வேறு சில பரிந்துரைகளை அவசர அவசரமாக அங்கீகரிப்பதன் மூலமாகவும் அரசும் இந்த வெளிப்படையற்ற நிலைக்கு பங்களித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. அரசு கொள்கைகள் பற்றி விமர்சனப்பூர்வமாக பதிவுகள் இடும் சிலரின் தகுதி கேள்விக்குரியதாக்கப்படும்போது, ஆளும் கட்சிக்கு அரசியல் ரீதியாக ஆதரவாக இருக்கும் வழக்கறிஞர்கள் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அமர்வுகளில் இடம் பெறுகிறார்கள் என்கிற உண்மையையும் அது புறக்கணிக்கிறது.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT