ADVERTISEMENT

மிகக் கடினமான பணி

Published - October 09, 2023 12:02 pm IST

வட்டி விகிதங்களை உயர்த்தாததன் மூலம், வளர்ச்சி மந்தமடைவது குறித்த கவலைகளை ரிசர்வ் வங்கி வெளிப்படுத்துகிறது

‘அதிக பணவீக்கம்’ பேரியல் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஏற்படுத்தும் பெரும் ஆபத்து குறித்து மத்திய வங்கி எச்சரித்திருக்கும் நிலையில், வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு முடிவெடுத்திருக்கிறது. இது நாணய அதிகாரிகள் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கிறார்கள் என்பதற்கான ஒரு தெளிவான அறிகுறி. ஒப்பீட்டளவில் சாதகமான முதல் காலாண்டுக்குப் பிறகு, ஒட்டுமொத்த சில்லறைப் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கணிப்பான 4.6 சதவீதத்துக்கு எதிராக சராசரியாக 4.63 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணின் அடிப்படையிலான விலைவாசி உயர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களைக் கொண்ட கடைசி காலாண்டில் முறையே 7.44 சதவீதம் மற்றும் 6.83 சதவீதம் என்கிற அளவில் கூர்மையாக அதிகரித்தன. பணவீக்க போக்குகள் குறித்த தனது தவறான மதிப்பீட்டை மறைமுகமாக ஒப்புக்கொண்ட நாணயக் கொள்கை குழு கடந்த வாரம் சராசரி இரண்டாம் காலாண்டு பணவீக்கத்திற்கான அதன் கணிப்பை 20 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு உயர்த்தியது. அதாவது ஆகஸ்ட் மாத கணிப்பான 6.2 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ரிசர்வ் வங்கியின் முன்கணிப்பு நியாயப்படுத்தப்பட வேண்டுமானால் செப்டம்பர் மாதத்தில் மொத்த எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாகக் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அது அதீத நம்பிக்கையாகத் தோன்றுகிறது. இப்போதைக்கு, உள்நாட்டு எல்பிஜி விலைகள் சமீபத்தில் குறைக்கப்பட்டிருப்பது, காய்கறி விலைகள் குறைந்திருப்பது ஆகியவை விலை அழுத்தங்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று நாணய கொள்கைக் குழு நம்புகிறது. ஒட்டுமொத்த நாணயக் கொள்கை நிலைப்பாட்டை பலவீனப்படுத்தும் அளவிற்கு பணப்புழக்கம் உயரக்கூடும் என்று நம்புவதற்கான காரணம் இருந்தால், அமைப்பில் இருந்து அதிகப்படியான நிதியை உறிஞ்சுவதற்கு திறந்த சந்தையில் பத்திரங்களை விற்க ரிசர்வ் வங்கி தயாராக இருப்பதை ஆளுநர் சக்திகாந்த தாஸ் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கட்டுப்பாடற்ற அளவில் பணவீக்கம் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளிலிருந்து ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதை மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில், ரிசர்வ் வங்கி தான் சொல்வதை செய்ய விரும்பாமல், வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தவும் விரும்பாமல் இருக்கிறது என்பது, வளர்ச்சி வேகம் இன்னும் பலவீனமாகவே உள்ளது என்ற அறிவிக்கப்படாத கவலையை பிரதிபலிக்கிறது. பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகள் குறித்த என்.எஸ்.ஓ. தரவுகளின் நேர்மை குறித்த சமீபத்திய விவாதம் மற்றும் முதல் காலாண்டில் 7.8 சதவீத அசலான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை முன்வைக்கப் பயன்படுத்தப்பட்ட முறை மிகை மதிப்பீட்டிற்கு வழிவகுத்திருக்கலாம் என்ற கவலை, நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்ணோட்டத்தில் பொருளாதார முன்னறிவிப்பு செய்பவர்களின் அதிகரித்த எச்சரிக்கையுணர்வுடன் இணைந்து பார்க்கப்பட வேண்டும். இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதியில் உள்ள பலவீனம் மற்றும் சீரற்ற பருவமழை காரணமாக முக்கியமான எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் சம்பா பருவ விதைப்பில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும், 2024 நிதியாண்டில் 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஏற்படும் என்ற ரிசர்வ் வங்கியின் கணிப்புக்கு முன்னிருக்கும் முக்கியமான அபாயங்கள் என்று திரு. தாஸ் ஒப்புக்கொண்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கொள்கை கூட்டத்திற்குப் பிறகு ரூபாய் மதிப்பு ஏற்கனவே சுமார் 0.7 சதவீதம் பலவீனமடைந்திருக்கும் நிலையில், வட்டி விகிதங்களை உயர்த்தத் தவறினால், ரிசர்வ் வங்கியும் பணவீக்கத்தை இறக்குமதி செய்து வெளித்துறைகளின் பாதிப்புகளை அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT