ADVERTISEMENT

வலியை குறைப்பது

February 27, 2023 05:14 pm | Updated 05:14 pm IST

பாலின சமத்துவத்துக்கான பாதையில் உள்ள அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும்

பாலின சமத்துவத்தை நோக்கிய பாதையில் உள்ள சில தடைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்னும் பல தடைகள் இருக்கின்றன. இன்றைய நிலையை அடைய பெண்கள் கடுமையாக போராடியிருக்கிறார்கள். உயர்கல்வி மற்றும் பணி வாய்ப்புகள் காரணமாக, பணியிடத்தையும் குடும்பத்தையும் சமன்படுத்தக் கூடிய கனவு சாத்தியமாகியிருக்கிறது. ஆனாலும், தம்பதியினருக்கு இடையிலான சமநீதி இன்னும் பலருக்கு நிஜமாகவில்லை. மகப்பேறு நலன் தொடர்பான உரிமைகளுக்கான கடுமையான போராட்டங்கள் இங்கு நடந்திருக்கின்றன. ஆனால் பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் கொள்கை மாற்றங்களை கொண்டுவர அரசுகளை வலியுறுத்தி வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்தியாவில், 1961ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட மகப்பேறு பயன் சட்டம் பெண்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குவதற்காக அவ்வப்போது திருத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு முன்பு 12 வாரங்களாக இருந்தது தற்போது 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான், மாதவிடாய் கால விடுப்பு குறித்த கொள்கையை உருவாக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை அணுகுமாறு ஒரு மனுதாரருக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதைப் பார்க்க வேண்டும். இதில் பல்வேறு “பரிமாணங்கள்“ இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, ஒரு உயிரியல் செயல்பாடு பெண்களுக்கு வேலை வழங்குபவர்களுக்கு “ஊக்கமிழக்கச் செய்யும்” ஒன்றாக இருக்கக்கூடாது என்றும் சொன்னார்கள். மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் வலி விடுப்பு வழங்குவதற்கான விதிகளை உருவாக்குவதற்கு மாநிலங்களுக்கு உத்திரவிடக் கோரி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இவை ஏற்கனவே உள்ள களங்கத்தை அதிகப்படுத்தி, பாகுபாட்டை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சங்களும் இருக்கின்றன.

இந்தியாவில் கேரளாவிலும் பிஹாரிலும் மாதவிடாய்க் கால விடுப்பு அமலில் இருக்கிறது. உணவு டெலிவிரி செயலியான ஜொமாட்டோவும் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளின் தொழிலாளர் சட்டங்களில் இந்த கொள்கை இருக்கின்றன. ஆனால் பல பெண்ணியவாதிகள் இந்த நடவடிக்கையை, பாலின ரீதியில் பெண்களை எதிர்மறையாக வகைப்படுத்துவதை வலுப்படுத்தும் என்று சொல்லி விமர்சித்திருக்கிறார்கள். தவிர, இந்தியாவில், பள்ளி மற்றும் பணியிடங்களில், அதிலும் குறிப்பாக முறை சாரா துறையில் சுகாதார வசதிகள் இல்லாதது போன்ற பிற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியவை. 2010க்கும் 2020க்கும் இடையில், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 26 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக குறைந்திருப்பதை உலக வங்கித் தரவுகள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிக பெண்கள் பணிக்கு சேர்வதை ஊக்குவிப்பதற்கு, அவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வாய்ப்புகள் கிடைப்பது அவசியம்.  சில நேரங்களில், கழிப்பறைகள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக பெண்கள் பள்ளியைவிட்டு வெளியேறும் நிலை உருவாகிறது. அனைவருக்குமான சிறந்த இடமாக மாற முயற்சிக்க வேண்டிய உலகில், எந்தவொரு பிரிவினரும் பின்தங்காமல் இருப்பதை உறுதிசெய்வது பரந்துபட்ட சமூகம், அரசு ஆகியவற்றின் பொறுப்பு. பல நாடுகள் தரமான வாழ்க்கை முறையை வழங்குவதற்கு வாரத்திற்கு நான்கு நாள் வேலை என்ற திட்டத்தை முயற்சிக்கின்றன. இன்னும் சில நாடுகள், குழந்தை பிறந்தவுடன் தந்தைக்கான விடுப்பை வழங்குகின்றன. இதனால் குழந்தை வளர்ப்பு சமமாக பகிர்ந்து கொள்ளப்படுவதுடன் பெண்களை பணியில் அமர்த்துவதை பாதகமான நிலையாக வேலை தருபவர்கள் பார்க்கவில்லை என்பதையும் உறுதி செய்கிறது. பாலின சமத்துவம் மற்றும் சமநீதிக்கான பாதையில் உள்ள அனைத்து தடைகளும் அகற்றப்பட வேண்டும்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT