ADVERTISEMENT

நெகிழ்வான எல்லைகள்

Published - December 21, 2022 11:06 am IST

பன்முகத்தன்மையை மதிக்கும் ஒரு அரசியல் பண்பாட்டில்தான் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளின் தீர்வு இருக்கிறது.  

கர்நாடகாவும் மகராஷ்டிராவும் தங்களுக்கு சொந்தமானது என்று கோரும் பகுதிகளையொட்டி இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் பிரச்னை சமீப வாரங்களில் மோசமானதாகவும் சத்தமானதாகவும் மாறியிருக்கிறது. வன்முறைக்கும் இட்டுச் சென்றிருக்கிறது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும் மகராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசும் பகிரங்கமாக மோதிக் கொண்டார்கள். இருவரும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள்தான். கர்நாடகாவில் உள்ள மராத்தி மொழி பேசும் பகுதிகளை மகராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்கள் இந்த வாரம் பெல்காமில் ஒரு மாநாட்டை நடத்தி தங்களது கோரிக்கையை மேலும் வலியுறுத்தினார்கள். அதில் கலந்துகொள்ள விரும்பிய மகராஷ்டிர அரசியல்வாதிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய காரணத்தால் அங்கு ஒரு கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது. அப்படியொரு நிலை ஏற்பட வேண்டும் என்று அழைப்பாளர்களும் ஏற்பாட்டாளர்களும் விரும்பியிருக்கலாம். 2006ஆம் ஆண்டிலிருந்து கர்நாடக சட்டமன்றத்தின் குளிர்காலத் தொடரை பெல்காமில் நடத்தும் வழக்கம்கூட, அந்த இடத்தின் மீது தனக்கு இருக்கும் அதிகாரத்தை வலியுறுத்தும் ஒரு செயல்பாடுதான். சமீபத்தில், மகராஷ்டிராவில் உள்ள சாங்கிலியின் 48 கிராமங்கள் மீது கர்நாடகாவுக்கு உரிமை இருப்பதாக திரு.பொம்மை கோரியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. வாக்குவாதங்கள் கடுமையாகி வரும் நிலையில், இரு முதல்வர்களையும் பிரச்னையை தணித்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருக்கச் சொல்லியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த விஷயம் நீதிமன்ற கவனத்தில் இருக்கிறது. ஆனாலும், 1956ல் மொழிவாரியாக இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது உருவான காரணிகளுக்கு தொழில்நுட்ப ரீதியிலோ சட்ட ரீதியிலோ தீர்வுகள் அவ்வளவு எளிதாக இல்லாத காரணத்தால் நீதிமன்றத்தால் எதுவும் பெரிதாக செய்ய இயலவில்லை. பல்வேறு மொழிக் குழுக்களுடன் நேர்த்தியாக பொருந்தக்கூடிய

அரசியல் பகுதிகளை உருவாக்குவது இந்தியாவில் சாத்தியமில்லை. அதனால் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் மொழிவாரி சிறுபான்மையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறப்புரிமைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்த யதார்த்ததை மதிக்காததாலேயே மகராஷ்டிராவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையில் மோதல் உருவாகியிருக்கிறது. 1957ல் கர்நாடகாவில் உள்ள 814 கிராமங்களுக்கும் பெலகாவி, கார்வார், நிப்பானி ஆகிய நகர்புற குடியிருப்புகளுக்கும் மகராஷ்டிரா உரிமை கோரியது. கர்நாடகா அந்த உரிமைகோரல்களை நிராகரித்ததோடு அல்லாமல் மகராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர், சோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு உரிமை கோரத் தொடங்கியது. தவிர, மகராஷ்டிராவும் தெலுங்கானாவும் முறையே சந்திரபூர் மற்றும் ஆசிபாபாத் மாவட்டங்களில் எல்லை தாண்டிய மோதலில் சிக்கியிருக்கின்றன. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடம் பெயர மக்கள் விரும்புவதாக சமீப வாரங்களில் செய்திகள் அதிகமாக வரத் தொடங்கியிருக்கின்றன. வடகிழக்கில், மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்னைகள் காரணமாக பலர் உயிரிழந்திருக்கிறார்கள். எந்தவொரு சர்ச்சையிலும் நீதிமன்றத்தின் முடிவு வரை காத்திருப்பது புத்திசாலித்தனம். ஆனால் கூறுபோட முடியாத பன்முகத் தன்மைக்கு மதிப்பளிக்கும் ஒரு அரசியல் பண்பாட்டை தழுவி வளர்ப்பதன் மூலமாகவே நல்லிணக்கத்தை அடைய முடியும். இந்தியாவின் நிலபரப்பை பல அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகள் கடந்து செல்கின்றன. பிரிவினைவாத அரசியல் மூலம் புதிய நெருப்புகள் பற்றவைக்கப்பட்டால், நீதிமன்றம் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. அது இரட்டை எஞ்சினின் தோல்வியாகவே முடியும்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT