ADVERTISEMENT

அதீதமான செயல்பாடு

September 26, 2022 11:42 am | Updated 11:43 am IST

டிஜிட்டல் செயலிகளைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பாக, அரசு தனியுரிமை பற்றிய தனது எண்ணத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

கடந்த வாரம் பொது மக்கள் கருத்துகளுக்காக வெளியிடப்பட்ட வரைவு தொலைதொடர்பு மசோதா, பல லட்சக்கணக்கான இந்தியர்கள் தினமும் பயன்படுத்தும் பலதரப்பட்ட டிஜிட்டல் செயலிகள் மீதும் ஓடிடி சேவைகள் மீதும் அரசின் கவலையளிக்கக் கூடிய தீவிர கண்காணிப்பைச் சுட்டுகின்றன. இந்தச் சேவைகளைத் தொலைதொடர்பு சேவைகளின் வரம்புகளுக்குள் கொண்டு வருவதன் மூலம், இதனைச் செய்ய முனைகிறது அரசு. அதற்கு அந்த சேவைகள் உரிமம் பெற வேண்டி வரும். இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் வெற்றிகரமாக அமலுக்கு வருமென்றால் இதெல்லாம் நடக்கும். அதாவது வாட்ஸப், ஜூம், நெட்ஃபிளிக்ஸ் போன்றவை தொலைதொடர்பு சேவைகளாக கருதப்படும். தகவல் தொடர்பு சட்டத்தின் வரையறைக்குள் வரும் எல்லா டிஜிட்டல் சேவைகளும் அப்படியே கருதப்படும். தொலைதொடர்பு சேவை என்பதன் பொருள் பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை முன் வைப்பதன் மூலம் அரசு இதை செய்ய நினைக்கிறது. இந்த புதிய விளக்கத்தின்படி, மின்னஞ்சல், ஒளிபரப்பு சேவைகள், குரல் அஞ்சல், குரல் - வீடியோ மற்றும் தரவு தகவல் தொடர்பு, இணையம் மற்றும்  பிராட்பேண்ட் சேவைகள், ஓடிடி சேவைகள் போன்ற அனைத்துமே தொலைதொடர்பு சேவைகளின் கீழ் வரும். இது தவிர, சில சேவைகள் குறித்து அரசு தனியாக அறிவிப்பும் வெளியிடலாம்.

21 ஆம் நூற்றாண்டின் யதார்த்தங்களை கையாள்வதற்கு தற்போது இருக்கும் இந்திய தந்தி சட்டம் 1885ன் கீழ் வரும் சட்ட கட்டமைப்புகள் அல்லாத ஒரு புதிய சட்ட கட்டமைப்பு இந்த நாட்டுக்கு தேவை என்பதை இந்த அரசு சொல்லியிருப்பதெல்லாம் சரிதான். ஆனால் இந்த நூற்றாண்டின் ஊடாக பரிணாம வளர்ச்சியடைந்திருப்பது தொழில்நுட்பம் மட்டுமல்ல, பயனர் உரிமை, தனியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றை பற்றிய ஒரு ஜனநாயக சமூகத்தின் புரிதலும் எதிர்பார்ப்புகளும் கூட வளர்ச்சியடைந்திருக்கின்றன. குடிமக்களின் தனியுரிமை என்பது அடிப்படை உரிமை என்று இந்த நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் சொல்லி வெகு நாட்கள் ஆகவில்லை. ஆனால் இவற்றின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது இந்த வரைவு ஏமாற்றமளிக்கிறது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் இந்த வரைவின் படி, “பொது அவசரநிலை ஏற்படும் போதும் அல்லது பொதுமக்களின் நலன் சார்ந்து ஒரு செய்தி பரவாமல் தடுக்கும்” அதிகாரம் இந்த அரசுக்கு இருக்கிறது. உரிமம் பெறும் நிறுவனம் தான் “சேவைகளை வழங்கும் நபர் பற்றிய அடையாளங்களை சந்தேகத்திற்கு இடமின்றி” தர வேண்டும் என்று வரைவு மசோதாவின் இன்னொரு பிரிவு கோருகிறது. கடந்த வருடம் தகவல் தொடர்பு விதிகளில்  இது போன்ற ஒரு பிரிவு கொண்டு வரப்பட்ட போது – தகவல் செயலிகள் “முதன்முதலாக தகவல் எங்கு, யாரால் உருவானது என்பதை அடையாளம் காணும் வகையில் அதன் கணினியில் மாற்றம் கொண்டு வர வேண்டும்” – அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  மறைகுறியீடாக்கத்தை உடைக்காமல், எல்லா தகவல் போக்குவரத்தையும் பாதிக்காமல் இது தொழில்நுட்பரீதியாக சாத்தியமா என்கிற சந்தேகத்திற்கும் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. பாதுகாப்பு குறித்த பெரும் சவால்களை குறைத்து மதிப்பிடுவது நோக்கமில்லை. ஆனால் சாதாரண மனிதருக்கு தரவு பாதுகாப்பு சட்டம் போன்ற போதிய சட்ட பாதுகாப்பு ஏதும் இல்லாமல் எல்லாவிதமான தொடர்புகளையும் கண்காணிக்கும் அரசின் தொடர் முயற்சிகள் மிகுந்த பிரச்னைக்குரியவை. பயனர்கள் பற்றியும் அவர்களது தனியுரிமை பற்றியும் தனது சிந்தனையை அரசு மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வரைவை மீண்டும் முதலில் இருந்து உருவாக்க வேண்டும்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT