ADVERTISEMENT

வேலையும் மனிதரும்

October 27, 2022 10:11 am | Updated 10:12 am IST

கட்சியை மகிழ்விப்பதற்காக தனக்கு முன்பிருந்தவர்கள் செய்த தவறுகளை ரிஷி சூனக் மீண்டும் செய்யக்கூடாது.

உலகின் பல ஜனநாயக நாடுகளில் இனதேசியவாத கட்சிகளும் பெரும்பான்மைவாத தீவிர வலதுசாரி கட்சிகளும் வளர்ந்து வரும் ஒரு காலகட்டத்தில், வெள்ளையர்களும் கிறிஸ்த்தவமும் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்தின் பிரதமராக  ஐரோப்பியரல்லாத, இந்து மதத்தை கடைபிடிக்கும் ரிஷி சூனக் அடைந்திருக்கும் உயரம் குறியீட்டளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிலாந்தின் முதல் வெள்ளையரல்லாத பிரதமராக அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது, கட்சியும் நாடும் எதிர் நோக்கியிருக்கும் பிரச்னைக்கு இன மற்றும் மதங்களைக் கடந்த தீர்வுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயார் நிலையில் இருப்பதை காட்டுகிறது. அதே நேரம், அவரது வெற்றி இந்தியாவில் சில தரப்பினராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை ஒரு காலத்தில் குடியேற்ற நாடாக ஆட்சி செய்த நாட்டின் அதிகாரத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்பதன் மூலம் ஒரு வரலாற்றுக் கடமை நிறைவேறியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தற்காலத்தின் கடும் யதார்த்தங்களை வைத்து சோதனை செய்து பார்த்தால் குறியீடுகளின் அதிகாரம் என்பது வரையறுக்கப்பட்டது. சொல்லப்போனால், எந்தச் சூழல்கள் காரணமாக அவர் இந்த உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறாரோ, அந்த சூழல்கள் புதிய தலைவராக அவருக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். 2010 பொது தேர்தல்களில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றிக்கு பிறகு பொறுப்பேற்கும் ஐந்தாவது பிரதமர் இவர். கடந்த இரண்டு மாதங்களில்  மூன்றாவது பிரதமர். அவருக்கு முன்பிருந்த லிஸ் டிரஸ் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உறுதி தந்தார். ஆனால் அவரது கொள்கை சார்ந்த நடவடிக்கைகளுக்கு எதிரான சந்தையின் எதிர்வினையாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிப்படையான எதிர்ப்பாலும் ஏழு வாரங்களில் பதவியிலிருந்து விலகினார்.  

2019ல் போரிஸ் ஜான்சன் தலைமையின் கீழ் கன்சர்வேட்டிவ் கட்சி முழுமையான வெற்றியை பெற்ற போது, முன்னாள் ஹெட்ஜ் நிதி மேலாளரான திரு.சூனக் அடுத்த மூன்று வருடங்களிலேயே கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருந்தபோதும் இப்போது அவர் பிரதமரின் அதிகாரபூர்வமான இல்லமான எண் 10, டௌனிங் சாலையில் குடியேறியிருக்கிறார். உட்கட்சி மோதலில் சிக்கியுள்ள ஒரு கட்சிக்கும் நிதிநிலை அறிக்கையில் 45 பில்லியன் டாலர் பற்றாகுறையை எதிர்நோக்கும், மந்த நிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளாதாரத்துக்கும் தலைமை ஏற்றிருக்கிறார். பண வீக்கம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில் நாடு வாழ்வாதார செலவுகளின் நெருக்கடியோடு போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரிடம் தருவதற்கு எந்தவொரு மாய நிவாரணமும் இல்லை. நிதிநிலை பற்றாகுறை அதிகமாகவும் சந்தைகள் பதற்றமாகவும் உள்ள சூழலில் அவர் செலவு-குறைப்பு நடவடிக்கைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிக பணவீக்கத்துடன் போராடிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து மக்களுக்கு அது கெட்ட சேதிதான். ரஷ்ய - யுக்ரைன் போர் தற்போதைக்கு முடிவுக்கு வராது என்பதால், எரிசக்தி பிரச்னையும், பணவீக்க அழுத்தமும் தொடரவே செய்யும். சந்தைகளை நல்லெண்ணத்துடன் வைத்திருப்பது மற்றும் அதிக பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்றவற்றுக்கு இடையில் ஒரு மெல்லிய கோட்டில் திரு. சூனக் நடக்க வேண்டியிருக்கும். அதே நேரம், வளர்ச்சியை மீண்டும் கொண்டு வருவதற்கும் பெரிய சீர்த்திருங்களை செய்ய வேண்டும். நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்பாக இருக்கலாம். இருந்தாலும் திரு. சூனக் குறைந்தபட்சம் எல்லாவற்றையும் புதிதாக தொடங்கியிருக்கலாம். பதவியேற்ற சில வாரங்களிலேயே திருமிகு. லிஸ் டிரஸால் உள்துறை செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, குடியேற்றத்திற்கு எதிரான கடும்போக்காளரும் பேரரசின் கடும் ஆதரவாளராகவும் அறியப்பட்ட சுயெல்லா பிரேவர்மேனை மீண்டும் நியமித்ததன் மூலம் திரு. சூனக் கலவையான சமிக்ஞைகளையே அனுப்புகிறார். மிகக் கொந்தளிப்பான அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் தனக்கு முன்பிருந்தவர்கள் போல அவரது விதியும் இருக்க கூடாது என்று திரு. சூனக் நினைத்தால், அவர்கள் செய்த தவறுகளை திரும்பவும் செய்யாத அளவுக்கு அவருக்கு துணிச்சல்  இருக்க வேண்டும்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT