ADVERTISEMENT

காகஸஸ் பிராந்தியச் சிக்கல்

September 19, 2022 11:33 am | Updated 11:33 am IST

ஒரு நீடித்த போர் நிறுத்தத்தை நோக்கி ஆர்மீனியாவும் அஜர்பைஜனும் பணியாற்ற வேண்டும்.

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜனுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் நடந்த வன்முறைகள் காகஸஸ் பகுதியில் இன்னொரு போர் பற்றிய அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. பிரச்னைக்குரிய நகொர்னோ-கரபக் பகுதியை முன்வைத்து 2020ல் பல வாரங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் மோசமான போர் நீடித்தது. அஜர்பைஜனுக்கு சில லாபங்கள் கிடைத்த நிலையில் இந்த போர், ரஷ்யா வலியுறுத்தலை அடுத்து முடிவுக்கு வந்தது. ஆனால் எப்போதாவது நடக்கும் பிரச்னைகள் காரணமாக பதற்றங்கள் அப்படியே இருந்தன. செவ்வாய் கிழமை நடந்த வன்முறை, 2020லிருந்து நடந்த வன்முறைகளிலேயே மிக மோசமானது. ஆர்மீனியாவும் அஜர்பைஜனும் ஒருவர் மீதொருவர் வன்முறையை தூண்டுவதாக புகார் சொல்கின்றன. ஆனால் ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, இந்த கலவரம் ஆர்மீனியப் பகுதியில் நடந்தது, அங்குதான் அதிக பாதிப்பும் இருந்தது. ஆர்மீனியாவின் பாதுகாப்பு நட்பு நாடான ரஷ்யா யுக்ரைனுக்கு எதிரான போரில், தான் பெற்ற ஆதாயங்களைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்த பிரச்னை வெடித்திருக்கிறது என்பது தற்செயலானதாக இருக்க வேண்டியதில்லை. ரஷ்யா முன்னெடுத்திருக்கும் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் உறுப்பினராக ஆர்மீனியா இருக்கிறது. நேட்டோ போன்ற விதிகளை கொண்டிருக்கும் இந்த அமைப்பு, ஒரு உறுப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பினர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலாக கருதப்படலாம் என்கிறது. உதவிக்காக ரஷ்யாவை நாடியது ஆர்மீனியா. ஆனால் ரஷ்யாவின் எதிர்வினை கவனமான ஒன்றாகவே இருந்தது. போர்ப் பதற்றத்தை தணிக்கச் சொல்லி, இன்னொரு போர்-நிறுத்தத்தை கொண்டு வந்ததாகச் சொல்லிக்கொண்டது.

 நகொர்னோ-கரபக் பிரச்னை சோவியத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தொடங்கியது. சோவியத் ஒன்றியம் உருவானபோது, ஆர்மீனியாவின் பெரும்பான்மை பகுதிகள், அஜர்பைஜன் சோவியத் குடியரசின் ஒரு பகுதியாயின. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு, ஆர்மீனியாவும் அஜர்பைஜனும் சுதந்திரமான குடியரசுகளாக ஆன நிலையில், கலவரங்கள் மீண்டும் வெடித்தன. நகொர்னோ-கரபக் பகுதியில் உள்ள ஆர்மீனிய கலகக்காரர்கள் தம்மை தற்காத்துக்கொள்ள அஸேரி படைகளுடன் போரிட்டு, ஆர்மீனியாவுடன் இணைந்தார்கள். ஆனால் அஜர்பைஜன் அதன்  உரிமைகோரல்களை கைவிடவேயில்லை. அந்த பிரதேசத்தைப் பற்றிய சமாதான உடன்படிக்கைக்கு இரு நாடுகளும் வந்தடைய முடியவில்லை. 1990கள் போலல்லாமல், இப்போது அஜர்பைஜனும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உறுதியாக இருப்பதாகவே தோன்றுகிறது. 2020ல் நடந்த மோதலின்போது, துருக்கியிடமிருந்து அதற்கு ராணுவ மற்றும் ராஜதந்திர உதவி கிடைத்த அதே நேரத்தில், ஆர்மீனியாவின் சார்பில் இந்த மோதலுக்குள் வர ரஷ்யா தயங்கியது. இப்போது தனது அண்டைப் பகுதிகளில் அதிகாரத்தை முன்னிறுத்தும் ரஷ்யாவின்  திறன் யுக்ரைன் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், துருக்கியின் ஆதரவை இப்போதும் பெற்றிருக்கும் எரிவாயு நிறைந்த அஜர்பைஜனை, இன்னும் கூடுதலான எரிவாயு தேவைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் நாடியிருக்கிறது. இந்த மண்டல ரீதீயான நகர்வுகள் அஜர்பைஜனுக்கு புதிய தைரியத்தை அளித்திருக்கிறது. ஆனால் அதன் லட்சியங்கள் எல்லோரையும் பெரிய விலையைக் கொடுக்க வைக்கும். ஆர்மீனியாவை தொடர்ந்து புறக்கணித்தால், மத்திய ஆசியாவிலும் காகசஸிலும் தனது ஆதிக்கத்தை ரஷ்யா இழக்க வேண்டியிருக்கும். ஆனால் அதே நேரம், இன்னொரு போரில் பங்கெடுப்பது என்பது சவால் நிறைந்ததாக இருக்கும். காகசஸில் ஏற்படும் ஒரு பிரச்னை, சர்வதேச எரிபொருள் சந்தைகளை  சீர்குலையச் செய்யும். அது எல்லா பொருளாதாரங்களையும் குறிப்பாக  எரிபொருள் பற்றாக்குறையில் உள்ள ஐரோப்பாவையும் பாதிக்கும். துருக்கியைப் பொருத்தவரையில், யுக்ரைனை முன் வைத்து ரஷ்யா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் சமநிலையை உருவாக்க முயற்சிக்கும் அதே நேரம், அண்டைப் பகுதியில் இன்னொரு போர் நடந்தால் அது அதன் வெளியுறவுத் துறை கொள்கைகளின் தேர்வுகளை இன்னும் குழப்பமாக்கும். இப்போது இந்த உலகின் கடைசி தேவை, இன்னொரு போர். அதனால் எல்லா தரப்புகளும் ஆர்மேனியாவுக்கும் அஜர்பைஜனுக்கும் இடையில் ஒரு நீடித்த போர் நிறுத்தத்தை கொண்டு வருவதோடு, நகொர்னோ-கரபக்கின் பிரச்னைக்குரிய மலைப்பகுதியில் அமைதியையும் உறுதிப்படுத்த வேண்டும்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT