ADVERTISEMENT

அதீதமான அடிபணிதல்

January 04, 2023 11:24 am | Updated 11:24 am IST

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சரி எனச் சொல்லியிருக்கும் உச்ச நீதிமன்றம், அரசை பொறுப்புக்குள்ளாக்கவில்லை

பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கை தொடர்பான விஷயங்களில் தேர்வு செய்யப்பட்ட அரசுகளின் முடிவுகளுக்கு ஆதரவாகத்தான் நீதிமன்றங்களின் முடிவுகள் இருக்கும் என்பது அடிக்கடி சொல்லப்படும் நீதிமன்றம் சார்ந்த ஒரு கருத்து. நிர்வாகத்தின் முடிவுகள் தான்தோன்றித்தனமாகவும் சட்டவிரோதமாகவும் இருக்கும்போது மட்டும் நீதிமன்றங்கள் தலையிடும்.  இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, புழக்கத்தில் இருந்த 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி செல்லாது என அறிவித்த அரசின் முடிவை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதிபதிகள் ஆதரித்துள்ளதில் எந்த ஆச்சரியமில்லை. இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் நடைமுறை சரியாக இருந்ததா என்பதை மட்டும்தான் நீதிமன்றம் ஆராய முடியும். ஆனால், இதில் எந்தத் தவறுமே இல்லை என்று கூறி, பெரும்பான்மை நீதிபதிகள் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.  இந்த நடவடிக்கையை முன்னெடுத்த மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கிடையில் போதுமான கலந்தாலோசனை இருந்தது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டதோடு, ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் அரசின் அதிகாரத்தையும் ஏற்றுக் கொண்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் துன்பப்பட்டதை, இந்தப் பெரும்பான்மை தீர்ப்பு சாதாரணமாக எடுத்துக்கொண்டதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது. மக்கள் அடைந்த துன்பம்,  பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தோல்வி என்பதையெல்லாம்  நீதிமன்றம் சில கருத்துகளின் மூலம் சுட்டிக்காட்டியிருந்தாலும் தனி நபர்களின் துன்பமோ, முடிவெடுப்பதில் நேர்ந்த தவறோ இந்த நடவடிக்கையை செல்லாததாக்க முடியாது  என்றும் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. 

விகிதாச்சாரம் அடிப்படையில் அமைந்த வாதங்களை இந்த பெரும்பான்மைத் தீர்ப்பு ஏற்கவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை விகிதாச்சார அடிப்படையிலான எல்லா சோதனைகளிலும் தேறியிருப்பதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது: இதற்கு சட்டரீதியான ஒரு நோக்கம் இருந்தது (கள்ள நோட்டுகள், சேர்த்து வைக்கப்பட்ட நோட்டுகளைக் கண்டுபிடிப்பது, பயங்கரவாதத்திற்கு நிதி செல்வதைத் தடுப்பது), நடவடிக்கைக்கும் நோக்கத்திற்கும் இடையில் தொடர்பு இருந்தது, அந்த நோக்கங்களை அடைய இதைவிட குறைந்த தலையீடு உடைய வழிமுறையைச் சுட்டிக்காட்ட உச்ச நீதிமன்றத்திடம் நிபுணத்துவம் இல்லை. இந்த நடவடிக்கையின் மோசமான விளைவுகளைக் குறைத்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு நீதிமன்றம் போதுமான அளவுக்கு பதிலளிக்கவில்லை. பொருளாதாரத்தில் புழங்கும் 86 சதவீத நோட்டுகளை செல்லாததாக்குவதன் தீங்குதரும் விளைவுகள் குறித்தும் அதனால் மக்களுக்கு நேரிட்ட பெரும் துயரம் குறித்தும் அரசு எதிர்நோக்கத் தவறியது பற்றி நீதிமன்றம் விமர்சன ரீதியாக எதுவும் சொல்லவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த நடவடிக்கையே தவறானது என்றும் முழுமையாக யோசிக்காமல் ரிசர்வ் வங்கி செயல்பட்டுள்ளது என்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா கூறியிருப்பது அதிகாரத்தில் இருப்பவர்களை நீதிமன்றங்கள் பொறுப்பாக்க வேண்டும் எனக் கருதுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். கொள்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றங்களின் விமர்சனத்திற்கு பெரிய தாக்கம் கிடையாது. ஆனால், மக்களின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக அரசை நிதானமாக யோசிக்க வைக்கும்.  

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT