தனது சமீபத்திய உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் 2022ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வளர்ச்சி 3.2 சதவிகிதம் அளவில் இருக்கும் என்கிற நம்பிக்கையை தக்கவைத்திருக்கிறது சர்வதேச நாணய நிதியம். ஆனால் அடுத்த வருடத்துக்கான கணிப்பை 2.9 சதவிகிதத்திலிருந்து 2.7 சதவீதத்திற்கு குறைத்திருக்கிறது. 2023ம் வருடம், உலகில் பலருக்கும் ஒரு பொருளாதார மந்தநிலை போல இருக்கலாம் என்று எச்சரித்திருக்கிறது நிதியம். தொடர்ந்து உயர்ந்துவரும் பணவீக்கம், வேகமாக அதிகரித்து வரும் எரிசக்தி, உணவு நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கான இறுக்கமான நிதிசார் கொள்கைகளுக்கு மத்தியில் ‘மோசமான காலம் இனிமேல்தான் வரப்போகிறது’ என்கிறது நிதியம். 2023-24ஆம் ஆண்டுக்கான இந்தியாவுக்கான வளர்ச்சி மதிப்பீட்டை 6.1 சதவிகிதம் என்கிற அளவில் தக்கவைத்துக் கொண்டாலும், இந்த ஆண்டுக்கான வளர்ச்சி கணிப்பை ஜூலையில் 7.4 சதவிகிதமாக வைத்திருந்த நிதியம், தற்போது 6.8 சதவிகிதமாக குறைத்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறை அதிகாரிகள் இந்த வருடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவிகிதத்துக்கும் குறைவாக, அதாவது 6.5 சதவீதமாக இருக்குமென உலக வங்கி மதிப்பிட்டிருக்கும் நிலையில், இது இரண்டாவது குறிப்பிடத்தக்க மதிப்பீடு எனலாம். இரண்டாவது காலாண்டில் ‘எதிர்பார்த்ததை விட பலவீனமான உற்பத்தி’ மற்றும் குறைந்த அயலக தேவை ஆகியவையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வரி வசூலில் குறைவான வளர்ச்சி இருப்பது, தொழிற்சாலை உற்பத்தி, ஏற்றுமதி குறைவாக இருப்பது போன்றவை இந்த கணிப்புக்கு ஆதாரமாக இருக்கின்றன. தொடரும் ரஷ்ய-யுக்ரைன் போர், சீனாவில் மந்தநிலை மற்றும் நிதியம் தெளிவாகச் சொல்லியிருப்பது போல ‘வாழ்வாதார செலவு நெருக்கடிகள்’ போன்றவற்றால் கடினமானதாக மாற்றப்பட்டிருக்கும் இந்த பாதையில் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்லவில்லை. அதீதமான நிலையற்ற தன்மை, வளர்ந்து வரும் பலவீனங்களுக்கு மத்தியில், பணக் கொள்கை, நிதிக் கொள்கை, பொருளாதார கொள்கை போன்றவை தவறாக கணக்கிடப்படுவதற்கான அபாயம் மிக கூர்மையாக அதிகரித்திருப்பதாக நிதியம் அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறது.
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற அடையாளத்தை இந்தியா இந்த ஆண்டு சவூதி அரேபியாவிடம் இழந்த நிலையில், அடுத்த ஆண்டு மீண்டும் அந்த இடத்தைப் பெறும் என சர்வேதச நிதியம் எதிர்பார்க்கிறது. ஆனால், நோமுரா போன்ற தனியார் கணிப்பாளர்கள் 2023-24ஆம் ஆண்டு குறித்த கொள்கை வகுப்பாளர்களின் நம்பிக்கை தவறானது எனக் கருதுகிறார்கள். இந்த நம்பிக்கை உலகளாவிய சரிவுகளின் தொடர் விளைவுகளை குறைத்து மதிப்பிடுவதோடு, வளர்ச்சி 5.2 சதவிகிதமாகவும் சரியக்கூடும் என்று கூறுகிறார்கள். எப்படியிருந்தாலும், உலகத்துடன் ஒப்புநோக்கிப் பார்க்கும்போது ஒப்பீட்டளவிலான வளர்ச்சி மட்டும் போதாது. தடுமாற்றமான கோவிட் காலகட்டத்துக்கு முந்தைய பாதையை விட கணிசமான அளவில் வேகமாக இந்தியா வளர வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய சிறந்த தரமான வளர்ச்சியை வழங்குவதோடு, அதன் மக்கள்தொகையில் கணிசமான அளவில் இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற செய்ய வேண்டும். அதன் மிக திறன் வாய்ந்த பகுதியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இந்தியாவுக்கு இப்போது குறைவான வாய்ப்புதான் இருக்கிறது. மேலும், இந்தியாவின் குறைந்த தனிநபர் வருமானத்தைக் கருத்தில்கொண்டு பார்த்தால் விலைவாசிகளின் தொடர்ச்சியான உயர்வு பெரும்பாலான குடும்பங்களின் செலவு செய்யும் திறனை பாதித்துள்ளது. தவிர அடுத்த தலைமுறையின் கல்வியில் முதலீடு செய்வதற்கான அவர்களின் திறனையும் அது குறைக்கக்கூடும். முதல் காலாண்டில் 7 சதவிகிதத்துக்கும் அதிகமாயிருந்த பணவீக்கம், ஜூலையில் 6.71 சதவிகிதமாக குறைந்து சற்று ஆறுதலளித்த நிலையில், ஆகஸ்டிலும் செப்டம்பரிலும் மீண்டும் உயர்ந்தது. இந்நிலையில் இந்தியா பண வீக்கத்தை கட்டுப்படுத்திவிட்டதென்றும் அது ஒரு முதன்மையான பிரச்னை இல்லை என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தியது கொஞ்சம் அவசரகதியிலானதாக இருக்கலாம். 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைப் பணிகளை அரசு தொடங்கிவிட்டது, ஆனால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியை இன்னும் திறமையாகவே கடக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.
This editorial was translated from English, which can be read here.
COMMents
SHARE