: யூடியூபில் உள்ள பத்து சேனல்களில் 45 வீடியோக்களை நீக்குமாறு யூடியூப்பிற்கு அரசு உத்தரவிட்டிருப்பது, இலவசமாக வீடியோக்களை பகிர உதவும் அந்த இணையத்தளத்தில் வெறுப்புணர்வு மற்றும் மத ரீதியாக எளிதில் புண்படுத்தக் கூடிய வீடியோக்களை பரப்புவது பற்றிய அதிகரிக்கும் கவலைகள் குறித்த நியாயமான எதிர்வினைதான் என்றாலும் அந்த அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவது கவலைக்குரிய ஒரு விஷயமும் கூட. உளவுத்துறை தந்த தகவல்களின் அடிப்படையில் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் அந்த வீடியோக்களை நீக்கச் சொல்லியிருக்கிறது. நீக்கப்படுவதற்காக சொல்லப்படும் காரணங்கள் மதவெறுப்பை பரப்புவது மட்டுமில்லை. அரசு “உணர்வுமயமானது” என்று கருதும் பிரச்னைகளும் அதில் வரும்: காஷ்மீர் பற்றிய கருத்துகள், அக்னிபத் திட்டம், மத சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றிய தவறான கூற்றுகள் என்று அரசு சொல்பவை, உள்நாட்டு போருக்கு வழி வகுக்கும் விஷயங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த கூற்றுகள் உண்மையென்றால், பேச்சுரிமை என்ற எல்லையை கடந்து பொது அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அந்த படைப்புகள் குந்தகம் விளைவித்தால் இது போல நீக்கச் சொல்லும் உத்தரவுகள் நியாயமானவையே. ஆனால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் விதம் இன்னும் தெளிவற்றதாகவே இருக்கிறது. நீக்கப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னர் இந்த படைப்பை பதிப்பித்தவர்களுக்கு அவர்கள் தரப்பு நிலையை முன் வைக்க வாய்ப்பு தரப்பட்டதா என்பது தெரியாது. நீக்கும் உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன்பு படைப்பின் மூல காரணம் அல்லது இடையில் அதை பகிர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவது உள்ளிட்ட பாதுகாப்புகளை விதிகள் உறுதி செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகுதான், படைப்புகளை தடை செய்யும் ஐ.டி சட்டம் பிரிவு 69 (ஏ)வை உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்தியது.
சமீபத்திய உத்தரவு, தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறை குறியீடு) விதிமுறைகள் 2021ன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது. துறைகளுக்கு இடையிலான ஒரு குழு படைப்புகள் பற்றிய புகார்களை பரிசீலித்து பரிந்துரைகளை வழங்கும் ஒரு முறையை அது பின்பற்றுகிறது. படைப்பை தடைசெய்ய அதை பதிப்பித்தவர் அல்லது இடைப்பட்டவருக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு தகவல் தொழில்நுட்ப விதிகள் அதிகாரி, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலரின் அனுமதியை பெற வேண்டும். இடைக்கால நடவடிக்கையாக செயலர் உடனடியாக அந்தப் படைப்பை தடை செய்யும் உத்தரவை பிறப்பித்துவிட்டு, பின்னர் குழுவின் கருத்துக்களை பெறும் அவசரகால ஏற்பாடும் இருக்கிறது. இப்படி நீக்கப்படுவதற்கு அளிக்கப்படும் அனைத்து உத்தரவுகளையும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டிய ஒரு மறு ஆய்வு குழு ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அந்த குழு தொடர்ச்சியாக கூடுகிறதா என்பது தெரியவில்லை. எத்தனை வீடியோக்கள் நீக்கப்பட்டன என்கிற தகவலை வெளியிடும் அரசு, இது போன்ற மறு ஆய்வின் முடிவுகள் ஏதும் இருந்தால் அவற்றையும் வெளியிட வேண்டும். இணையதள உள்ளடக்கங்களை நீக்கச் சொல்லிக் கோரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் சில இடங்களிலேயே இருக்கிறது. வெறுப்பு பேச்சு, வன்முறையை தூண்டுபவை, குழந்தைகளை மையமாக கொண்ட ஆபாசப் படைப்புகள் போன்ற இணைய வெளியின் கண்ணியமான பயன்பாட்டுக்கு சவால் விடும் மோசமான படைப்புகள் நீக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இணையவெளியில் உள்ள உள்ளடக்கங்களை நீக்கும் அதிகாரம் அரிதாகவும் உரிய உரிமைகள் மற்றும் முறைகள் பற்றிய நுண்ணுணர்வுடனும் பயன்படுத்தப்பட வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE