அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவைக் காண விழித்த இந்தியா, இரண்டு வெற்றிகளுக்கு உற்சாகமாகக் கரவொலி எழுப்பியது. இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸின் தமிழ் ஆவணப்படமான தி எலிபென்ட் விஸ்பர்ஸ் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய தயாரிப்பு என்ற பெருமையைப் பெற்றது. இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் தெலுங்கு திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் சிறந்த அசலான பாடலுக்கான (இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ்) விருதை வென்ற போது ஆஸ்கர் வென்ற முதல் இந்திய திரைப்பட தயாரிப்பு என்ற பெருமையை பெற்றது. ஆனால் இந்த உற்சாகத்திற்கு மத்தியில், இயக்குனர் ஷானக் சென்னின் ஆல் தட் ப்ரீத்ஸ், சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை இயக்குனர் டேனியல் ரோஹரின் நவால்னியிடம் இழந்தது. 2009ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தயாரிப்பான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் குல்சார் சிறந்த அசலான பாடல் மற்றும் இசைக்காகவும், ரசூல் பூக்குட்டி சிறந்த ஒலி கலவைக்காகவும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்கள். இந்தப் பின்னணியில் ஆர்.ஆர்.ஆரின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. டேனி பாயிலின் திரைப்படத்தை இந்திய சினிமாவின் பாடல், நடனம் மற்றும் முக்கிய அம்சமான மசாலாவை மேற்குலகு எப்படி புரிந்து கொண்டிருக்கிறது என்பதற்கான விளக்கமாக பார்க்கலாம். ஆனால், ஆர்.ஆர்.ஆர் என்கிற பிரதானமான இந்தியத் தயாரிப்பு, இந்திய சினிமாவின் நடனம் மற்றும் சண்டைக் காட்சிகள் பற்றிய எந்தவொரு தயக்கமும் இல்லாத படைப்பு. பன்முகப் பண்பாட்டு அமெரிக்க சமூகத்தை வசீகரித்த ஒரு சினிமாவுக்கு கிடைத்த அகாடமியின் அங்கீகாரமாக ‘நாட்டு நாட்டு’ பாடலின் வெற்றியைப் பார்க்கலாம்.
ஆஸ்கர் விருதுகள் ‘மிகவும் வெள்ளையானவை’தானா என்ற விவாதத்தை இந்த விருதுகள் மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கின்றன. குறிப்பாக டூ லெஸ்லி படத்திற்காக சிறந்த நடிகை பிரிவில் ஆண்ட்ரியா ரைஸ்பரோ பரிந்துரைக்கப்பட்டிருந்ததும், தி வுமன் கிங் படத்திற்காக வயோலா டேவிஸ் மற்றும் டில் படத்திற்காக டேனியல் டெட்வைலர் போன்ற வெற்றிபெறக்கூடிய சாத்தியம் கொண்ட பெயர்கள் நிராகரிக்கப்பட்டதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. மேலும் தனது ஹாலிவுட் சகாக்களின் தீவிரமான பிரச்சாரத்தின் காரணமாக ஆண்ட்ரியா இந்த ஒப்புதலைப் பெற்றாரா என்பதை விசாரிக்கும் கட்டாயத்துக்கும் இந்த விவகாரம் அகாடமியை உள்ளாக்கியது. எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (புலம்பெயர்ந்த சீனக் குடும்பத்தின் கதை) என்கிற திரைப்படம் 11 பரிந்துரைகளைப் பெற்று அதில் ஏழு விருதுகளை வென்றிருப்பதுதான், அனைவரையும் உள்ளடக்கியத் தன்மைக்கான ஒரு நம்பிக்கைக் கீற்றாக இருந்தது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், மற்றும் சிறந்த துணை நடிகர் பிரிவில் வியட்நாமிய-அமெரிக்கரான கே ஹுய் குவானுக்கு விருது ஆகியவை இதன் உயர்ந்த பரிசுகளில் அடங்கும். இதன் கதாநாயகி மிச்செல் இயோ சிறந்த நடிகை பிரிவில் பரிந்துரையைப் பெற்று வெற்றி பெற்ற முதல் ஆசியப் பெண். கடந்த 20 ஆண்டுகளில் வெள்ளையர் அல்லாத நடிகைக்கு கிடைத்த முதல் சிறந்த நடிகை விருதும் இதுதான். 60 வயதாகும் அவர், பெண்கள் தங்கள் வாழ்வின் முக்கியமான காலகட்டத்தை கடந்துவிட்டதாக யாரையும் சொல்ல அனுமதிக்கக் கூடாது என்று சொன்னபோது கரவொலி எழுந்தது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது மற்றும் பரிந்துரைகளின் மூலம் தனது இருப்பை வெளிப்படுத்திய மற்றொரு வெள்ளையர் அல்லாத படம் பிளாக் பேந்தர்: வகாண்டா ஃபாரெவர். வரும் ஆண்டுகளில், இந்த பன்முக பண்பாட்டு வெற்றிகள் அதிக கலைஞர்கள் உலக அரங்கிற்கு செல்ல வழிவகுக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE