பிப்ரவரி 27ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (என்.டி.பி.பி) - பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து ஆள்வதற்கு நாகாலாந்து வாக்களித்திருந்தது. மாநிலத்தின் நலன்கள் மத்திய அரசுடனான உறவுகளுடன் ஆழமாக பிணைந்திருக்கிறது என்ற உண்மையின் அடிப்படையில்தான் குழுக்களிடையே அதிகாரப் பகிர்வு இருக்கிறது. தில்லியில் ஆட்சியில் இருக்கும் கட்சி மாநில அரசியலில் கணிசமான ஒரு இடத்தைப் பெறுகிறது. என்.டி.பி.பி-பா.ஜ.கவுக்கும் இடையில் 40-20 என்கிற விகிதத்தில் தொகுதிப் பங்கீடு இருந்த நிலையில், அந்த கூட்டணி 37 இடங்களைப் பெற்றிருக்கிறது. மீதமுள்ள இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி போன்ற பல கட்சிகள் வெற்றிபெற்றன. ஏழு இடங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது தேசியவாத காங்கிரஸ் கட்சி. நாகாலாந்தில் யாரும் இப்போது எதிர்கட்சியாக இருக்க விரும்பவில்லை. என்.டி.பி.பி-பா.ஜ.க அரசுக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்திருக்கிறார்கள் என்பதுதான் நாகாலந்து அரசியலின் தற்போதைய நிலை. ஆரோக்கியமான அரசியல் ஒற்றுமையின் அடையாளம் என்பதற்குப் பதிலாக, சட்டமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சி முற்றிலும் இல்லாத இந்த நிலை, சட்டமன்ற பொறுப்புடைமை என்கிற அடிப்படையில் மாநிலத்தை ஒரு புதிய கீழ்நிலைக்கு தள்ளியிருக்கிறது. பிரிவினைவாத அமைப்புகளுடன் ஒரு ஏற்பாடு செய்து கொண்டு “இந்தோ-நாகா அரசியல் பிரச்னைக்கு” தீர்வு காண்பதன் பொருட்டு கூட்டாக பணியாற்றுவதற்காகவே முந்தைய சட்டமன்றத்தில் இந்த மோசமான ஒற்றுமை தொடங்கியதாக காரணம் கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில் அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான போட்டியாக இது மாறியிருக்கிறது.
முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் நெய்பியூ ரியோ, அமைச்சரவையில் 5 இடங்களைப் பெற்றுள்ள பா.ஜ.கவின் நம்பிக்கையைப் பெற்ற முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து திரு.ரியோ விலகியது அந்த கட்சிக்கு பெரிய வீழ்ச்சியாக இருந்த நிலையில், கடந்த 2003ஆம் ஆண்டு தேசிய மக்கள் முன்னணி கட்சியில் இணைந்து முதல்வரானார் அவர். மாநில சட்டமன்றத்தில் புதிதாக இரண்டு விஷயங்கள் நடந்திருக்கின்றன. இரண்டு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் மாநிலத்தின் முதல் பெண் அமைச்சராகவும் ஆகியிருக்கிறார். நாகாலாந்தின் ஆணாதிக்கத் தன்மையை வைத்துப் பார்க்கும்போது இது மிக முக்கியமானது. 2022ல் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து என்.டி.பி.பிக்கு சென்ற டி.ஆர். ஜெலியாங் துணை முதல்வராக இருக்கிறார். நாகாலாந்தின் பிராந்தியங்கள் மற்றும் முக்கிய நாகா சமூகங்களின் பிரதிநிதித்துவம் இந்த வருடம், சமநிலையில் இருக்கிறது. மாநிலம் வளர்ச்சி தொடர்பாக கடுமையான சவால்களை எதிர்கொள்வதோடு, அதன் நிர்வாக குறைபாடுகளும் மோசமாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக நீடிக்கும் தீவிரவாதமும் அதன் பொருட்டு நடக்கும் பண பறிப்பும் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் அது ஓரளவுக்கே உண்மை. இந்த நெருக்கடியில் அரசியல் கட்சிகளும் ஒரு பங்கை வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான். கிழக்கு நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பகுதியில் உள்ள 20 தொகுதிகளில் 9 இடங்களை என்.டி.பி.பி-பாஜக கூட்டணி வென்றது. எதிர்க்கட்சி இல்லாத ஒரு சட்டசபையில், அரசின் பொறுப்புணர்வு என்பது இல்லாமல் போகலாம். சொல்லப்போனால், நாகாலந்தில் மக்களின் நம்பிக்கைக்கு அரசியல்வாதிகள் துரோகமிழைத்துவிட்டார்கள்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE