Main Text: தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் சமீபத்திய தொழில்துறை உற்பத்தி மதிப்பீடுகளை வைத்துப் பார்க்கும்போது, டிசம்பர் மாதத்தில் பரந்துபட்ட அளவில் அவை வேகம் இழந்திருப்பது தெரிகிறது. நவம்பர் மாதத்தில் 7.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி, வருடாந்திர அளவில் பார்க்கும்போது 4.3 சதவீதமாக ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி குறைந்திருக்கிறது. தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் மூன்று கூறுகளான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளிலும் செயல்பாடு மாறாமல் அல்லது மிதப்படுத்தப்பட்டுதான் இருந்தது. இந்த மூன்றில் கிட்டத்தட்ட 78 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும் மிகப் பெரிய துறையான உற்பத்தித் துறை, முந்தைய மாதத்தின் 6.4 சதவீத வளர்ச்சியில் இருந்து 2.6 சதவீதமாக குறைந்ததால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி சரிந்தது. தொடர்ச்சியாக அல்லது மாதந்தோறும் மதிப்பிடப்பட்டு பார்க்கும் போது, சுரங்கமும் உற்பத்தித் துறையும் மந்த நிலையையே பதிவு செய்தன. நவம்பரில் 1.5 சதவீத வளர்ச்சி சுருங்கியதை அடுத்து மின்சாரம் மட்டுமே 7.6 சதவீதமாக வளர்ந்துள்ளது. உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, தொடர்ச்சியான வளர்ச்சி 2 சதவீத புள்ளிகள் குறைந்து, முந்தைய மாதம் இருந்த 6.9 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாகியிருக்கிறது. நுகர்வோர் சாதனங்கள், நுகர்வோர் அல்லாத பொருட்கள் மற்றும் மூலதன பொருட்கள் உள்ளிட்ட ஆறு பயன்பாட்டு அடிப்படையிலான துறைகளில் மூன்று துறைகளால் இதில் வளர்ச்சி குறைந்தது. இந்த மூன்று துறைகளும் பொருளாதாரத்தின் பரந்துப்பட்ட போக்கையே பிரதிபலிக்கின்றன. ஒன்று, தொற்றுநோய்க்குப் பிந்தைய செலவினங்கள், சேவைகள் துறையில் அதிகம் காணப்பட்டாலும், தனியார் நுகர்வு இன்னும் நிலையான இடத்தை பெறவில்லை. விழாக்கால தேவையை தொடர்ந்து நவம்பரில் மீண்ட நுகர்வோர் சாதனங்களின் உற்பத்தி, டிசம்பரில், வருடாந்திர அளவில் 10.4 சதவீதமும், டிசம்பர் மாதத்தில் மட்டும் 2.2 சதவீதமும் சரிவடைந்துள்ளது. மாதந்தோறும் வளர்ச்சி 7.4 சதவீதமாக உயர்ந்த நிலையில், உணவு, ஆடை, எரிபொருள், காலணிகள் போன்ற அடிக்கடி நுகரும் பொருட்களின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த சரிவை சந்தித்தது.
மூலதன பொருட்களைப் பற்றிய தரவுகள், தனியார் துறை முதலீடுகளைப் பொருத்தவரையில் தொடரும் நிச்சயமற்ற தன்மையை சுட்டிக்காட்டுகின்றன. தொழில்களை விரிவுபடுத்தும்போது அல்லது தொடங்கும்போது கொள்முதல் செய்யப்படும் ஆலை மற்றும் இயந்திரங்கள் உற்பத்தி வேகத்தைத் தக்கவைக்க போராடும் நிலையில், உற்பத்தி வளர்ச்சி தொடர்ச்சியாகவும் ஆண்டுதோறும் கணிசமாக சரிந்து வருகிறது. நவம்பரில், 21.6 சதவீதமாக இருந்த வளர்ச்சி, டிசம்பரில் 7.6 சதவீதமாக குறைந்துள்ளது. நவம்பரில் 13 சதவீதம் வளர்ச்சி கண்ட உற்பத்தி, டிசம்பரில் 0.2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால், முதன்மை மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான பொருட்களைப் பொருத்தவரையில், சரியான கொள்கை நடவடிக்கைகள் இருந்தால் நேர்மறையான வேகத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையை தருகின்றன. முதன்மைப் பொருட்களின் உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 1.1 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாகவும், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறைக்கான மாதாந்திர முன்னேற்றம் நவம்பர் மாதத்தின் 3.2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையின் கண்ணோட்டம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பு நடப்பு காலாண்டில் நிறுவனங்கள் ஆர்டர்கள் சற்று அதிகரிக்கும் என்றும் வெளிநாடுகளில் தேவை இருக்குமென்றும் எதிர்பார்க்கின்றன என்பதைக் குறிக்கிறது. ஆனால், கொள்கை சாதகமாக இருப்பதில்தான் நிறைய இருக்கிறது. அரசின் மூலதன செலவினங்களை கணிசமாக அதிகரிப்பதன் மூலம் உள்கட்டமைப்புக்கு ஊக்கமளிக்கும் மத்திய நிதிநிலை அறிக்கையின் திட்டம், கட்டுமான பொருட்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். தவிர, வரும் மாதங்களில் மற்ற துறைகளுக்கும் உத்வேகமளிக்க வாய்ப்புள்ளது.
This editorial has been translated from English, which can be read here.
Published - February 13, 2023 11:06 am IST