தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வந்த வதந்திகள் மற்றும் போலிசெய்திகளுக்குப் பிறகு அதிகாரிகள் விரைவாக தலையிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களின் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் வீடியோ ஒன்று, உள்ளூர் மக்களால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக சொல்லப்பட்டு பரவியதை தொடர்ந்து, பல தொழிலாளர்கள், குறிப்பாக பிஹாரைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்ல ரயில் நிலையங்களில் காத்திருப்பதைக் காண முடிந்தது. எப்படியிருந்தாலும், ஹோலி கொண்டாட்டங்களுக்காக சில தொழிலாளர்கள் வீடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்கள். பிரச்னை தீவிரமாவதற்கு முன்பு கூட, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரை தொடர்புகொண்டு பேசியது நல்ல விஷயம். பிற விஷயங்களிலும் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தைனிக் பாஸ்கர் ஆசிரியர் உட்பட வதந்திகளை பரப்புவோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. பிஹாரின் ஜமுய் மாவட்டத்தில் தவறான வீடியோ கிளிப்பை பகிர்ந்ததற்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சில வீடியோக்களும் செய்திகளும் போலியானவை மற்றும் தவறானவை என்பதை பிஹார் காவல்துறை கண்டறிந்திருக்கிறது. பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் வேலைபார்க்கும் மையங்களான கோயம்புத்தூர் மற்றும் திருப்பூருக்குச் சென்றிருக்கிறார்கள். தவிர, தொழில்துறை பிரதிநிதிகள் தொழிலாளர்களுக்கு உறுதியளிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த விவகாரம் தமிழகத்திலும் பிஹாரிலும் பேரினவாத அரசியலுக்கு வழிவகுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில், குறிப்பாக கட்டுமானத் துறையில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு அனைவரும் அறிந்ததே. கிரெடாய் தமிழ்நாட்டு என்கிற அமைப்பு சொல்வதை வைத்துப் பார்த்தால், புலம்பெயர் சமூகம் பெரிய திட்டங்களில் 85 சதவீத பணிகளிலும் நடுத்தர அளவிலான திட்டங்களில் 70 சதவீத பணிகளிலும் பங்களித்துக் கொண்டிருக்கிறது. உற்பத்தி, ஜவுளி, கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகளிலும் கணிசமான பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொழிலாளர் துறை செய்த கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் சுமார் 11.5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளில் கருத்து தெரிவிக்கும்போது அரசியல்வாதிகள் எச்சரிக்கையையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த பிரச்னை எடுத்துக் காட்டியிருக்கிறது. உள்ளூர் மக்களின் நலன்களைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில், பல தலைவர்கள் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். அல்லது உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்வது போன்ற பிரச்சினைகளுக்கு புலம்பெயர் மக்கள்தான் பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார்கள். நிதீஷ்குமாருடனான உரையாடலில் திரு. ஸ்டாலின் சொன்னதைப் போல, “மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் தொழிலாளர்கள் எங்கள் தொழிலாளர்கள்” என்ற செய்தியை அனைத்து
அரசியல் கட்சிகளும் உள்வாங்க வேண்டும். அதே நேரம், அந்த சமூகத்திற்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெயை, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சலுகை விலையில் வழங்குவதையும் சேர்க்க வேண்டும். புலம்பெயர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண ஒரு தனிப்பிரிவை உருவாக்கலாம். புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றிய ஒரு புதிய மற்றும் விரிவான ஆய்வை அரசு நிறுவி, உள்ளூர் மக்களுடன் அவர்கள் ஒன்றாக வாழவும் தங்கள் மாநிலத்தில் இருப்பதைப் போல உணரவும் உதவலாம்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE