மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களுக்கு நியமித்த புதிய ஆளுநர்களில் ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் முன்னாள் இந்திய ராணுவத் தளபதியும் அடங்குவார்கள். பல மாநிலங்களின் ஆளுநர்களும் ஒரு யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரும் மாற்றப்பட்டார்கள். சமீப வருடங்களில் ஜார்கண்ட், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல்ரீதியாக செயல்பட முயல்வதன் மூலம் தொடர்ச்சியான சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். ராணுவம் மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகள்கூட ஆர்வத்தை தூண்டுபவைதான். குறிப்பாக, அரசியல் நிர்வாகத்துடன் அவற்றுக்கு இருக்கும் உறவுகளின் பொருட்டு ஆர்வம் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறை குறித்த விவாதங்களை தவிர, நீதித்துறை நியமனங்களைக் கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாகத்துக்கு இருக்கக்கூடிய ஆர்வமும் வெளிப்படையானது. கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களைத் சில பெயர்களை மட்டும் தாமதப்படுத்துவதன் மூலம் அல்லது விரைவுப்படுத்துவதன் மூலம், நீதிபதிகள் நியமனத்தில் இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிறது அரசு. தங்கள் கட்சி பற்றி அரசியல்ரீதியான பார்வையை உருவாக்குவதற்கு பாரதீய ஜனதா கட்சி ஆயுதப்படைகளை பயன்படுத்துவதாகவும் குற்றசாட்டுகள் இருக்கின்றன. இதற்கு முன்புகூட, ஓய்வு பெற்ற காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 2014ல் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆளுநராக நியமிக்கப்பட்டது ஒரு புதிய முன்னுதாரணமாக இருந்தது. 2020ல் இன்னொரு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜ்ய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டதும் பலருக்கும் ஆச்சரியமளித்தது. ஆளுநர் என்கிற கட்டமைப்பு, ஆங்கில ஏகாதிபத்திய நிர்வாகக் கட்டமைப்பின் பாரம்பரியத்தில் வருவது. ஒரு ஜனநாயக அமைப்பில் நியமிக்கப்பட்ட ஆளுநரின் சட்டப்பூர்வத் தன்மை என்பது அரசியல் நிர்ணய சபையில் விவாதப்பொருளாக இருந்த போதிலும், புதிய குடியரசிலும் அது அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசுக்கும்
மாநில அரசுக்கும் இடையில் வலுவான ஒரு இணைப்பாக ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால் அரசியலமைப்பை இயற்றியவர்கள், வரையறுக்கப்பட்ட சூழல்நிலைகளில் மிகக் குறுகிய விதத்தில் முடிவுஎடுக்கும் விருப்புரிமையை தவிர அது வெறும் அலங்காரப் பதவி என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். ஆனால் பல பத்தாண்டுகளாகவே, ஆளுநர்களின் வரம்பு மீறும் செயல்பாடுகள் மத்திய-மாநில உறவுகளிலும் பொதுவாக ஜனநாயக அமைப்பிலும் ஒரு தீவிரமான கேள்வியாகவே மாறிவிட்டது. 2014லிருந்து மத்தியில் பா.ஜ.கவின் ஆதிக்கம் மாநிலங்களுடன் புதிய பதற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பிராந்திய நலன் பேசும் குழுக்களிடையே பா.ஜ.கவின் தேசிய ஒற்றுமை குறித்த பார்வை பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. ஆளுநரின் பதவி என்பது அதை வகிக்கும் ஆளுமைகளால் அலங்கரிக்கப்பட வேண்டும். தம்முடைய நிகழ்கால பணிகளில் சார்பு அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டியவர்களுக்கு, ஒய்வுக்கு பிறகான வாய்ப்பாக அதை வைப்பது, அவர்கள் வகிக்கும் பதவிகளின் மாண்பையும் வகிக்கவிருக்கும் பதவிகளின் மாண்பையும் குறைக்கவே செய்யும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE