மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) வரம்பிற்குள் கொண்டு வரும் நிதி அமைச்சகத்தின் மார்ச் 7ஆம் தேதி அறிவிப்பு தாமதமானதென்றாலும் தேவையான ஒரு நடவடிக்கை. மெய்நிகர் சொத்துக்களில் முதலீடு செய்ய சொல்லும் விளம்பரங்கள் கொரோனா தொற்றுக்காலத்தில் அதிகமாய் இருந்தன. இந்த நிலையில், இதில் செய்யப்படும் அசலான முதலீடுகளை சமாளிக்க பொருத்தமான ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குவதற்கு கடந்த சில வருடங்களில் அரசு கடுமையாக போராடி வந்தது. எடுத்துக்காட்டாக, BrokerChooser.comன் 2021ஆம் ஆண்டு ஜூலை மாத ஆன்லைன் அறிக்கை, இந்தியாவை அதிக எண்ணிக்கையிலான ‘கிரிப்டோ உரிமையாளர்களைக்‘ கொண்ட நாடு என்று மதிப்பிட்டிருந்தது. 10.07 கோடி என்கிற அளவில் அது இருந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவில் கிரிப்டோ சொத்துக்களை வைத்திருக்கும் உரிமையாளர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம். இதை ஒரு யூகமாக கருதி நிராகரித்தாலும் கூட, அரசின் நடவடிக்கைகள் மற்றும் வெளியாகும் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது சமீப வருடங்களில் கட்டுப்பாடற்ற அளவில் மெய்நிகர் சொத்துக்களில் நடக்கும் வர்த்தகத்தின் அளவு கணிசமாக வளர்ந்திருப்பதையே இது குறிக்கிறது. கடந்த மாதம் மக்களவையில் பேசிய மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கிரிப்டோகரன்சி மோசடிகள் தொடர்பான பல வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருவதாகவும், அதில் ஒரு சில கிரிப்டோ பரிமாற்றங்கள், ‘பணமோசடியில்’ ஈடுபட்டது கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தவிர, ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி, குற்ற நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த வருமானமாக கருதப்பட்டு 936 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அல்லது முடக்கி வைக்கப்பட்டுள்ளன. மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களில் உள்ள அனைத்து வர்த்தகத்தையும் கட்டாயமாக பி.எம்.எல்.ஏவின் கீழ் கொண்டு வருவதற்கான முடிவு, இப்போது அத்தகைய சொத்துக்களில் பாதுகாப்பாக வைத்திருப்பது உட்பட அனைத்து நடவடிக்கைகளின் இடத்தையும் உறுதிப்படுத்தும் பொறுப்பை இந்த பரிவர்த்தனைகளில் பங்கேற்கும் அல்லது செயல்படுத்தும் தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் மீது சுமத்துகிறது.
சர்வதேச பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான அரசுகளுக்கு இடையிலான நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் உலகளவில் வர்த்தகம் செய்யக்கூடிய வேகம் மற்றும் அடையாளம் தெரியாத தன்மையை வைத்துப் பார்க்கும் போது தவறாகப் பயன்படுத்துவதற்காக உள்ள சாத்தியக்கூறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. அது சுட்டிக்காட்டியுள்ளபடி, ஒரு சில நாடுகள் மெய்நிகர் சொத்துக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. மேலும் சில நாடுகள் அவற்றை முற்றிலுமாக தடை செய்திருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் பெரும்பான்மையான நாடுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அதை குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளை உலக அளவில் உருவாக்கியிருக்கிறது. ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா, கிரிப்டோ சொத்துக்களைக் கையாள்வதற்கு சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளுக்கான வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, பி.எம்.எல்.ஏ கண்காணிப்பு செய்ய வேண்டிய தேவைகளைச் சேர்ப்பதற்கான மத்திய அரசின் முடிவு, கிரிப்டோ சொத்துகளை தடை செய்வதற்கு பதிலாக ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளாகவே முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதே நேரம், மெய்நிகர் சொத்துக்கள் குறித்து நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்ட வரைவு சட்டத்தைக் குறித்து எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு தடைக்கான ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான வாதத்தை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.