“குழப்பமான தீர்ப்பு” என்ற சொல் மேகாலயா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை பொருத்தமாக விவரிக்கிறது. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தற்போது பொறுப்பில் இருக்கும் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி) 26 இடங்களை (2018ல் பெற்றதை விட கூடுதலாக ஏழு இடங்களைப் பெற்றது) பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் இரண்டு சுயேச்சைகளைத் தவிர, குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளைக் கொண்டிருக்கும் ஏழு பிற கட்சிகள் இருக்கின்றன என்பதும் தேர்தலுக்கு பிறகான ஒரு சாதுர்யமான கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவையை முன்வைக்கிறது. திரிணாமூல் காங்கிரஸின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா என்.பி.பி மற்றும் பா.ஜ.க (இரண்டு இடங்கள்) தவிர்த்த ஒரு புதிய கூட்டணியை அமைக்க முயற்சி செய்தார். ஆனால் அவரது கட்சி ஐந்து இடங்களை மட்டுமே வென்ற நிலையில், அப்படியொரு கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் போனது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் அது நிலையற்றதாகவே இருந்திருக்கும். என்.பி.பி. தலைமையிலான ஆட்சியில் நடந்த ஊழலை வெளிப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்காக என்.பி.பி உடனான கூட்டணியிலிருந்து வெளியேறிய பாஜக, 60 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க உடனடியாகவே என்.பி.பிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. என்.பி.பி ஏன் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம் - வடகிழக்கு அரசுகள் மத்திய நிதி பரிமாற்றங்களைச் சார்ந்தே இருக்கின்றன. தவிர மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால், பா.ஜ.கவின் இந்த நடவடிக்கை ஊழல் குற்றசாட்டுகளை எந்த அரசின் மீது சுமத்தியதோ அந்த அரசுடன் உடனடியாக சேர்ந்தது, தனது அடித்தளத்தை விரிவுப்படுத்த அதிகாரத்தை பயன்படுத்தும் அக்கட்சியின் பதற்றத்தையே காட்டுகிறது. சில வியூகங்களுக்கு பின்னர், 11 இடங்களைக் கொண்ட ஐக்கிய ஜனநாயகக் கட்சியும், இரண்டு இடங்களைக் கொண்ட மக்கள் ஜனநாயக முன்னணியும் என்.பி.பிக்கு ஆதரவளிக்க முன்வந்தன.
அதோடு இரண்டு சுயேட்சைகள் மற்றும் மலையக மக்கள் ஜனநாயகக் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் கூட்டணிக்கு வசதியான பெரும்பான்மையை தந்திருக்கிறது. என்.பி.பி அறுதிப் பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும், ஜெயின்டியா மலை மற்றும் காசி மலை பகுதிகளில் எட்டு தொகுதிகளை வென்று காரோ மலைகளுக்கு அப்பால் தனது தளத்தை விரிவுபடுத்த அதனால் முடிந்திருக்கிறது. இதனால் மாநிலம் தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒரே சக்தியாக அந்தக் கட்சியால் உருவாக முடிந்தது. இந்த மக்கள் தீர்ப்போடு, கட்சி மாநிலத்தில் நீண்டகாலமாக இருக்கும் வளர்ச்சிப் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். மாநிலம் இன்னமும் வறுமை விகிதம் அதிகம். நிதி ஆயோக் அறிக்கை ஒன்று, மேகாலயாவை இந்தியாவின் ஐந்தாவது ஏழ்மையான மாநிலமாக பட்டியலிட்டிருக்கிறது. மக்கள் தொகையில் 32.67 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கிறார்கள். ஊழல், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒரு தடையாக இருக்கிறது. கனிம வளம் நிறைந்த இந்த மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கங்களும் நிறைய இருக்கின்றன. கான்ராட் சங்மாவுக்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட, கூடுதலான ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால், மற்ற கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்கும் ஒன்றாகவே அது இருக்கும். கூட்டணிக் கட்சிகள், பொறுப்பில் பங்கெடுக்க முயல்வதைவிட கொள்கைப் பிரச்சினைகளை எழுப்புவதில் அதிக ஆர்வம் காட்டும்வரை அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE