தாலிபான் ஆட்சி சமீபத்தில் எடுத்த திடுக்கிடச்செய்யும் முடிவாக, பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தாலிபான்கள் ஆட்சியிலிருந்து விலகிய 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு கிடைத்த சமூகரீதியான பலன்கள் அனைத்தையும் அழிக்கும் வகையிலான தொடர்ச்சியான முடிவுகளின் ஒரு பகுதியாக, அமைச்சரவையின் இந்த முடிவு வந்திருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கத் தடை, வேலைக்குச் செல்லக் கட்டுப்பாடு, பொது பூங்காக்களிலும் உடற்பயிற்சிக் கூடங்களிலும் பெண்களுக்குத் தடை, ஆண் உறவினர் இல்லாமல் வெளியில் வரும் பெண்களுக்கு பொது இடத்திலேயே சவுக்கடி போன்றவை தாலிபான்களின் நடவடிக்கைகளில் அடக்கம். ஒவ்வொரு நாளும் தனது கொடூரத் தன்மையை அதிகரிப்பதோடு, அறிவுக்குப் பொருந்தாத வகையிலும் செயல்பட்டுவரும் இந்த ஆட்சி, தனது மக்கள் தொகையில் பெரும்பகுதி பொதுப் பார்வையில் இருக்கக்கூடாது எனக் கருதுகிறது. இந்த முடிவை வெளிப்படையாகவும் அதிகாரபூர்வமாகவும் அறிவித்து, தோஹா பேச்சு வார்த்தைகளில் தந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியிருப்பதன் மூலம், சர்வதேச சமூகம் குறித்து தனக்கு எந்தக் கவலையும் இல்லையெனக் காட்டியிருக்கிறது. தாலிபான் 2.0 அரசு குறித்த தனது கொள்கைகளை சர்வதேச சமூகம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். எந்த அரசும் தாலிபான்களை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும் பல நாடுகள் வெளிப்படையாக அவற்றுடன் உறவில் இருக்கின்றன. இந்தியா உள்பட டஜனுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆஃப்கானிஸ்தானில் தங்கள் தூதரகங்களை வைத்திருக்கின்றன. உதவிகளை எளிதாகச் செய்வது, இந்தியாவின் பாதுகாப்பு போன்றவற்றுக்கான யதார்த்தமான கொள்கையின் ஒரு பகுதியாகவே ஆஃப்கானிஸ்தானுக்குச் செல்வதையும், இந்தியத் தூதரகத்தில் நடந்த தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் காரணமான சிராஜுதீன் ஹக்கானி போன்ற அமைச்சர்களைச் சந்திப்பதையும் இந்தியா விளக்குகிறது. இது போன்ற கொள்கைகள், இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்கும் தாலிபான்களின் ஆட்சி நீடிப்பதை மேலும் சௌகர்யமாக்குகின்றன. மேலும், ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு விசா அளிப்பதில்லை என்ற இந்திய அரசின் முடிவு இந்தியாவில் படிக்க விரும்பும் மாணவிகளைத்தான் கடுமையாகப் பாதித்திருக்கிறது.
எதுவும் செய்யமுடியவில்லையே எனக் கைகளைப் பிசைவதைவிட சர்வதேச சமூகத்தால் அதிகம் செய்ய முடியும். “விரும்பத்தகுந்த” விளைவுகள் மட்டும் போதாது; தாலிபான்களுடனான பிரச்சனையின் மையப்புள்ளியே, பெண்களின் உரிமைகள்தான் என்பதை அங்கீகரிக்கவேண்டும். தனது அரசுக் கட்டமைப்பை நடத்த வெளி உதவிகளையே நம்பியிருக்கும் தாலிபான்களுடனான உறவுகளை துண்டித்துக்கொள்ள வேண்டும். தாலிபான் அல்லாத தலைவர்களுக்கான, குறிப்பாக கடந்த காலத்தில் தேர்வுசெய்யப்பட்ட பெண் தலைவர்களுக்கான மேடையை ஆஃப்கானிஸ்தானுக்கு வெளியே அமைத்துத்தர முன்னணி நாடுகள் முயல வேண்டும். அதன் மூலம் அவர்கள் ஒன்றிணைந்து தாலிபான்கள் தற்போது திணித்துவரும் இருளான பாதைக்கு மாற்றான ஒரு லட்சியத்தை முன்வைக்க முடியும். பிராந்தியத் தலைவராக இருக்கும் இந்தியா, கடந்த ஆண்டில் மிகுந்த துன்பத்திற்கு உள்ளான ஆஃப்கானிஸ்தான் மக்களை கைகழுவிவிடும் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலிலும் பிற சர்வதேச அரங்குகளிலும் பெரிய வார்த்தைகளைச் சொல்வது, அவர்களின் துன்பத்தை நீக்க உதவாது. மேலும், வரலாற்று ரீதியாகவே இந்தியாவின் நண்பர்களாகக் கருதப்படும் மக்களிடம் உள்ள நல்லெண்ணத்தைக் காப்பதற்கோ, நலன்களைக் காப்பதற்கோ உதவாது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE