ரஷ்ய அதிபர் விளாமிதிர் புதினின் பகுதி படைத் திரட்டல் அறிவிப்பை, யுக்ரெயினில் நடக்கும் அவரது “சிறப்பு ராணுவ செயல்பாடுகளின்” வரம்புகளை ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறியாகவும் பின்னடைவுகளுக்கான எதிர்வினையாக மோதலை இன்னும் அதிகப்படுத்த தயார்நிலையில் இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கிறது. வரம்புக்குட்பட்ட போர் மூலமாகத் தனது ராணுவத்தின் குறிக்கோள்களை அடைவதுதான் அவரது அசலான திட்டம். 1,50,000 க்கும் அதிகமான படைகளைத் திரட்டி, பிப்ரவரி 24 அன்று பல முனைகளிலிருந்து யுக்ரெயினுக்குள் நுழைய அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. காரணம், ராணுவரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் உதவியைப் பெற்றிருந்த யுக்ரெயினின் படைகள் எதிரிப்படையின் நகர்வுகளை மட்டுப்படுத்தி, ரஷ்யாவுக்குப் படையெடுப்பை விலை மிகுந்த ஒன்றாக மாற்றியது. அதற்கு முன்பு கீவ் மற்றும் கார்கிவைச் சுற்றியிருந்த படைகளைத் திரு.புதின் விலக்கிக் கொண்டு, ரஷ்யா பிராந்திய ரீதியாகப் பலன்களைப் பெற்ற யுக்ரெயினின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் இந்த மாத தொடக்கத்தில் யுக்ரெயினின் மின்னல் வேக எதிர்தாக்குதலின் காரணமாக வடகிழக்குப் பகுதியிலுள்ள கார்கிவ் ஒபிளாஸ்டில் ரஷ்ய படைகள் பின்வாங்கிய போது ரஷ்யா போரில் அதன் முதல் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இந்தப் பின்னடைவு காரணமாக யுக்ரயினில் தான் கைப்பற்றியிருந்த பகுதிகளில் தனது நிலையைப் பலப்படுத்தி வைத்துக்கொள்ளும் முயற்சியை ரஷ்யா வேகப்படுத்தியது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத பகுதிகளாகக் கிழக்கில் இருக்கும் லுஹன்ஸ்க், டொனெட்ஸ்க் மற்றும் தெற்கில் இருக்கும் கெர்சன், ஸபோரிஷ்ஷ்யாவும் இப்போது ரஷ்ய கூட்டமைப்பில் இணைவது பற்றிப் பொது வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டு இருக்கின்றன. முதல் வாக்கு விழுவதற்கு முன்பே முடிவு தெரியும் என்பதால், போருக்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் மோதலுக்கான பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு தீர்வை எட்டுவதற்கான கதவு இப்போது அடைக்கப்பட்டுவிட்டது.
இந்த மோதலை அதிகப்படுத்துவது, திரு. புதினுக்குக் கூடுதல் அபாயங்களைக் கொண்டு வரும். எடுத்தவுடன் அவர் யுக்ரெயினுக்குக் குறைந்த படைகளுடன் சென்றதற்குக் காரணம், தேசம் முழுவதும் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்யக் கோரும் ஒரு பொதுவான அணித்திரட்டல், மக்களிடம் செல்வாக்கை பெறாது என்பதுதான். ஆனால் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து அவரது போர், யுக்ரெயினின் துருப்புகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட நோக்கங்களை அடையவில்லை என்பது மட்டுமல்ல, புத்துயிர் பெற்ற நேடோ அமைப்பு தனது ஒட்டுமொத்த ஆதரவையும் யுக்ரெயினுக்கு வழங்கியதோடு ஃபின்லாந்த் மற்றும் சுவீடனை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டு ரஷ்யா எல்லைகளுக்குள் தன்னை இன்னும் விரிவுப்படுத்திக் கொண்டது. புதன் கிழமையன்று சவால்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார்கள் திரு.புதினும் அவரது பாதுகாப்புத்துறை அமைச்சரான செர்கெய் ஷொய்குவும். அணுகுண்டு மிரட்டலை தீவிரப்படுத்திய புதின்தான், தற்போது தனது படைகள் மிகச் சிறப்பான “மேற்கத்திய ராணுவ இயந்திரத்தை” எதிர்கொண்டு வருவதாகச் சொன்னார். தற்போது வரை இந்த ராணுவ செயல்பாடை போர் என்று சொல்ல மறுக்கும் அமைச்சரவையை நிர்வகிக்கும் திரு.ஷொய்கு ரஷ்யா இன்றைய நிலையில் “ஒட்டுமொத்தமான மேற்குலகோடு போரில் இருப்பதாகச்” சொன்னார். போர்க்கள பின்னடைவுகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், திரு.புதின் மோதலை அதிகப்படுத்துவதுதான் முன்னோக்கி நகர்வதற்கான வழி என்று நினைக்கிறார். ஆனால் இந்தப் பகுதி திரட்டல் உடனடியான பலன்களைத் தரும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. தவிர அது மாறி மாறி மோதலை அதிகரிக்கும் போக்கை தொடங்கிவைத்துவிடக் கூடும். இதன் பொருள், இந்தப் போர் இன்னும் மிக ஆபத்தான ஒரு கட்டத்துக்குள் நுழைகிறது என்பதுதான்.
This editorial has been translated from English, which can be read here.