வெனிசுலா நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்தி, செவ்ரோன் நிறுவனத்தை அதன் கூட்டு எண்ணை வயல்களுக்கு திரும்ப அனுமதிக்கும் பைடன் நிர்வாகத்தின் முடிவு, அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அகற்றும் அமெரிக்காவின் அதிகபட்ச அழுத்தம் கொண்ட பரப்புரையின் முடிவைக் குறிக்கிறது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை கொண்டுள்ள தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படத் தடை விதித்ததன் மூலம் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை உச்சத்திற்கு கொண்டு சென்றார். அதோடு தேர்ந்தெடுக்கப்படாத அதிபராக தன்னை அறிவித்துக் கொண்ட தற்காலிக அதிபரான ஜுவான் குவைடோவை அங்கீகரிக்கவும் செய்தார். வெனிசுலாவின் அரசியல் சிக்கலில் இந்த கொள்கை இரண்டு காரணங்களுக்காக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதலாவதாக, பொலிவேரிய மக்கள் இயக்கத்தால் வழி நடத்தப்பட்ட திரு. மதுரோவின் ஆட்சியை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு அரசியல் முதலீட்டை திரு.குவைடோவால் ஈட்ட முடியவில்லை. பின்னர், தனது கனரக கச்சா எண்ணையை சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் தள்ளுபடி விலையில் விற்றதன் மூலம் பொருளாதார தடைகளை மீறியும் செயல்பட ஒரு வழியை அந்த ஆட்சி கண்டறிந்தது. தொடக்க மாதங்களில் பைடன் நிர்வாகமும் டிரம்பின் வழியையே பின்பற்றியது. ஆனால் யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு நிகழ்ந்த சில வாரங்களில், மார்ச் மாதத்தில் வெனிசுலாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது. பொருளாதாரத் தடைகளை தளர்த்தும் முடிவு என்பது வெனிசுலாவுடனான அரசியல் நல்லிணக்க முன்னெடுப்பின் ஒரு பகுதி என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டாலும் யுக்ரைனும் எரிசக்தி நெருக்கடியும்தான் காரணம் போலத் தெரிகிறது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், விலைகளை அதிகப்படுத்திவிட்டன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் திரு. பைடனின் முயற்சி இதுவரை பலனளிக்கவில்லை. எண்ணை உற்பத்தியை குறைக்கும் சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளிகளின் நடவடிக்கையும், விலைகள் மீது கூடுதலான அழுத்தத்தை ஏற்றியிருக்கின்றன. சந்தைக்கு அதிக எண்ணையை கொண்டு வருவதற்கான வழி,
வெனிசுலாவை அதை செய்ய அனுமதிப்பதே. நிபந்தனைகளுடன்தான் தடைகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. செவ்ரோன் வெனிசுலாவில் உள்ள அதன் வயல்களிலிருந்து எண்ணையை உற்பத்தி செய்யலாம். ஆனால் அந்த எண்ணை அமெரிக்காவுக்கு மட்டும்தான் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். மேலும் இந்த விற்பனையில் வரும் தொகை, அரசுக்கு சொந்தமான வெனிசூல நாட்டின் எண்ணை நிறுவனமான PdVSAவின் செவ்ரொனுக்கான கடனை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்பட வேண்டும் (சுமார் 4.2 பில்லியன் டாலர்கள்). தவிர உரிமம் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம். இருந்த போதிலும், அமெரிக்காவின் இந்த தெளிவான தலைகீழ் மாற்றத்தை தன்னுடைய வெற்றியாக திரு. மதுரோ சொல்லலாம். எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் முன் வந்திருக்கிறார். ஆனால் அதைத் தாண்டி எந்த பெரிய சலுகைகளையும் அறிவிக்கவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை முன்மாதிரியாகக் கொண்டு, ஐரோப்பிய நாடுகளும் வெனிசுலா அரசு தொடர்பான தங்களது கொள்கையை மறுபரிசீலனை செய்யக் கூடும். வெளிநாட்டு நிறுவனங்கள் திரும்புவதன் காரணமாக வெனிசுலா அதன் எண்ணை உற்பத்தியை அதிகரிக்கும். தன்னைத் தனிமைப்படுத்துவதற்கான மேலை நாடுகளின் முயற்சிகளை திரு.மதுரோ முறியடித்திருப்பது போலதான் தோன்றுகிறது. ஆனால் சொந்த நாட்டில் வீசும் புயலை எதிர்கொள்வதுதான் இன்னும் பெரிய சவாலாக இருக்கும். தொடர்புகொள்வதற்கான இந்த கதவு, அவருக்கான ஒரு வாய்ப்பு. வெனிசுலாவின் பொருளாதாரத்தின் முக்கியமான வீழ்ச்சிகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளுடன் அந்த வாய்ப்பை அவர் தழுவ வேண்டும். பொருளாதார வீழ்ச்சிகளுக்கு அவருடைய கொள்கைகளும் ஒரு காரணம். மேற்குலக நாடுகளுடான உறவை சரி செய்து, எதிர்கட்சியுடன் தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE