இன்று இருக்கும் சமூக ஊடக பெருமுதலைகளுக்கு மத்தியில், டிவிட்டர் ஒரு விசித்திரமான ஜந்து. அதற்கு அரசியல்வாதிகள், கார்ப்பரேட் தலைவர்கள், பெரிய அளவில் பின் தொடர்வோரைக் கொண்ட ஆளுமைகள் உள்பட 240 மில்லியன் தினசரி பயனாளர்கள் இருக்கிறார்கள். 280 எழுத்துக்களில் செய்திகளை சொல்லும் ஏற்பாடு மட்டுமல்லாமல், முக்கிய செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் மற்றும் மக்களை திரட்டுவதற்கான தளமாகக்கூட அது இருக்கிறது என்பதுதான் டிவிட்டரின் தனித்துவமான அம்சம். ஆனாலும் நிதி ரீதியாக பார்த்தால், கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு ஆண்டுகள் டிவிட்டர் நஷ்டத்தையே சந்தித்திருக்கிறது. மெட்டாவின் முகநூல், இன்ஸ்டாகிராம் அல்லது டிக்டாக் அளவுக்கு கூட வர்த்தக சந்தையில் அதன் மதிப்பு உயரவில்லை. சிற்சில பிரச்னைகளுக்கு பிறகு உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்கிற்கு 44 மில்லியன் டாலர் என்கிற பெருந்தொகைக்கு டிவிட்டரை விற்றதன் மூலம் அதன் பங்குதாரர்கள் பெரும் லாபத்தை சம்பாதித்தார்கள். டிவிட்டரை வாங்கிய பிறகு எடுத்த முதல் நடவடிக்கையாக அதன் உயரதிகாரிகள் சிலரை திரு.மஸ்க் பணி நீக்கம் செய்தார். ஆனால், தான்தோன்றித்தனமாக செயல்படும் ஒரு உரிமையாளரின் கீழ் சுதந்திரமான பேச்சுரிமைக்கான களம் என்ன ஆகும் என்பதுதான் இப்போது எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா மற்றும் விண்கலம் மற்றும் ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளராக தனது பணத்தில் பெரும்பகுதியை சம்பாதித்த திரு.மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் நிதி நிலையைப் பாதுகாக்கக்கூடிய வணிக யோசனைகளை வழங்க முடியும். ஆனால், மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு ட்விட்டர் பயனராக, அவர் ஒழுங்கற்ற முறையில் எதிர்வினை ஆற்றுவது, முட்டாள்தனமான தோரணைகளைச் செய்வது அபத்தமான கருத்துக்களை வெளியிடுவது என்றே இருந்திருக்கிறார். டிவிட்டர் அதன் உள்ளடக்கங்களை ஒழுங்குப்படுத்துவது பற்றி தனது விருப்பமின்மையையும் கடந்த காலத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். இதனாலேயே இந்த உரிமையாளர் மாற்றம், அதன் உள்ளடக்கத்தின் தரத்தில் சரிவைக் கொண்டு வருமோ என்கிற கேள்வி
எழுந்திருக்கிறது. பிற சமூக ஊடக பெருநிறுவனங்கலைப் போலவே, ட்விட்டரும் தவறான தகவல்கள், டிரோலிங் போன்றவற்றால் நிகழும் துன்புறுத்தல், வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறைக்கான அழைப்புகள் போன்றவற்றை நிறுத்துவதில் கடுமையான பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மிக செல்வாக்கான, ஆனால் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடிய பயனரான அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பை தடை செய்தது டிவிட்டர். அவரது சில பதிவுகளை தவறான உள்ளடக்கம் அல்லது பிரச்சாரத் தொனி கொண்டது என்று குறிப்பிடத் தொடங்கியது. இந்தியப் பயனர்களைப் பொறுத்தவரையில், உள்ளடக்கங்களை கட்டுப்படுத்துவதற்கான இந்திய அரசின் முயற்சிகள், மேற்குறிப்பிட்ட சவால்களை இன்னும் கடுமையாக்குகிறது. இணையத்தின் குறுக்கீட்டுவிதிகளில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்திய அரசு இதை செய்ய நினைப்பது இன்னும் அச்சுறுத்தலான விஷயம். ஒழுங்குகள் பெரிதும் இல்லாத இன்னும் சுதந்திரமான வெளி பற்றி திரு.மஸ்க் பேசினாலும், டிவிட்டரை வாங்கியதிலிருந்து இன்னும் சிறந்த சுத்தமான வகையில் உள்ளடக்கத்தை ஒழுங்கு செய்வது பற்றி அவர் பேசி வருகிறார். பிரச்னைக்குரிய உள்ளடக்கங்களுக்கு தங்களது பொருட்களை கொடுப்பதில் விளம்பரதாரர்களுக்கு இருக்கும் எச்சரிக்கையுணர்வு இதற்கு காரணமாக இருக்கலாம். இது திரு.மஸ்க்கின் இன்னொரு வெற்று பேச்சாக இருக்குமோ என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் டிவிட்டர் தொடர்ந்து பொருட்படுத்தத்தகுந்த ஒரு தளமாக இருக்குமா என்பது உலகின் மிகப் பெரிய பணக்காரர் அந்த தளத்தில் நியாயமான, சுதந்திரமான பேச்சுரிமையை பாதுகாக்கும் பொருட்டு, அவருடைய வணிக நலன்களுக்குள் அதையும் அடைக்காமல், அரசுகளையும் நிறுவனங்களையும் எப்படி நடத்துகிறார் என்பதில்தான் இருக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE