கொலீஜியம் முறையிலான நீதித்துறை நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் பல நேரங்களில் தன்னிச்சையாக இருப்பதாகவும் வைக்கப்படும் பொதுவான குற்றசாட்டு, ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து இன்னொரு உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் விஷயத்தில் உண்மையாக இருப்பது போலத்தான் தெரிகிறது. கடந்த சில வருடங்களில் நடந்த பல இடமாற்றங்களில் சமீபத்திய இடமாற்றம் மீண்டும் இந்த பிரச்னையை முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த இடமாற்றப் பட்டியலில் தெலங்கானா உயர் நீதிமன்றத்திலிருந்து மூன்று நீதிபதிகளும் சென்னை மற்றும் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றங்களிலிருந்து தலா இரண்டு நீதிபதிகளும் இருந்தார்கள். ஆனால் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி நிகில்.எஸ்.கரியேலின் பெயர் அந்த பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இடமாற்றத்தை அந்த மாநிலத்தின் பார் கடுமையாக எதிர்த்திருந்தது. நீதிபதி கரியேல் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.அபிஷேக் ரெட்டி ஆகியோருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினார்கள். இரு மாநில பார் பிரதிநிதிகளையும் இந்திய தலைமை நீதிபதி சந்தித்தார். ஆனாலும் நீதிபதி கரியேலின் இடமாற்றம் மட்டும் நிகழவில்லை. பிற நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பாக அறிவிக்கை வெளியானது. நீதிபதி கரியேலின் இடமாற்றம் பற்றி குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தெரியாது என்கிற செய்திகளில் உண்மையிருந்தால், இடமாற்ற முன்மொழிவுகளின் சட்டப்பூர்வத்தன்மைக்கு அது உகந்ததில்லை. கொலீஜியம் ஒரு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை ஏற்று இன்னொரு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை நிராகரித்திருக்கிறது என்கிற மாதிரியான ஒரு தோற்றம் தந்தால், அது நல்ல செய்தி அல்ல. நாடு முழுவதிலும் திறமையாளர்கள் பரவியிருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் நீதி அமைப்பில் உள்ளூர் குழுக்கள் உருவாவதை தடுக்கவும் நீதிபதிகளின் இடமாற்றம் தேவைதான். ஆனால் இடமாற்றம் செய்யும் அதிகாரம் என்பது எப்போதும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு விடப்படும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. கொலிஜீயம் முறையின் கீழ்கூட, இடமாற்றம் என்னும் அச்சுறுத்தல் ஒவ்வொரு நீதிபதியின் தலையின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது என்கிற கருத்தை உடைப்பது கடினமாகவே இருக்கிறது. இடமாற்றத்தை செயல்படுத்த நீதிபதியின் ஒப்புதல் தேவையில்லை என்று நடைமுறைக் குறிப்பாணை தெளிவாக சொல்கிறது. எல்லா இடமாற்றங்களும் பொது நலனின் பொருட்டு இருக்க வேண்டும், அதாவது நாடு முழுவதும் நீதியின் சிறந்த நிர்வாகத்தின்
பொருட்டு இடமாற்றம் இருக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய நியதியாக இருக்கிறது. அதே நேரம், அவரது விருப்ப இடம் உள்ளிட்ட நீதிபதியின் தனிப்பட்ட காரணிகள் எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது. ஒவ்வொரு இடமாற்றத்திலும் இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என்று யாருக்கும் தெரியாது. தலைமை நீதிபதி தவிர்த்த பிற நீதிபதிகள், தலைமை நீதிபதியாக்கப்படாமல் வேறு மாநிலங்களுக்கு ஏன் மாற்றப்படுகிறார்கள் என்பது பெரும்பாலும் விளக்கப்படுவதில்லை. பொதுவாக இது, அந்த நீதிபதிக்கு எதிரான குற்றசாட்டுகள் அல்லது அவரது உத்தரவுகள் அரசுக்கு தரும் நெருக்கடிகள்தான் காரணமா என்பது போன்ற ஊகங்களுக்கு வழிவகுக்கின்றன. அசலான காரணத்தை வெளிப்படுத்துவது எப்போதும் சாத்தியமில்லை. ஆனால் இடமாற்றம் ஒரு தண்டனை நடவடிக்கையாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பான விதிகளை முழுமையாக மறு ஆய்வு செய்வதற்கான நேரம் இதுவாக இருக்கலாம்.
This editorial has been translated from English, which can be read here.
Published - November 28, 2022 11:12 am IST