Main Text: அரசியலமைப்பு நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் தனக்கு பெரிய பங்கு வேண்டுமென்று நினைக்கும் அரசு, அதை கோரும் விதத்தில் கடுமையாகவும் விரும்பத்தகாத வகையிலும் நடந்து கொள்கிறது. நீதிபதிகள் நியமன நடைமுறையில் நிர்வாகத்துக்கு பங்கு இருக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு எழுதியிருப்பது இதற்கான சமீபத்திய உதாரணம். இந்த நியமனங்களை தற்போது நீதிபதிகளின் கொலீஜியம்தான் கையாள்கிறது. அரசு பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு தேடுதல் மற்றும் மதிப்பீட்டு குழு உருவாக்கப்பட்டு, உயர் நீதிமன்ற கொலீஜியங்களிலும் உச்ச நீதிமன்ற கொலீஜியங்களிலும் இடம்பெற வேண்டியவர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டுமென்று அமைச்சர் விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் மத்திய அரசு பிரதிநிதியும் உயர் நீதிமன்ற கொலீஜியத்தில் மாநில அரசுகளின் பிரதிநிதியும் இருக்க வேண்டும் என்று அவர் கோரியிருப்பதாகவும் தெரிகிறது. நீதித்துறைக்கு எதிரான அதிகாரப்பூர்வ குற்றசாட்டுகளில் இந்த கடிதம் சமீபமானது. நீதித்துறை மீதான இந்த தாக்குதலில் முன்னணியில் இருக்கிறார் திரு. ரிஜுஜு. கொலீஜியம் நடைமுறையை கேள்விக்குட்படுத்துவதோடு அந்த அமைப்பில் உள்ள குறைகளை சரியாகவே கவனப்படுத்துகிறார். தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதை ரத்து செய்து அரசியல் சாசன அமர்வு அளித்த 2015ஆம் வருடத் தீர்ப்பு மீதுதான் அரசுக்கு கோபம் என்பதில் சந்தேகம் இல்லை. கொலீஜியம் முறையில் சீர்திருத்தம் தேவை என்பதில் நிறைய பேருக்கு மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால் நியமனங்களில் சீர்திருத்தம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு நீதித்துறைக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் மத்திய அரசின் நோக்கம் கேள்விக்குரியது.
அரசு எழுப்பியிருக்கும் சில பிரச்னைகளுக்கான பதில்கள் மிகவும் எளிமையானவை. நீதிமன்றமும் எதிர்கட்சிகளும்கூட அவற்றை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கின்றன. இன்னும் வெளிப்படையான சுதந்திரமான முறைக்கான தேவையை பூர்த்தி செய்ய ஒரு நடுநிலையான உத்தியை நிறுவவதற்கான புதிய சட்டத்தை அரசு இயற்றலாம். நீதித்துறையின் சுதந்திரத் தன்மையில் குறுக்கிடாத வகையில் அது இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தை திருத்தும் அப்படியொரு முயற்சி கைகூடும் வரையில் தற்போதிருக்கும் சட்டத்தின்படியே இது நடைபெற வேண்டும். அதாவது, கொலீஜியம் மூலமாக நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். அரசின் உத்திகள் கிட்டத்தட்ட மறைமுக எச்சரிக்கைகளாக இருக்கின்றன என்கிற தோற்றத்தை ஏற்படுத்தாமல் இல்லை. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் வேண்டுமென்றே செய்யப்படும் காலதாமதம், பலகட்ட மறுபரிசீலனைகளுக்குப் பிறகும் வலியுறுத்தப்படும் பெயர்களை நிராகரிப்பது மற்றும் நீதித்துறை என்ற அமைப்பின் சட்டபூர்வத்தன்மையைக் குலைக்க பரப்புரையை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மைக் காலமாக நீதித்துறை அரசின் அக்கறைகளுக்கு இணங்கிச் செல்கிறது என்ற நிலையில் நீதித்துறையை கட்டுப்படுத்த அரசு முயற்சி செய்வது வியப்பாகவே இருக்கிறது. இந்த நாட்டில் நீதிபதியாக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில் அரசு முழுமையான கட்டுப்பாட்டை விரும்புகிறது என்பது தவிர வேறு எப்படியும் இதை புரிந்து கொள்ள முடியாது. எந்தவொரு துறையும் மேலாதிக்கம் பெறுவதை தடுக்கும் தடுப்புகளைக் கொண்ட ஒரு அமைப்பு, ஜனநாயக செயல்பாட்டுக்கு மிகவும் தேவையானது.
This editorial was translated from English, which can be read here.
COMMents
SHARE