ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் மிக மோசமான உறவு நிலவுவது தவிர்க்க முடியாது. தீவிரமான கருத்து மாறுபாடுகளையும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் முன்னிறுத்தும் இது போன்ற உறவுகள் ஒரு வகையில் முக்கியமானவையும்கூட. சட்டமன்ற விவாதங்கள் மூலம் இணக்கம் ஏற்படும்போது ஜனநாயகம் தழைக்கும். ஆனால் இந்த மோசமான உறவுகளால் மக்கள் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் மோதல் ஏற்படுவதும், அதை தொடர்ந்து விவாதம் இல்லாத நிலையும் சட்டமன்ற நடத்தை பற்றிய மோசமான பிரதிபலிப்பாக இருக்கின்றன. ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் மிக மோசமான நிலைக்குச் சென்று, சட்டமன்ற அலுவல்கள் ஸ்தம்பித்திருக்கும் நிலையில் இது கேரளாவுக்கும் பொருந்தும். கடந்த வாரம் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி ‘விதி 50’ன் கீழ் நோட்டீஸ்களை அளித்து விவாதம் கோரியது. ஆனால், இது தொடர்பான விவாதத்திற்கு சபாநாயகர் தொடர்ந்து அனுமதி மறுத்ததை தொடர்ந்து எழுந்த இந்த விவகாரம் முழு அளவிலான மோதலாக உருவாகிவிட்டது. இதையடுத்து சட்டமன்றத்தில் அமளியை அடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. தற்போது சபாநாயகராக இருக்கும் ஏ.என். ஷம்சீரின் மறுப்புகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் சட்டமன்ற நடவடிக்கைகளை கேலி செய்வது அல்லது சபாநாயகருக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஆகியவை நியாயமற்றது என்று வழக்குத் தொடரலாம். ஆனால் முக்கியமான பிரச்னைகளில் விவாதம் நடத்துவதற்கான எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உரிமை மதிக்கப்படுவதையும் அனுமதிக்கப்படுவதையும் உறுதிசெய்யும் பொறுப்பு சபாநாயகருக்கும் ஆளும் முன்னணிக்குமே இருக்கிறது. விதி 50ன் படி அளிக்கப்படும் நோட்டீஸ்கள் மீதான விவாதங்கள் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுவதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது கடுமையான சட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் மோதலை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கின்றன என்பது தெளிவு. சட்டமன்ற நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ ஒளிப்பரப்புத் தளமான சபா டிவியில்
தங்களது உறுப்பினர்களுக்கு போதுமான இடம் கிடைக்கவில்லை என்கிற எதிர்க்கட்சியினரின் வருத்தத்திலும் அடிப்படை இருக்கிறது. திங்கள் கிழமையன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துக்களை நீக்கியதன் மூலம் ஒரு சமரசத்தை ஏற்படுத்த சபாநாயகர் முயற்சித்தார். “பொது முக்கியத்துவம் வாய்ந்த” விவகாரங்களில் விதி 50 நோட்டீஸ்களை அளிப்பதற்கான சிறப்புரிமை உள்ளிட்ட அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதாகவும், சட்டமன்ற ஒளிபரப்புத் தளம், கட்சி சார்பற்ற முறையில் நடந்து கொள்வதை உறுதி செய்வதாகவும்கூட அவர் எதிர்க்கட்சிகளுக்கு உறுதியளித்தார். கசப்பான சட்டமன்ற நடவடிக்கைகளை திரும்ப பெற்று, இயல்பான சட்டமன்ற விவாதங்கள் நடக்கும் இடத்துக்கு இட்டுச் செல்லும் ஒரு உரையாடலை தொடங்குவதற்கான அறிகுறியாக இது இரு தரப்பினருக்கும் இருக்க வேண்டும். சமூக பொருளாதார பிரச்னைகளில் இந்தியாவுக்கு வழிகாட்டும் ஒரு இடத்தில் கேரளா இருக்கிறது என்றாலும் சுற்றுசூழல் ரீதியாக அது வலிமையற்ற ஒரு மாநிலமாக இருப்பதால் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது. இதனால் வளர்ச்சிக்கும் சுற்றுசூழல் நிலைத்தன்மைக்கும் இடையில் ஒரு சமநிலையை கண்டடைய அது பணி செய்ய வேண்டும். பிரம்மபுரம் தீவிபத்து சம்பவம் சொல்லும் செய்தியும் இதுதான். எதிர்மறையானதாக இருந்தாலும் ஆரோக்கியமான உரையாடலும் யோசனைகள் பற்றிய விவாதங்களும் இடது ஜனநாயக முன்னணியை எச்சரிக்கையுணர்வுடன் வைத்திருப்பதன் மூலம் நல்லாட்சியை உறுதி செய்யும். சட்டமன்றத்தை பாரபட்சமின்றி நடத்துவதற்கான எதிர்க்கட்சிகளின் அழைப்புக்கு ஆளும் கூட்டணியும், அதன் நீட்சியாக முதலமைச்சரும் எப்படி பதிலளிக்கிறார்கள் என்பதுதான் மாநிலத்தின் இரண்டு முன்னணிகளுக்கும் இடையிலான உறவுகள் இயல்பு நிலைக்கு வருமா என்பதை தீர்மானிக்கும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - March 21, 2023 11:39 am IST