வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிக்க வீடுவீடாக கணக்கெடுப்பு நடத்த சிலுமே கல்வி கலாச்சார மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வது என்ற புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகேவின் (பிபிஎம்பி) முடிவு தாமதமான ஒன்று என்றாலும் தேவையான ஒரு முடிவு. தன்னார்வ தொண்டு நிறுவனம் நிபந்தனைகளை மீறியதாகவும் வாக்காளர் அடையாளம் பற்றிய தகவல்களை திரட்டுவதற்கு அதற்கு அனுமதி இல்லை என்றும் சொல்லியிருக்கிறது பெங்களூரு மாநகராட்சி அமைப்பான பிபிஎம்பி. பிபிஎம்பி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் வாக்காளர் தரவுகளைச் சேகரித்ததாகவும் அந்தத் தரவுகளை ஒரு செயலியில் சேமித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாக்காளர்களைப் பொறுத்தவரையில் பிபிஎம்பிதான் தகவல்களை திரட்டியதாக நம்பும் அளவுக்கு இருந்த தன்னார்வ அமைப்பின் அபாண்டமான போக்கை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவின் மிகப்பெரிய மாநகரங்களில் ஒன்றான பெங்களூருவில் மாநகராட்சி எவ்வளவு திறனற்றதாகவும் அக்கறையற்றதாகவும் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆதார், தொலைபேசி எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற சேகரிக்கப்பட்ட தகவல்கள், எளிதாக கட்சிகள் பயன்பாட்டுக்கு வழங்கப்படலாம். தவிர, வாக்காளர்களின் சுயவிவரங்கள் மற்றும் தரவுத் தொகுப்பை கட்டமைக்கவும் உதவும். குறிப்பாக பிளவுப்படுத்தும் அரசியலை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு இந்த தரவுகள் மிகத் தேவையாக இருக்கும். காரணம், பலதரப்பட்ட மக்கள் தொகை கொண்ட இடங்களையும் குறிப்பிட்ட சமூகங்களையும் எளிதில் இலக்காக இந்தத் தரவுகள் உதவுகின்றன. பிபிஎம்பியின் நோக்கம் வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிப்பது மட்டும்தான் என்றால் அதற்காக ஒரு மூன்றாம் தரப்பு அரசு சாரா அமைப்புக்கு அந்த பொறுப்பை தர வேண்டிய அவசியமில்லை. சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகள் உடனடியாக அழிக்கப்படுவதையும் தன்னார்வ அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதையும் மாநகராட்சி உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவில் தரவு பாதுகாப்பு சட்டம் இல்லாததும், அரசின் மிக சமீபத்திய வரைவு மசோதா அரசு தரவுகளை தவறாக பயன்படுத்துவதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்பதும், இந்த நிலையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்திருக்கின்றன. சமீபத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வட்டார அதிகாரிகள் தனி நபர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வலியுறுத்தியதாகவும் அப்படி செய்யவில்லையென்றால்
அவர்களது வாக்காளர் அட்டை ரத்து செய்யபடலாம் எனவும் சொன்னதாக செய்திகள் வருகின்றன. வாக்களிக்கும் தகுதியை நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட சான்றுகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று சட்டப்பூர்வமாக சொல்லப்பட்ட காரணத்தால், கட்டாய இணைப்பு தவறான ஒன்றாக இருக்கிறது. இருப்பிடச் சான்றை உறுதிப்படுத்த ஆதார் எண்ணை பயன்படுத்துவது தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதை எளிதாக்குகிறது. அதே போல வாக்காளர் அடையாள அட்டை நகலெடுக்கப்படுவதையும் தவிர்க்கிறது. ஆனால் அதே நேரம், ஆதார் பயோமெட்ரிக் உறுதிப்பாடு எந்த பிழைக்கும் இடம் தராத முறை என்று சொல்ல முடியாது என்கிற காரணத்தால், அசலான வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயமும் இருக்கிறது. தேர்தல் ஆணையம் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பதும், அந்தந்த தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களை அணுகுவதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்து புதுப்பிக்குமாறு வாக்காளர்களுக்கு நினைவூட்டுவதும்தான் சிறப்பான விஷயமாக இருக்க முடியும். அதற்கு பதிலாக, எளிதான தொழில்நுட்ப திருத்தங்கள் அல்லது மூன்றாம் தரப்பிடம் வேலையை ஒப்படைப்பது போன்ற செயல்கள் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உதவாது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE