திருமணமான பெண்களுக்கு இருப்பது போலவே திருமணமாகாத, தனித்து வாழும் பெண்களுக்கும் மருத்துவரீதியிலான பாதுகாப்பான கருகலைப்பு செய்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பது, சட்டத்தின் எழுத்து வடிவத்திற்கும் அதனை அமல்படுத்துவதற்கும் இடையில் உள்ள முரண்பாடை சரி செய்யும் ஒரு தேவையான நடவடிக்கை. அரசியல் சாசனம் உறுதியளிக்கும் சம உரிமை, மாண்பு, தனியுரிமை, பெண்களுக்கான உடல்ரீதியான சுதந்திரம் ஆகியவற்றுக்கான உரிமையின் அடிப்படையில், 20 வார கருத்தரிப்புக்கு பின்னர் ஆனால் 24 வாரங்களுக்கு முன்னர் கருக்கலைப்பை நாடும் பெண்களில் தனியாய் வாழும் அல்லது திருமணமாகாத பெண்களை விலக்குவதற்கு எந்த அடிப்படைக் காரணமும் இல்லை என்று சொல்லியிருக்கிறது நீதிமன்றம். விருப்பத்துடன் உறவில் இருந்த, ஆனால் காதலர் திருமணம் செய்ய மறுத்ததால் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று கோரிய 25 வயது பெண்ணின் கருக்கலைப்புக்கு தடை விதித்திருந்தது தில்லி உயர்நீதிமன்றம். அவர் திருமணமாகாதவர் என்பதாலும் விருப்பத்துடனேயே கரு உண்டாகியிருக்கும் என்பதாலும் விதித் திருத்தங்களின் கீழ் அவர் கருக்கலைப்புக்கு தகுதியற்றவர் என்று சொல்லப்பட்டது. கருக்கலைப்புக்கு தகுதியானவர்களாக விதி 3B சொல்லும் பட்டியலில் – பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்கள், வயது குறைந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மன நலன் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் – விருப்ப உறவில் கருவுறும் தனித்து வாழும் பெண்கள் இடம் பெறாததால் உயர் நீதிமன்றம் அதனடிப்படையில் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இந்த விதிகளுக்கான நோக்கம் என்ன என்பதை நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. கருக்கலைப்புக்கான அதிகபட்ச காலக்கெடுவாக 24 வாரங்களை அனுமதிப்பதற்கு “திருமண உறவுநிலையில் ஏற்படும் மாற்றம்” ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறது. பெண்ணின் சூழ்நிலைகளில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதால், காதலரால் கைவிடப்படுவது, குழந்தையை பெற்றுக் கொள்வது என்று முதலில் எடுத்த முடிவை பாதிக்கும் சூழ்நிலை மாற்றமாக கருதப்படலாம் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. கருவை சுமப்பது அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அல்லது அவரது உடல்நலனுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவர் கருத்து தெரிவித்தால் 24 வாரங்கள் வரையில் கருக்கலைப்பு செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது. இங்கும் நீதிமன்றம் ஒரு நோக்கத்தை காரணமாக முன் வைக்கிறது. தேவையற்ற கருத்தரிப்பு, ஒரு பெண்ணின் உடல் மற்றும் மன நலன் சார்ந்து பிரச்னைகளை தரும் என்பதால் கருக்கலைப்பு செய்து கொள்ளும் முடிவை அந்த பெண் மட்டுமே எடுப்பது மிக முக்கியம் என்பதை தெளிவுப்படுத்தியிருக்கிறது. இந்த வழக்குக்கு தொடர்பில்லாத ஒரு கேள்விக்கு பதிலளித்த நீதிமன்றம், நீட்டிக்கப்பட்ட காலவரையறைக்குள் கருக்கலைப்பை நாடும் பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்கள் என்பது, திருமண உறவுக்குள்ளான பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து என்று சொல்லியிருக்கிறது.
இன்னும் குற்றமாக கருதப்படாத திருமண உறவுக்குள்ளான பாலியல் வல்லுறவில் உருவாகும் கருவை கலைப்பதும் இந்த விதியின் கீழ் வருமா என்பது போன்ற கேள்விகள் எழாமல் நீதிமன்றத்தின் இந்த பார்வை தடுக்க உதவும். தாய்மார் இறப்பு விகிதத்திற்கு முக்கியமான ஒரு காரணமாக பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் இருக்கும் ஒரு நேரத்தில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகளின் தேவையை கூடுதலாக முன்னிறுத்த உதவும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE