முன்னெப்போதும் இல்லாத வகையில், பாலின வித்தியாசமின்றி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் அமர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வினேஷ் போகட், சஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் இந்தியாவின் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் ப்ரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் அமர்ந்தனர். ப்ரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார் வினேஷ். தான் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று யோசித்ததாகவும்கூட கூறினார். மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்பதை சாக்ஷியும் புனியாவும்கூட சுட்டிக்காட்டினார்கள். சம்மேளனம் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்திருக்கிறது. சம்மேளனத்திற்குத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ‘ஹரியானா லாபி’ ஒன்று தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயல்வதாகச் சொன்னார்கள். உத்தரப்பிரதேசத்திலிருந்து பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் ப்ரிஜ் பூஷன் இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவருகிறார். ஆனால், பாதிக்கப்பட்ட வீரர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததோடு, இன்னொரு நாளும் போராட்டத்தில் அமர்ந்தார்கள். விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரோடு தொடர்ந்து பேச்சு வார்த்தைகளும் நடந்தன. இப்போதைக்கு கடுமையான குற்றச்சாட்டுகள், அதற்கான மறுப்புகள் என விவகாரம் சென்றுகொண்டிருந்தாலும் இந்தியாவின் விளையாட்டு அமைப்பில் இருக்கும் அடிப்படையான பிரச்சனைகளை இந்த விவகாரம் சுட்டிக்காட்டியிருக்கிறது. பெரிதும் ஆண் மையச் சிந்தனை கொண்ட ஒரு நாட்டில், கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு வீராங்கனை தனது குடும்பத்திற்கு வெளியே பழகும் முதல் ஆணாக பயிற்சியாளரோ அல்லது விளையாட்டு நிர்வாகியோதான் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை தகர்க்கப்படும்போது, அந்த வீராங்கனை பெரும் அச்சம் கொள்கிறார்.
ஒரு பயிற்சியாளருக்கும் விளையாட்டு வீரருக்கும் இடையில் இருக்க வேண்டிய பரஸ்பர மரியாதை அடிப்படையிலான உறவு சில தருணங்களில் அமைகிறது என்றாலும் சுரண்டல் குறித்த கதைகளும் அவ்வப்போது வெளியில் வருகின்றன. இந்த அதீதமான மௌனம் கலைய வேண்டும். பதக்கங்களை வென்ற, புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் அதற்கான முதலடியை எடுத்து வைத்திருக்கிறார்கள். தற்போது விளையாட்டுத் துறை அமைச்சரால் அமைக்கப்பட்டிருக்கும் மேற்பார்வைக் குழு இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும். இந்தக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஒலிம்பிக் வீராங்கனை மேரி கோம், இரு தரப்பையும் அமைதிப்படுத்த வேண்டும். மேரி கோமும் அவருடைய சக உறுப்பினர்களும் அனுதாபத்துடன் நடந்துகொள்ளும் அதே நேரத்தில் உண்மையைத் தீவிரமாகக் கண்டறிய வேண்டும். ப்ரிஜ் பூஷன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பது ஒரு அழுத்தமாக மாறிவிடக் கூடாது. சம்மேளனத்தின் தினசரி நடவடிக்கைகளில் இருந்து தலைவரை விலகியிருக்கச் சொல்லியிருப்பதன் மூலம், விளையாட்டு அமைச்சகம் சரியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இந்தியாவின் விளையாட்டு நிர்வாக அமைப்பில் எல்லாக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். விளையாட்டின் மூலம் கிடைக்கும் மென் அதிகாரம் காரணமாகவும் அதனால் உருவாகும் நல்லெண்ணத்தின் காரணமாகவும் பெரும்பாலான விளையாட்டு அமைப்புகளின் முக்கியப் பொறுப்புகளில் அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். இந்த சம்மேளனங்களுக்குள் அவர்கள் செலுத்தும் அதிகாரமும் புதுதில்லியோடு அவர்களுக்கு உள்ள தொடர்புகளும் ஒரு இறுக்கமான சூழலை உருவாக்குகின்றன. மல்யுத்த வீரர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரத்துடன் முன்வைக்க வேண்டும். இந்த சமீபத்திய விவகாரம் நிர்வாகத்தை தூய்மைப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE