மதுரை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த பல ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். துரதிருஷ்டவசமானது என்றாலும் இது எதிர்பாராதது இல்லை. மூன்று வருட கால தடை மற்றும் மிகப் பெரிய போராட்டத்திற்கு பின்னர் ஜனவரி 2017ல் மீண்டும் ஜல்லிக்கட்டு தொடங்கப்பட்டதிலிருந்தே, பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய விலங்குகள் நல வாரியத்தின் தரவுகளின்படி, 2008ஆம் ஆண்டு முதல் 2014 வரை 43 பேர் இறந்திருக்கிறார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். தற்போதைக்கு மனித உயிரிழப்பு ஒன்றுகூட நடக்கக்கூடாது என்பதுதான் அடைய முடியாத இலக்காக இருக்கிறது. இதில் விலங்குகளின் அவலநிலை பற்றி பேசவே வேண்டாம். 2017ஆம் வருடத்தின் விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டத்தின் செல்லுபடித்தன்மை பற்றி கேள்வியெழுப்பும் பல மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது. ஆனால் நவம்பர் இறுதியில் அரசியல் சாசன அமர்வு தெரிவித்த கருத்துகளை ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திருத்தம் பற்றிய வாதங்களை விசாரிக்கும்போது, “ஜல்லிக்கட்டு தன்னியல்பில் கொடூரமான விளையாட்டு இல்லையென்றாலும் அதை அரசு நடத்தும் விதம் கொடூரமாக இருக்கலாம்” என்று அது சொன்னது. ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டாக பார்க்கும் அதன் ஆதரவாளர்கள், காயம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிற குத்துசண்டை அல்லது கால்பந்து போன்ற விளையாட்டுகளில் கடைபிடிக்கப்படும் தர்க்கத்தை ஜல்லிக்கட்டுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று வாதிடுகிறார்கள். தவிர, விபத்துகள் நிகழ்வதால் மட்டும் இந்த இரண்டு விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும் என்று யாரும் கோருவதில்லை. அதே அளவுகோலின் படி பண்பாடு, பாரம்பரியம், வீரம் ஆகிய காரணங்களுக்காகவும் நியாயப்படுத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கும் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழக்கூடாது என்கிறார்கள் அவர்கள். ஆனால் கால்பந்து, குத்துச்சண்டை அல்லது கார் பந்தயம் போன்ற விளையாட்டுகள் மனிதர்களையே மையமாகக் கொண்டது.
ஜல்லிகட்டில் அப்படியில்லை என்பது பெரும்பாலும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதே நேரம், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிகாரிகள் விதிகளை கடுமையாக்கியிருக்கிறார்கள் என்பது ஆறுதலான ஒரு விஷயம். 21 இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் மதுரை மாவட்டத்தில், காளை உரிமையாளர்கள் மிகவும் பிரபலமான மூன்று இடங்களில் ஒன்றை மட்டுமே ஆன்லைன் பதிவு வழியாக விளையாட தேர்வு செய்ய முடியும். அதாவது அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் எதாவது ஒரு இடத்தில் மட்டுமே விளையாட முடியும். திருச்சியில் ஒவ்வொரு நிகழ்விடத்திலும் 700 மாடுகளுக்கு மேல் களமிறக்க முடியாது. விளையாட்டில் பங்கு பெறும் ஒவ்வொருவரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து மாநில கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்பிடி மற்றும் மீனவர் நலத்துறை டிசம்பரின் பிற்பகுதியில் விரிவான வழிகாட்டுதலை வெளியிட்டன. விரிவானதாகவே அவை இருந்தாலும், கடுமையான தண்டனை விதிகளையும் அவை கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பார்வையாளர்கள் மத்தியில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் அதிகாரிகள் கவனம் செலுத்தி அவர்களை தாண்டிச் செல்ல முடியாத தடுப்புகளுக்கு பின்னால் நிறுத்தியிருக்க வேண்டும். கூடுதலாக, இளைஞர்களை கவர, கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற விலையுர்ந்த பரிசுகளை வழங்கும் நடைமுறையையும் அரசு கைவிட வேண்டும். ஜல்லிக்கட்டு வலிமையையும் வீரத்தையும் பறைசாற்றும் ஒரு ஆட்டமாகவே இருந்திருக்கிறது. உயிருக்கும் உறுப்புகளுக்கும் ஏற்படும் ஆபத்துகளை புறக்கணிப்பதற்கான ஒரு ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த பரிசுகள் இருக்கக்கூடாது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE