பத்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தி சொல்ல வேண்டியதில்லை. இந்திய மக்கள் தொகையின் அடிப்படை மக்கள் தொகையியல், எழுத்தறிவு நிலை, சாதி நிலை, கல்வி நிலை, பேசும் மொழிகள், மதம், திருமண நிலை, தொழில் மற்றும் இடம் பெயர்வு நிலை போன்ற பல அம்சங்களைப் பற்றிய தரவுகளை இது கணக்கிலெடுப்பதால், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நிர்வாக செயல்பாடுகளுக்கும் நலத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் அத்தியாவசியமாக இருக்கிறது. முழு மக்கள் தொகையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற மாதிரி கணக்கெடுப்புகளுக்கான அடிப்படைகளை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படுவதால் அதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகள் மிக முக்கியம். உலகின் மக்கள் தொகையை கணிக்கவும் சர்வதேச நிறுவனங்கள் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்துகிறார்கள். 1881ஆம் வருடத்திலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2021 ஆம் வருடத்தில் மட்டுமே இந்த கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டு, விதிவிலக்காக இருந்தது. எல்லைகளை முடக்குவதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பிறகு சில மாதங்கள் கழித்தே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பாக வீட்டு பட்டியல் தயாரிப்பு போன்ற நடவடிக்கைகளும் நடை பெறும். கோவிட்-19 தொற்றுநோய் தாக்குவதற்கு முன்பு 2020ஆம் வருடத்தின் தொடக்கத்தில் இதை தொடங்குவதற்கு பெரும்பாலான மாநிலங்கள் தயாராக இருந்தன. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதும் அதன் விளைவாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குவதில் ஏற்படும் தேவையற்ற தாமதமும் மாவட்ட மட்டத்திலும் அதற்கும் கீழ் உள்ள மட்டங்களிலும் மக்கள் தொகை எண்ணிக்கைகள் குறித்த முக்கிய தகவல்கள் கிடைப்பதை கடுமையாக பாதிக்கும்.
இந்தத் தாமதத்துக்கான ஒரு காரணமாக கோவிட் தொற்று முன் வைக்கப்படுகிறது. ஊரடங்குகளும் தனித்திருத்தலும் இப்போது கடந்து போன ஒரு விஷயமாக இருப்பதையும், 2022 தொடக்கத்தில் ஓமிக்ரான் மாறுபாடு அலை ஏற்பட்டதிலிருந்து நாட்டில் ஒப்பீட்டளவில் தொற்று குறைவாக இருப்பதையும் வைத்துப் பார்க்கும்போது, இது சரியான காரணம் இல்லை என்பதை உணர முடியும். சொல்லப்போனால், மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகள், கோவிட்-19 தொற்று நோயின் போது ஏற்பட்ட “அதிகப்படியான மரணங்களின்” அடிப்படையில் இறப்பு விகிதம் குறித்த பல்வேறு மதிப்பீடுகளை சரிபார்க்க உதவும். தவிர, பல பத்தாண்டுகளாக இந்தியாவின் மக்கள்தொகையியலில் ஏற்பட்டுள்ள நகர்மயமாதல் மற்றும் மாநிலங்களுக்கிடையிலான மக்களின் புலம்பெயர்வு தொடர்பான பல பத்தாண்டுகளாக நடந்து வரும் மாற்றங்கள் ஆகியவற்றை போதுமான அளவில் பதிவுசெய்ய வேண்டியதும் அவசியம். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோகத் திட்டம் போன்ற பல நலத்திட்டங்கள் மக்கள் தொகை மதிப்பீட்டைப் பொறுத்தவைதான். தற்போது காலாவதியாகிவிட்ட 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பைதான் இதற்காக அரசு இப்போதும் நம்பியிருக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களில் மாநிலங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள், தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்வது மற்றும் மாநிலங்கள் முழுவதும் இடங்களைப் பகிர்வது குறித்த விவாதங்கள் மீது தாக்கத்தை செலுத்தும். மேலே சொன்ன விஷயங்களைக் கருத்தில் கொண்டும், நிர்வாக, சமூக நலம், புள்ளிவிவர மேலாண்மை ரீதியில் சுமூகமாக திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் உள்ள தேவைகளைக் கருத்தில் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்குவதில் மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE