தேர்தல் அறிக்கைகளில் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கான நிதி ரீதியான தாக்கங்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன் வைத்திருக்கும் கருத்து, தேர்தல் பரப்புரைகளுக்கு ஒரு அர்த்தத்தையும் ஆழத்தையும் தரும். நிதிக் கருவூலத்தில் குறிப்பிடத்தகுந்த வெளியேற்றத்தைக் கோரும் சேவைகள் அல்லது பொருட்களை வழங்குவதன் நிதிரீதியான அடிப்படைகள் பற்றி வாக்காளர்களிடம் அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என்பது 2015லிருந்து தேர்தல் நடத்தை விதிகளில் இருக்கிறது. ஆணையம் தற்போது அப்படி வெளியிடுவதற்கான முறையான படிவம் வேண்டும் என்கிற கருத்தை முன் வைக்கிறது. அரசியல் கட்சிகள் இதை ஏற்றுக் கொண்டு, தேர்தல் நடத்தை விதிகளில் இது இணைக்கப்படும் என்றால், ஒரு குறிப்பிட்ட வாக்குறுதி எந்தவொரு மக்கள் குழுவுக்கு அளிக்கப்படுகிறதோ, அந்த மக்கள் குழுவுக்கு அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உள்ள நிதி தேவை, எவ்வளவு தூரம் அது வழங்கப்படும், எத்தனை பேருக்கு அது வழங்கப்படும் என்பதையெல்லாம் விளக்க வேண்டும். அதற்கு தேவையான வளங்கள் எப்படி திரட்டப்படும் என்பதையும் சொல்ல வேண்டும். அவர்கள் தரும் வாக்குறுதி எப்படிப்பட்ட நிதிரீதியான சவாலை முன் வைக்கும் என்பதை கட்சிகளுக்கு உணர்த்துவதற்கு, நிதிநிலை அறிக்கையின் வருவாய் வரவுகள் மற்றும் செலவினங்களையும் நிலுவையில் உள்ள கடன் பற்றிய விவரங்களையும் வெளியிட மத்திய மற்றும் மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றன. இந்த தகவல்கள், ஒரு வாக்குறுதி நிதி ரீதியாக நிறைவேற்றப்பட கூடியதா என்பதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளை மதிப்பிடுவதற்கு வாக்காளர்களுக்கு உதவும் என்று நம்பப்படுகிறது. இதனால் தேர்தல் அறிக்கை தயார் செய்வதை வாக்காளர்களை கவரும் ஒரு செயற்பாடாக இல்லாமல் அவர்களை இணங்கச் செய்யும் ஒரு பொறுப்பான நடவடிக்கையாக பார்க்க கட்சிகளுக்கும் உதவும்.
இதனால் அரசியல்வாதிகளில் சில பிரிவுகளில் மனக்கசப்பு இருக்கவே செய்யும். வாக்குறுதிகளின் அடிப்படையில் அதிகாரத்துக்கு வரும் கட்சியின் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான பொறுப்பு என்பதால், தேர்தல் அறிக்கைகளை உருவாக்குவதில் உள்ள சிற்சில விஷயங்களில், குறிப்பாக அதை நடைமுறைப்படுத்துவதில் தேர்தல் ஆணையம் தலையிடக் கூடாது என்று வாதிடலாம். ஆனால் 2013ல் ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த வழிகாட்டுதல் உருவானது. நுகர்வோர் பொருட்களின் வினியோகம் என்றாலும் கூட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டிய தீர்ப்பு அது. அப்படி வினியோகிப்பது ஊழல் என்று சொல்ல முடியாது என்றும் சட்டமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதிநிலை ஒதுக்கீடுகள் இருக்கும் வரை அவற்றை செல்லத்தகாதது என்று சொல்ல முடியாது என்றும் அந்த தீர்ப்பு சொன்னது. அதே நேரம் தேர்தலில் சமமான போட்டியை மறுக்கும் பிரம்மாண்டமான வாக்குறுதிகளை தடுக்க, தேர்தல் ஆணையம் சில வழிகாட்டுதல்களை ஏற்படுத்தலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. செயல்படுத்தப்படும் போது, ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து போதிய தகவல்களை பெற முடியவில்லை. வழக்கமான, தெளிவற்ற நிலையிலேயே கட்சிகள் வெளிப்படுத்திய தகவல்கள் இருந்தன. இந்த வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தினால் விரிவான நிதிரீதியான தகவல்கள் வெளியிடப்படுவது, வாக்காளர்களின் தேர்வுக்கு உதவும். காரணம், எதிர்கட்சிகள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை கடும் கண்காணிப்புக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தும். ஒரு முக்கியமான வாக்குறுதியின் அடிப்படையில் வாக்காளர்களை கவர்ந்திழுத்து ஒரு கட்சி வெல்லும் வாய்ப்பில் அது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இன்னும் அர்த்தம் வாய்ந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
This editorial has been translated from English, which can be read here.