எளிமையாக வைத்திருங்கள் 

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக இணைப்பது பிரச்னைக்குரியது.

August 25, 2022 11:38 am | Updated 11:43 am IST

பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது தேர்தல்களை தொடர்ச்சியாக நடத்தி வருவதும் அதில் ஒப்பீட்டளவில் வாக்காளர் பங்களிப்பு அதிகமிருப்பதும் இந்திய ஜனநாயகத்தின் தெளிவான வெற்றிகளுள் ஒன்று.  மின்னணு வாக்குப்பதிவு கருவிகளால் தேர்தல் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது போக, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவுக்காக முன்னெடுக்கும் முயற்சிகளும் தேர்தல்களில் வாக்காளர் எண்ணிக்கை அதிகம் இருக்க காரணமாக இருக்கிறது. நகரப் பகுதிகளில் புலம்பெயர்ந்தோர் மக்கள் தொகை அதிகரிப்பது, வாக்களிக்க தகுதியுடையவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் மக்கள் தொகை மாற்றம், வயதானவர்களின் மரணம் போன்ற காரணங்களின் பொருட்டு குறிப்பிட்ட கால அளவுகளில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் தொடர்ச்சியான தேர்தல்கள் காரணமாக இந்த செயல்முறையில்  ஒரு ஒழுங்கு ஏற்பட்டு, வாக்காளர்கள் அவர்களது வயது சான்று மற்றும் தற்போது வாழுமிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பதிவு செய்ய முடிகிறது. பள்ளிக்கல்வி பயிலும் மக்கள் தொகை அதிகரித்திருப்பதாலும், பல்வேறு அடையாள அட்டைகளில் தங்களது முகவரிகளை பெரும்பாலான இந்திய குடிமக்கள் தெரிவிக்க வேண்டியிருப்பதாலும், வாக்களிக்க பதிவு செய்வது ஓரளவு எளிதான நடைமுறையாகவே இருந்து வருகிறது. அதனாலேயே சில செய்திகளில் சமீபத்தில் சொல்லப்பட்டிருப்பது போல ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கச் சொல்லி தேர்தல் அதிகாரிகள் குடிமக்களை கட்டாயப்படுத்துவது ஏன் என்கிற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் போன்ற தவறுகளை தடுக்கும் பொருட்டு ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட (திருத்த) மசோதா டிசம்பர் 2021இல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசும் பின்னர் தேர்தல் அதிகாரிகளும் இது விருப்பத்தின் பெயரில் செய்யலாம் என்றும் கட்டாயம் இல்லை என்றும் அறிவித்தார்கள்.

ஆதார் எண் குடியுரிமைக்கான சான்று இல்லை. இந்தியாவில் தங்கியிருக்கும் யாருக்கும் அது கொடுக்கப்படலாம். ஆனால் இந்தியாவில் தங்கியிருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே வாக்களிக்க முடியும்.   குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆதார் எண்ணுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பதன் மூலம் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வதென்பது பிழைகளுக்கு அப்பாற்பட்ட முறை இல்லை. வாக்காளர் பட்டியலில் உள்ள மக்கள் சுயமாக சுட்டிக்காட்டும் தவறுகளை விட ஆதார் தளத்தில் அதிக தவறுகள் இருப்பதாக தரவுகளுடன் சுட்டிக்காட்டியிருக்கிறது Internet Freedom Foundation என்கிற அமைப்பு. ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதன் மூலம் சமீபத்தில் தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேச சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது போல வாக்களிக்க தகுதியுடையவர்களின் பெயர்கள் பெரிய அளவில் நியாயமற்ற முறையில் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தவிர தற்போது ஆதார் எண்ணை வைத்து பல்வேறு சேவைகளை பெறலாம் என்கிற நிலையில் அதை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தால்  வாக்குச்சாவடி அளவில் தரவுகள் சேகரிக்கப்படும் போது, சில அமைப்புகள் அதை தவறாக பயன்படுத்தி தகவல்களை பெற்று அதனடிப்படையில் வாக்காளர்களை  வகைப்படுத்தலாம். தரவுகளை பாதுகாக்கும் சட்டமும் இல்லை என்பதால் இப்படிப்பட்ட முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பல்வேறு நாடுகளில் உள்ள தேர்தல் முறைகளை ஆய்வு செய்யும் அறிஞர்கள் இந்தியாவில் தேர்தல் நடைமுறையிலுள்ள எளிமையும், இந்திய தேர்தல் ஆணையம் போன்ற  அரச அமைப்புகள் திறமையாக செயல்பட்டு வாக்களிப்பதை எளிமையாக்கியிருப்பதையும் சுட்டிக் காட்டி அதனாலேயே தேர்தல் ஜனநாயகமாக இந்தியா தனித்த சிறப்புடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று கோருவது இந்த நியதிகளின் முக்கியத்துவத்தை குறைக்கிறது. ஏற்கனவே உள்ள அடையாளங்களை வைத்து வாக்காளர் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதோடு இந்திய தேர்தல் ஆணையம் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆதார் எண் இணைப்பு விருப்பத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.

This editorial in Tamil has been translated from English which can be read here.

Top News Today

Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.